Tuesday, October 2, 2018

வெண்முரசின் கட்டமைப்பு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

என் பெயர் நாகராஜன். பெங்களூரில் ஒரு பொறியியல் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கல்லூரி நாட்கள் முதல் இலக்கியம் படித்து வருகிறேன்நான் உங்களது நெடுநாள் வாசகன். வெண்முரசை தொடர்ந்து படிக்கிறேன். இது உங்களுக்கு எழுதும் முதல் கடிதம்

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. எந்த ஆசாரத்தையும் நான் பின்பற்றுவதில்லை. நான் ஒரு ராஷனலிஸ்ட். நான் வெண்முரசு வாசிப்பதன் காரணம் அதன் நவீன தன்மை. மகாபாரதக்கதையை நீங்கள் சரியாக சொல்கிறீர்களா, பெயர்கள் உச்சரிப்புகள் சரியாக உள்ளதாநிகழ்வுகளுக்கு மரபார்ந்த விளக்கங்கள் அளிக்கப்படுகின்றனவா என்று சரிபார்த்து அளவிடும் ஒரு கூட்டத்தை கவனித்து வருகிறேன். உங்கள் தளத்தில் கூட நிறைய கடிதங்கள் இந்தத் தொனியில் இருக்கிறது. இவர்களுடைய குறிக்கோள் தாங்கள் முன்னதாகவே நம்பும் ஒரு தரப்புக்கு வெண்முரசு வலுசேர்க்கிறதா என்று பார்க்க. அல்லது ஆசிரியரின் குறைகளை சுட்டிக்காட்டி அதில் ஒரு சின்ன சுயஇன்பத்தை அனுபவிக்க. இவை இரண்டும் இல்லையென்றால் அன்றைய அத்தியாயத்தின் உதிரி தத்துவங்களை ஹெரோயின் போல ரத்தத்தில் ஏற்றிக்கொண்டு புளங்காகிதம் அடைந்து மெய்சிலிர்க்கஇந்தவகை வாசிப்புகள் எல்லாமே மிகச்சிறிய அளவிலானவை. வெண்முரசு போன்ற ஒரு நாவல் வரிசையின் பிரம்மாண்டத்தையும், அதன் அமைப்பை கட்டமைக்கும் சவாலையும் கிஞ்சித்தும் உணராதவை

கட்டிடவியல் கலையில் ஒரு கட்டிடம் என்பது இடம், அல்லது வெளி, விடும் சவாலை சரியான முறையில் எதிர்கொள்ளும் ஒரு solutionனாகக் கருதப்படுகிறதுஒரு நாவலின் கட்டமைப்பும் அதே மாதிரியானது. (வரலாற்றுக்)காலம், (புவி)இடம், (தத்துவ)கருத்துவெளி என்ற மூன்று அலகுகள் விடும் சவாலை எதிர்கொள்ள கற்பனை என்ற நிலத்தில் ஒரு solutionனாக எழுப்பப்படும் கட்டிடம் தான் நவீன வடிவான நாவல். உதாரணத்துக்கு சொன்னால், தாஸ்தாயேவ்ஸ்கியின் இடியட் நாவலின் மையக்கேள்வி கிறிஸ்துவுக்கு நவீன உலகில் இடமிருக்கிறதா என்பது. ஆசிரியர் ஒரு போர்களத்திலோ அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டு தொழிற்சாலையிலோ மிஷ்கினை கொண்டு விட்டிருக்கலாம். இவ்விரண்டு சூழல்களில் அவன் என்ன செய்வான் என்று ஆராய்வதும்  இந்த சிக்கலை எதிர்கொள்ளும் சாத்தியமான solution தான். அரசியல், சமூக அமைப்பு, பொருளாதார மாற்றம், தத்துவ மோதல் என்று எல்லாத்தளத்திலேயும் கிறிஸ்துவின் இடம் என்ன என்று இப்படி விதவிதமான பதில்கள் மூலம் ஆசிரியர் எதிர்கொள்வதற்கான சாத்தியம் இருந்தது. ஆனால் தாஸ்தாயேவ்ஸ்கி தேர்ந்தெடுப்பது அகம் சார்ந்த solution. மனிதன் தன் அகத்துக்குள் கிறிஸ்துவை விடுவானா என்ற கேள்வி தாஸ்தாயேவ்ஸ்கிக்கு முதன்மையானது. இதனால்தான் அவர் அந்த நாவலை அவர் கட்டமைத்த விதத்தில் கட்டமைத்தார். நாடகத்தை போல் அரங்கு அரங்காக நகரும் காட்சிகள் (ரயில் பெட்டி, வரவேற்பறை, இன்னொரு வரவேற்பறை...) ஒவ்வொரு தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாத்திரங்கள், அவர்களுக்குள்ளான உரையாடல்கள், மோதல்கள்உணர்ச்சிக்கட்ட உச்சத்தருணங்கள் இப்படி. இது அந்த கேள்விக்கான ஒரு solution - மகத்தான, தனித்தன்மையான, பிறிதொன்றில்லாத solution. ஒரு ஆர்க்கிடெக்டின் கைத்தடம் பதிந்த தனித்துவமான கட்டிடம் போல

வெண்முரசை அல்ல, எந்த நாவலையும் ஒருவர் மதிப்பிடும்போதும் விமர்சிக்கும்போதும் அவர் தன்னை கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள், இந்த நாவல் காலம், இடம், கருத்துவெளி சார்ந்து எந்த சவாலை எதிர்கொள்கிறது? அமைப்புரீதியாக அந்த சவாலை எப்படி எதிர்கொண்டுள்ளது? அதை கலை ஒருமை குன்றாமல் செய்கிறதா? என்பதுதான்

ஒப்புநோக்க, நாவல் நீண்டுகொண்டே போகிறதுபோர் அடிக்கிறது, அந்த பாத்திரத்தின் பெயர் உச்சரிப்பு சரியில்லைஇந்த அத்தியாயத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கே போன்ற உதிரிகருத்துக்களுக்கு பெரிய மதிப்பில்லை. "வெண்முரசுக்கு நல்ல எடிட்டர் வேண்டும்" என்ற அபிப்பிராயத்தை மாதம் ஒருமுறையாவது யாராவது சொல்வதை சமூக வலைத்தளங்களில் பார்க்கிறேன். இவர்களிடம் கேட்கவேண்டிய ஒரே கேள்வி, ஐயன்மீரே, மேலே குறிப்பிடப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதிலை வகுக்காமல், எந்த அடிப்படையில் ஒரு எடிட்டர் வந்து, எங்கே, எதை வெட்டத்தொடங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்உங்களுக்கே அடிப்படை புரிதல் இல்லாத பட்சத்தில் 'எடிட்டர் வேண்டும்' என்ற முடிவுக்கு எப்படி வந்தீர்கள்

வெண்முரசு எழுதுகையில் ஆசிரியர் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

1. ஒரு செவ்வியல் புராண ஆக்கத்தை நவீன மொழியில் எதிர்கொண்டு நவீன சிந்தனைத்தளத்தில் பொருத்தி வடிக்கவேண்டும்.
2. இதுவரை வந்துள்ள பல நாவல்களை போல் நவீன சித்தாந்தங்கள் அடிப்படையில் பாரதத்தை மறுவடிவாக்கம் செய்யாமல் (. மார்க்சிய ஏகலைவன், பெண்ணிய திரௌபதி போன்ற ஒற்றைப்படை கோணங்களை கையாளாமல்), அதன் சாரமான கேள்விகளுக்கு சென்று அவற்றை நவீன அறிவுக்கருவிகள் கொண்டு மீள்பரிசீலனை செய்யவேண்டும்.
3. அது ஒரு பாத்திரத்தின் கோணமென்றோ, ஒரு நிகழ்வின் விரித்தெடுப்பு என்றோ இல்லாமல், மொத்த பாரதத்தின் கதையை சொல்லவேண்டும்.
4. மொத்த பாரதத்தின் கதை என்று மட்டும் இல்லாமல் வியாசபாரதத்தின் முழு கால, இடதத்துவ முடிச்சுகளின் வீச்சும் நிகழவேண்டும்
5. இது அனைத்தும் நிகழும் ஒரு வடிவத்தை கண்டடைந்து, மொத்தக்கதையையும் அந்த மூல வடிவில், பிசகும் குலைவும் இல்லாமல்தொடர்ந்து சீராக எழுதி நிகழ்த்த வேண்டும்
6. இந்த அடிப்படை சட்டகத்துக்குள் மனோதர்மம் போல வெவ்வேறு சோதனைகள் நிகழ வேண்டும். கலைக்கணங்களாக இருக்கவேண்டும்அழகியல்நிறைவு கைகூடவேண்டும்.

அதிலும் மகாபாரதம் சாதாரண ஆக்கம் அல்ல. (கதைக்களம் - இடம்) விரிவு, (தத்துவ - கருத்து) உயரம், (குறியீட்டு - காலம்) ஆழம் என்று மூன்று பரிணாமங்களில் விரிந்து நிற்கும் ஆக்கம். முதலில் அது இந்திய நிலம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களாக கிளைகளாக தழைத்து வாழும் ஒரு ஆலமரம். இரண்டாவது அது எழுப்பும் அடிப்படை கேள்விகள் இந்திய கூட்டுமனத்தின் மனசாட்சியுடையவை. எது தருமம்? நிலையான அறத்துக்கும் நிலைபெயரும் நீதிகளுக்குமான உறவு என்ன? எது மன்னிக்கவே முடியாத குற்றம்நம்முடைய முன்னோருக்கும் நம்முடைய வழித்தோன்றல்களுக்கும் நாம் ஆற்ற கடமைப்பட்டுள்ள பொறுப்புகள் என்னென்ன? போன்றவை. மூன்றாவது மகாபாரதத்தின் பாத்திரங்கள் கதைமாந்தர்கள் அல்லஅர்ஜுனனும் பீஷ்மரும் திரௌபதியும் கிருஷ்ணனும் வாழும் ஆழ்படிமங்கள். ஆக மகாபாரத மறுஆக்கம் என்பது இந்த மூன்று தளங்களையும் அனணைத்துச்செல்ல வேண்டும்.

வெண்முரசு இந்த சவால்களை எப்படி எதிர்கொள்கிறது?

மேலோட்டமாக மூன்று தளங்களில் இதன் அமைப்பை சொல்லலாம்.

1. முதலில் ஒட்டுமொத்த நாவலின் மொழியை பார்த்தால், வெண்முரசின் கதைசொல்லல் பாணி யதார்த்தவாதமானது. நிலைக்காட்சிகள், வரலாற்று நிகழ்வுகள், கதைமாந்தர்களுக்குள்ளான உரையாடல்கள், அவர்களுக்குள்ளான உறவுகள் எல்லாம் சொல்லப்படுகிறது, அல்லது காட்சிப்படுத்தப்படுகிறது. அடிக்கடி, ஒரு நிகழ்வை அந்த இடத்தில் இருக்கும் ஒரு பாத்திரத்தின் கண்கள் மூலமாக நமக்கு காட்சிப்படுத்தப்படும். அதே நேரத்தில் நேரடியாக கதைப்போக்கில் வராத, ஆனால் குறியீடுகளாக ஆழம்பொருந்திய கதைகளை, கனவுகளாகவோ மருட்சிகளாகவோ  சூதர்கதைகளாகவோ மையகதைபோக்கிலேயே சொல்லப்படுகிறது. இந்த உத்தியால் நவீன நாவலுக்கான நம்பகத்தன்மை குலைவதில்லை, அதேநேரத்தில் குறியீட்டு ரீதியான அறிதல்கள் கதை ஒழுக்கில் வந்தபடியே இருக்கிறது. எந்தெந்த இடங்களில் எந்தெந்த கிளைக்கதைகளை ஆசிரியர் கையாள்கிறார் என்ற கவனமான வாசிப்பு ஆசிரியரின் பார்வையும் கற்பனைத்திறனையும் மதிப்பிட வழிவகுக்கிறது. உதாரணம் முதற்கனலில் அம்பை கதையுடன் தாட்சாயணி கதை இணைந்து வருகிறது. பிறகு இமைக்கணத்தில் அம்பையும் பீஷ்மரும் தாட்சாயணியாகவும் சிவனாகவும் சிகண்டிக்கு தோற்றமளிக்கின்றனர். தாட்சாயணி-சிவன் என்ற இணை ஒரு ஆழ்மனக்குறியீடாகவும் ஒரு நவீன உளவியல் குறியீடாகவும் ஒரே நேரம் நமக்குள் நிகழ்கையில் ஆணிலியான சிகண்டியை புதுவிதமாக மதிப்பிடுகிறோம். அவன் அம்மாவாகி அப்பாவை எதிர்க்கும் மகள்-பெண், அதே நேரம் அப்பாவுக்கு சவால்விடும் மகன்-ஆண்நிகழ்வுகளை இப்படி 'அடுக்கிப்பார்த்து' அறிதல்களை பலகுரல்களாக உணர்த்துவது பின்-நவீனத்துவ நாவல்களின் சிறப்பியல்பு. இந்த முதல்தள அமைப்பு இந்த வலைப்பக்கத்தில் வாசகர்களால் முன்வைக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

2. வெண்முரசின் அமைப்பை பற்றிய இரண்டாம் தள அவதானிப்பு என்பது நாவல்வரிசையில் ஒவ்வொரு நாவலின் வடிவம் சார்ந்தது. ஒரு விதத்தில் பலவிதமான நவீன நாவல் வடிவங்களின் சோதனைகளை வெண்முரசு நாவல் வரிசையில் காண்கிறோம். மழைப்பாடல் மெதுவாக ஒழுகிச்செல்லும் ஒரு ஓட்டத்தின் போக்கை கொண்டது. தால்ஸ்தாயின் நாவலை போல நிலமும் மாந்தரும்  உளவியல் ஊடுபாவுகளும் சாவகாசமாக வந்துசெல்லும் அமைப்பு. அந்த கதிக்கே உரித்தான விரிவும் ஆழமும் கொண்டது. பாரதம் என்ற குடும்பக்கதைக்கு இந்த அமைப்பு தேவை. காண்டீபம் உலிஸஸ் போன்ற ஒரு ஆழ்ப்பயணம். பாரதம் என்ற வீர-விவேகக்கதைக்கு அந்த அமைப்பும் தேவை. நீலத்தின் கட்டமைப்பில் மாறிமாறி பின்னும் இரண்டு திரிகள் உள்ளது - கம்சனின் வெறுப்பும் ராதையின் பிரியமும். அறம்நிலைநாட்டும் அவதார கிருஷ்ணனும் குழலூதும் அன்பன் கண்ணனும் இவ்வாறாக ஓர் ஆளுமையாக உருவாகி வருகிறார்ஆக ஒவ்வொரு நாவலுக்கு ஒரு மையம் உள்ளதுகட்டமைப்பு அந்த மையத்தை சார்ந்தே உள்ளது

3. மூன்றாம் தள கட்டமைப்பு ஒவ்வொரு அத்தியாயத்தை சார்ந்தது. வெண்முரசு நாள் ஒரு அத்தியாயம் என்று எழுதப்படுகிறது. இவ்வளவு விரிவுடைய ஒரு ஆக்கம் அட்டவணை போடப்பட்ட நாள் ஒழுங்குடன் எழுதப்படவில்லை என்றால் வடிவ ஒருமை சாத்தியமாகியிருக்குமா என்ற சந்தேகம் உள்ளது. வெண்முரசு வரிசையில் பல அத்தியாயங்கள் தன்னிறைவான சிறுகதையின் வடிவத்தை கொண்டுள்ளன. பொதுவாக ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கருத்தை ஒட்டிக் கட்டமைக்கப்பட்டிருக்கும். நான்கைந்து அத்தியாயங்கள் சேர்ந்து ஒரு பகுதியாக இருக்கும், அந்தப்பகுதி கதை ஒழுகில் ஒரு மையக் கருத்தையோ கதைமாந்தரையோ நிகழ்வையோ விவரிக்கும். பகுதிகள் ஒட்டுமொத்தமாக நாவலின் ஒருமையையும் அழகியலையும் கட்டமைக்கும். ஆக ஒரு மைய தத்துவக்கருத்து அல்லது தரிசனம், ஒரு படிமத்தின் உருவில்ஒவ்வொரு நாவலையும் சேர்த்துக்கட்டும் சரடாக உள்ளது.  

இந்த மூன்றுநிலை அமைப்புக்கு மேல் அடுத்தத் தளம் ஒரு இருக்கிறது

4. வெண்முரசுக்கு ஒரு fractal தன்மை உள்ளது. Fractal எனப்படுவது கணிதரீதியான ஒரு வடிவம். ஒரு பொருளை முழுமையாக ஆராயும் போது அதில் தென்படும் வடிவம், அதன் பாகங்களிலும் தென்படும் என்றால், அந்தப்பொருளை fractal வடிவம் கொண்டது எங்கிறார்கள். இயற்கையில் பல இடங்களில் - இலை நரம்புகளில், மரக்கிளைகளில்பனித்துகள்களில் - இந்த வடிவம் தென்படுகிறது. இயற்கையில் சீர்மைக்கு எடுத்துக்காட்டு. இந்தவடிவங்கள் பொதுவாக வசீகரமாக, பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது போல இருக்கும்கிளாசிக் நாவல்கள் பலவற்றை அவற்றின் சொல்-வாக்கிய அமைப்பின் புள்ளியிலை வைத்து ஆராய்ந்து பார்க்கையில் அந்த ஆக்கங்களின் கட்டமைப்பில் fractal வடிவத்தின் தன்மை உள்ளதாக கண்டடையப்பட்டுள்ளது. வெண்முரசை கருத்துத்தளத்தில் வைத்துப்  பார்க்கையில் இந்தத்தன்மை உள்ளது.

வெண்முரசின் எந்த அத்தியாயத்தை எடுத்துப்பார்த்தாலும், அதில் உள்ள மையக்கருத்து அந்த நாவல் முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. கண்ணாடிகளை ஒரு அறைக்குள் தேர்ந்த வகையில் வைக்கும் போது பிம்பங்களின் பிம்பங்களாக அடுத்தத்தளத்தில் ஒரு பிம்பம் உருவாக்குவது போல வெண்முரசின் கட்டமைப்பு இருக்கிறது. மொத்த நாவலாக பார்க்கையில் அந்த மையக்கருத்து நிலைக்கிறது, ஆனால் அத்தனை பிம்ப-பிரதிபிம்பங்களை ஏற்றுக்கொண்டு சற்றே பிரம்மாண்டமான வடிவில். ஆனால் கருத்து ஒன்று தான்இதைத்தான் fractal தன்மை என்கிறேன்

உதாரணத்துக்கு, மழைப்பாடலில் மழை/நீர் என்ற படிமம் ஒவ்வொரு பகுதியிலும் தோன்றும் விதம் வெவ்வேறு தளங்களில் அர்த்தம் கொள்கின்றனமழைக்கான வேழாம்பலின் தவத்துடன் தொடங்கி மழைவருகையை உணர்த்தும் தவளைகளின் பாடலுடன் முடிகிறது இந்த நாவல். அஸ்தினபுரியின் குடும்ப-அரசியல் வறட்சியில் தொடங்கி சத்யவதி-அம்பிகை-அம்பாலிகையின் கானேகலின் நிறைவில் முடியும் இல்லறப்பெருக்கின் கதையை இந்தப்படிமங்களின் மொழியில் தொடர்ந்து வாசிக்கிறோம்வறட்சி-விழைவுக்கும் புரிதல்-நிறைவுக்குமான உறவை மழைக்கான தவமும் மழையும் குறிக்கிறது என்றுகொண்டால் இது மொத்த பாரதக்கதைக்கான குறியீடு. போரே என்றாலும் அது கழுவும், புதுப்பிக்கும் மழை. போரை உந்தும் எளிய விழைவுகளைத் தாண்டி இதை புரிந்துகொள்ளும்போது நிறைவுக்கான வெளி காத்திருக்கிறது என்ற கருத்து வெளிப்படுகிறது

இன்னொரு எடுத்துக்காட்டு, பிரயாகை. துருவனின் நிலைபெயராமை, காமத்தின் கட்டற்றத்தன்மை என்று இரண்டு அலகுகள் கொண்ட அமைப்பு. இந்த அமைப்பு எல்லா இடங்களிலும் துலங்குகிறது. கங்கை ஊற்றில் துருவனின் பிம்பம் முதல் பாயும் கூந்தலுடன் தோன்றும் பாஞ்சாலியின் முகத்தில் வைர மூக்குத்தியின் நிலைமாறாச்சுடர் வரை. விதுரன் சிவையும் சம்படையும் அமர்ந்த உப்பரிகையில் வைத்து துருவனை காணும் இடம் ஒரு தீவிரமான கலைத்தடுக்கல் - ஒரு juxtaposition. குருகுலத்தத்திலிருந்து விடைபெரும் நாள் அன்று துரோணர் அர்ஜுனனுக்கு துருவனை உன் மனதில் நிலைபெறச்செய் என்கிறார். அதே மூச்சில் மலரம்புகளை பற்றிச் சொல்கிறார். அர்ஜுனனின் மொத்த ஆளுமையும் இந்த ஒரு உரையாடலில் வந்துவிடுகிறது. இப்படி, ஒவ்வொரு பகுதியாகவும்ஒட்டுமொத்தமாகவும், fractal போல ஒரே பொருளை அளிக்கும் தன்மை வெண்முரசின் கட்டமைப்பின் மிக முக்கியமான சிறப்பம்சம். மற்ற பாரதப்புனைவுகளிலிருந்து வெண்முரசை வேறுபடுத்துவைத்து.  

5. கடைசியாக, வெண்முரசின் அமைப்பு ஒரு அச்சாணியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. போர் ஒரு பெரிய watershed moment. பாரதப்போர் பழங்குடிகளுக்கு நிலையரசுகளுக்கும், பெண்மய சமூகத்துக்கும் ஆண்மய சமூகத்துக்கும், ஷத்திரியர்களுக்கும் சூத்திரர்களுக்கும், வேளான் மக்களுக்கும் மேய்ச்சல் மக்களுக்கும், ஆசாரவாத 'நிலைபெற்றமதங்களுக்கும் பழங்குடிகளின் மாற்றுமரபு மதங்களுக்குமான, வெவ்வேறு தத்துவங்களுக்கும் இடையிலான பூசல் என்பதை வெண்முரசு தெளிவாகவே காட்சிப்படுத்துகிறது. சின்னசின்ன ஓடைகளாகத்தொடங்கி ஒழுகி, அவை இணைந்து வீரியம் கொண்டு நீர்வீழ்ச்சியாக பொழியும் முனையாக போரை கொண்டுவருகிறது வெண்முரசின் அமைப்பு. இதன் அச்சாணியான கேள்வி பாரதத்தின் ஆகப்பெரும் கேள்வி தான்: எது தருமம்? யுகசந்தியின் பொழுதுகளில் இந்த கேள்வி மீண்டும் மீண்டும் கேட்கப்படுவதை வரலாற்றில் காண்கிறோம். இதன் பிறகு எல்லா மதிப்பீடுகளும் மாறிவிடும். இந்த புள்ளிக்குச்செல்வது என்பது திரும்பிவரமுடியாத ஒரு இடத்தை நோக்கிச்செல்வது. அதனால் தான் போர் நிகழும் முன் அவ்வளவு பேசவேண்டியிருந்தது. பிறகு பேசமுடியாதுஇந்த மையப்புள்ளியை நோக்கிய கட்டமைப்பு யதார்த்தவாத பாணியில் பெரும்பாலும் சொல்லப்பட்டாலும் (குலக்கதைகள், வரலாறுகள், சூதர்பாடல்கள்), இந்த பகைகளுக்கு உளவியல் ஆழம் கொடுப்பது இதன் கட்டமைப்பின் புராணத்தன்மை தான்

இப்போது ஓடிக்கொண்டிருக்கும் திசைதெர்வெள்ளம் என்ற நாவல் மீண்டும் மீண்டும் எல்லைகளை மீறுவதை பற்றிச்சொல்வதும் இதனால்தான். எல்லையை மீறுவது என்பது உளவியல் ரீதியாக அவ்வளவு எளிதல்ல. ஆனால் அது ஒரு மிகப்பெரிய இடம்நீர்வீழ்ச்சி அங்கு தான் சரியத்தொடங்குகிறதுஎல்லைகள் தாண்டப்படுவதை தடுக்க முடியாது. எல்லைமீறல்களிலிருந்து தான் புதிய எல்லைகளுக்கான மதிப்பீடுகள் உருவாகிவரும். நவீன வரலாற்றில் ஹோலோகாஸ்ட் இப்படிப்பட்ட ஒரு எல்லைமீறல். எல்லையில்லா அழிவை விதைத்தது. ஆனால் அதன் பிறகு நாம்முடைய இன்றைய எத்திக்ஸ் என்பதன் புரிதல் எப்படி மாறுபட்டது என்பது வரலாற்றுபாடம்

இந்த நாவல் பீஷ்மர் எல்லைமீறலை மீண்டும் மீண்டும் தவிர்ப்பதன் கதை என்ற கட்டமைப்பு கொண்டுள்ளது. அவர் எல்லைமீறாமல், நாகரீகமனிதராக போர் புரிய நினைக்கும் ஒவ்வொரு முறையும் அவனுடைய பழங்குடி குருதியின் ஓர் அலகு அவரை விட்டு விலகும் என்று வரும் கதையமைப்பு, பழங்குடித்தன்மை விலகி நாகரீக நிலையரசும் மதிப்பீடுகளும் உருவாகிவரும் யுகமாற்றப் புள்ளியை குறித்துவிடுகிறது. அப்பொது கங்கன் முழு ஷத்திரியனாகிறான். பத்தாம் நாள் சிகண்டியைக்கொண்டு பீஷ்மரைக்கொல்லும் இடம் பாரதப்போரின் முதல் குறிப்பிடத்தக்க எல்லைமீறல், அதன் பின் அராஜகம் தான். இதே கட்டமைப்புக்குள் அசுரர்கள், பழங்குடிகள் தொடர்ந்து வருவதும் இந்த தருணத்தை தீவிரப்படுத்துவது. கடோத்கஜன் நிலத்துக்காகவா போர் என்று கேட்கும் அதே மூச்சில் நிலத்தில்  நாகங்கள் இருக்கும்அவை இல்லாத இடமே இல்லை என்கிறான். முதற்கனல் முதல் வாசித்தவர்களுக்கு தெரியும் இப்படிக்கூறுவதன் அர்த்தத்தளம் என்னவென்று. பழங்குடி வாழ்வை 'எளிமையான' ஒன்றாக நோக்கும் இந்த பார்வையுடன் ஒருவர் மாறுபட்டாலும் இவ்வகை குறியீட்டுத்தள அறிதல்கள் கவனிக்கத்தக்கவைவெண்முரசு இதுபோன்று எண்ணற்ற முடிச்சுகளால் நெய்யப்பட்டுள்ளது.

இப்படி வெண்முரசின் அமைப்பை ஆராய்ந்து பார்க்கும் போது அதன் நிகழ்வுத்தளமும் கற்பனைத்தளமும் விரிவானது என்றாலும் கருத்துத்தளம் செறிவானதாகவே உள்ளது. முதல் இரண்டு தளங்களின் விரிவு இல்லாமல் புனைவில் கருத்துச்செறிவை அடையமுடியாது. ஏனென்றால் புனைவில் கருத்து சொல்லப்படுவதல்ல, காட்டப்படுவது. இது ஆயிரம் சிறு  கண்ணாடித்துகள்கள் கொண்ட அறைக்குள் ஓர் ஒளிக்கதிர் செல்வது போல். கண்ணாடிகளின் அமைப்பே ஒளிபிம்பத்தின் அமைப்பை தீர்மானிக்கிறது. ஒரு கண்ணாடியை உருவினாலும் அமைப்பு மாறிவிடும். 'எடிட்டர் வேண்டும்' என்று சொல்பவர்கள் இந்த புரிதலை கருத்தில்கொண்டு எங்கு எதை வெட்டுவது என்று பரிந்துரைக்கலாம்.

இவை வெண்முரசின் கட்டமைப்பு பற்றி என் அவதானிப்புகள். இதேபோல் வெண்முரசை தொடர்ந்து வாசிப்பவர்கள் அதன் கட்டமைப்பை பற்றி அவர்கள் கோணத்தை முன்வைக்கலாம். மகாபாரதத்தை இன்றைய வாசகருக்கு மறுஆக்கம் செய்வதில் இந்தக் கட்டமைப்பு எந்த அளவுக்கு வெற்றிபெற்றுள்ளது என்று பரிசீலிக்கலாம். பழந்தமிழ் மரபின் அலகுகளும் மதிப்பீடுகளும் அழகுணர்வுகளும் எந்தளவுக்கு வெண்முரசில் கைகூடியுள்ளன என்று மதிப்பிடலாம். அதை நல்லியல்போடு பொதுவாசகர்களுக்கு முன் வைக்கையில்தான் அதை விமர்சனம் என்று சொல்லலாம்.

அன்புடன் 
டி.நாகராஜன்