Monday, January 21, 2019

யுதிஷ்ட்ரரின் மனநிலை



அன்புள்ள ஜெயமோகன் சார்,

கார்கடலில் இன்று யுதிஷ்ட்ரரின் கொந்தளிக்கும்,சீறும் மனநிலையை என்னால் உள்வாங்கிக்கொள்ளவே முடியவில்லை. படித்து திரும்ப படித்து ஒண்ணும் தோன்றாமல் அப்படியே அமர்ந்திருந்தேன்.வழக்கம்போல் எனது மனதின் எல்லா கேள்விகளுக்கும் விடையை உங்கள் தளத்தில் தேடுவது போல் தேடினேன்.நீங்கள் உங்களின் எழுத்தை ஆரம்பிக்கும்போதே அன்று யதார்த்தமாய் குடும்ப,ஊரின் மூலை முடுக்கை,கால்வாயை எல்லாம் கதைகளாய் கண்ட கடுப்பிலோ என்னவோ " நான் சாமானிய மனிதர்களின் கதையை எழுதுவதை விட வரலாற்று நாயகர்களின் கதையை, லார்ஜர் தென் லைப் கதையை எழுத போகிறேன்" என கூறியிருக்கிறீர்கள். அப்போதுதான் எனக்கு நான் நிற்கும் இடம் தெரிந்தது...அதே சாமானிய தளம். எப்படி புரியும்? நீங்கள் எழுதுவது கொஞ்சமாகவாது வரலாற்றில் வாழவேண்டும் எண்ணம் உள்ளவர்களுக்கு என தோன்றியது.தமிழ் நாட்டை பொறுத்தவரை" வெண்முரசை"வாசிப்பதே பெரிய வரலாற்றில் வாழ்வதுதான் என்று கூறவில்லை,புரிந்து அறிந்து வாசிப்பது.ஆனால் அதற்கு மனதில் ஒரு கனவில்லாவிட்டால் சாத்தியம் இல்லை என நினைக்கிறேன். ஐம்பதாயிரம் வரலாற்று நாயகர்கள் வெண்முரசை வாசிக்கிறார்கள் என அறிந்தபோது அனைவருக்கும் ஜெபம் பண்ணவேண்டும்போல் தோன்றியது. வாசிப்பதற்கே சாமானிய தளம் உதவாது என்றால் எழுதுவதற்கு?

எல்லாரும் யுதிஷ்டிரர் உட்பட போர்க்களத்தில் கொஞ்சம் தோல்வி என்ற உடனே இளைய யாதவரை குறித்து முணுமுணுக்க ஆரம்பிக்கிறார்கள். இதை நானே எனது வாழ்வில் பலதடவை பார்த்தும், முணுமுணுத்தும் இருக்கிறேன். வரலாற்றில் முதன்மையாய் இருக்கவேண்டும் என்று எண்ணுபவர்களுகான சோதனைகளம். இளைய யாதவர் இன்னும் இவர்களிடம் என்னபாடு படபோகிறாரோ? . தர்மர் திருஷ்டதும்மனிடம் பேசும்போது உண்மையை பேசுகிறார், ஆனால் அவரிடம் அதே எதார்த்தத்தை சிகண்டி கூறும்போது கடுப்பாகிறார். ஆனாலும்  சிகண்டிதான் ஒளியை எடுத்துசெல்கிறார். 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்