Friday, January 18, 2019

போர்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

 திருதாஷ்டரரே பதறி "நீ யார் ?"  என்று கேட்கும் அளவுக்கு மறுபிறவி எடுத்ததுபோல் இருக்கும் சஞ்சயன் கூறும் இந்த சொற்கள் எவ்வளவு உண்மையென போர்களை குறித்து விக்கிபீடியாவில் படிக்கும்போது தெரிகிறது,  "போர் எந்த மெய்ப்பொருளையும் உருவாக்குவதில்லை. உருவாக்கிய அனைத்தையும் அது உடைத்தழிக்கிறது. வெற்றிடம் எனும் மெய்ப்பொருள் மட்டுமே எஞ்சியிருக்கச் செய்கிறது. அள்ளிய பள்ளத்தில் சூழ்ந்திருக்கும் நீர் சுழித்து வந்து நிரப்புவதுபோல் நாம் உருவாக்கி இங்கு நிறைத்து வைத்திருக்கும் மெய்ப்பொருள்கள் அனைத்தும் வந்து அங்கு நிரம்புவதையே காண்கிறோம். ஆகவேதான் காலந்தோறும் மெய்யறிவோர் போரை நாடி வருகிறார்கள். தங்கள் தலையை அறைந்து உடைத்துக்கொள்ள கரும்பாறைச் சுவரைத் தேடி வரும் வலசைப்பறவைகள்போல"....நமது வீட்டிற்குள் ஒரு சண்டை நடந்தாலே கனத்த மவுனம் வந்து வெற்றிடம் உருவாகிறது. ஒரு பெரிய சண்டைக்கு பின் அந்த வீட்டின் கருத்துக்கள் கண்டிப்பாக மாற்றி அமைக்கபடுகின்றன.

உலகில் எத்தனை கோடி போர்கள்....கிரேக்க போர்கள்,சிலுவைபோர்கள்,முகலாய ஆதிக்கதிற்கான போர்கள், மங்கோலிய போர்கள், உலகபோர்கள் என. முதலாம் உலகப்போர் அறிவியலின்,இயந்திரத்தின் மெய்யியலுக்கானது என்றால் இரண்டாம் உலகப்போர் அறிவியல்,இயந்திரத்தின் மெய்யியலின் மீதான முடிவையே தொடக்கமாக கொண்டு தொழிற்நுட்பத்தின் மெய்யியலுக்குள் நுழைகிறது.கூட்டம் கூட்டமாக தொழிற்சாலைக்குள் இருந்தவர்கள் இப்போது தனித்தனியாய் கணிப்பொறிமுன் இருக்கிறோம்.   

ஒவ்வொரு சமூகமும் நாடும் தாங்கள் கண்டுபிடித்த கருவிகளையும் தத்துவங்களையும் மெய்யறிதல்களையும் பரிசோதித்து பார்க்கவும் திணிக்கவுமே போர்களை நடத்துகின்றன என்று நினைக்கிறேன். ஒரு கருத்தின் மீது உக்கிரமான வழிபாடு கொண்ட தலைவன் தோன்றும்போது போர் மேகங்கள் சூழ ஆரம்பிக்கிறது.குருஷேத்ரதிற்கு  பிறகு  கிருஷ்ணனால் பாரதவர்ஷத்தில் புதிய மெய்ஞானம் உண்டாகி, துபாரயுகம் என்னும்  ஒரு கருத்து முடிந்து கலியுகம் என்னும் கருத்து தொடங்குகிறது.ஆனால் அது மொத்தமும் புதிய கருத்து அல்ல, வெற்றிடத்தில் குவிந்த மெய்ஞானங்கள்.வெண்முரசிலேயே அதை கிருஷ்ணன் கூறுவதோடு தனக்கு துணைவியர்களாக பாரத வர்ஷத்தில் அப்போது இருந்த கருத்துகளுக்கு ஏற்ப எட்டு பேரை மணந்திருக்கிறார். தனது உதிரத்தில் முளைத்தவர்களுக்கு வேறு மெய்யியலில் உள்ளவர்களிடம் உறவை அமைக்கிறார். கிருஷ்ணன் அங்கிருந்துதான் தொகுக்க ஆரம்பித்து இருப்பார் என எண்ணிக்கொண்டேன். 

இப்போது நாம் வாழும் இந்த பாரதவர்ஷம் காந்தி என்னும் மகாபுருஷனின்அகிம்சை என்னும் மெய்யியல் "சுதந்திரபோராகி" நாம்  அடைந்தது. அதுவும் ஒரு பெரிய ஞானமரபின் தொடர்ச்சிதான்

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்