https://www.jeyamohan.in/113975#.W8FehnszbIU
ஜெ
எப்போதுமே யானையின் உடல்மொழியையும் அதன் மனநிலையையும் விவரிப்பதில் உங்களுக்கு
ஒரு தனித்திறமை உண்டு. விஷ்ணுபுரம் வாசித்து எட்டு ஆண்டுகளாகின்றன. இன்றைக்கும் ஞாபகத்தில்
நின்றிருப்பது அதிலுள்ள அங்காரகன் என்ற யானையும் கொல்லப்படும் சின்ன யானையும்தான்.
அந்தக்காட்சிகளை அப்படியே கண்முன்னால் பார்ப்பதுபோல இருந்தது.
யானையை ரசிப்பது என்பது அதன் gait ஐ மெய்மறந்து ரசிப்பதுதான். சுபகத்தின் கம்பீரமும்
அதற்கும் காட்டுக்கும் இருக்கும் உறவும் ஆழமாகச் சொல்லப்பட்டுள்ளன. அதன் ஒவ்வொரு செய்கையையும்
காட்சிரூபமாகவே சொல்கிறீர்கள். ஆகவே அது ஒரு கனவில் மிக நெருக்கமாகப் பார்த்ததுபோன்ற
உணர்வை எழுப்புகிறது. சுபகம் மறக்கமுடியாத யானை.
ஒரு சின்னச்சிறுகதை இந்த அத்தியாயம். சிறுகதைக்குள்தான் இத்தனை கச்சிதமான வர்ணனைகள்
வரமுடியும். யானையின் செவிகளும் துதிக்கையும் எப்படிச் செயல்படுகின்றன என்பதை என்னைப்போல
ஒரு யானைக்கிறுக்கனால்தான் அவ்வளவு ரசிக்கமுடியும் என நினைக்கிறேன்.
யானையை வளர்க்கக்கூடாது என்று சொல்வார்கள். நானும் அதற்கு ஆதரவுதான். ஆனால்
யானையை வளர்க்கமுடியாவிட்டால் நம்மால் எப்படி யானையை இத்தனை நுணுக்கமாகப் பார்த்து
ரசிக்கமுடியும் என்றும் நினைத்துக்கொள்வேன்
ஆனந்த்