Monday, January 28, 2019

அஸ்வத்தாமன்அன்புள்ள ஜெயமோகன் சார்,

இன்று கார்கடலை வாசிக்கும்போது அஸ்வத்தாமனின் பரிணாமம் அவன் விரும்பி வந்து அடைந்ததா? இல்லை அவனுக்கு கொடுக்கபட்டதா? என்று கேள்வி எழும்பியது.
 
கிருபி கருவுற்றிருக்கும்போது துரோணரின் சந்தோஷமான மனநிலை குறித்து "இதுதான் மகிழ்ச்சியா, இதைத்தேடியா மானுடர் இத்தனைநாள் ஓடுகிறார்கள் என்று வியந்துகொண்டான். ஆம், இதற்காக எதையும் செய்யலாம். இதற்காக பொறாமை கொள்ளலாம். வஞ்சகமும் செய்யலாம். மானுடனாக வாழ்வதில் இத்தனை இனிமை இருக்கையில் ஏன் நினைவறிந்த நாள்முதல் மனம் சுளித்தபடியே வாழ்ந்தேன்? காற்றுக்கு எதிர்த்து நின்று முறுக்கிக்கொண்ட மரம்போன்றவன் நான். என்னை தொலைவில் காண்பவர்கள் கூட என்னிலிருக்கும் அந்த முறுக்கத்தைக் கண்டுகொள்வார்கள். இதோ என் அகம் புரியவிழ்கிறது. இதோ கூட்டின் விளிம்புக்கு வந்த பூங்குஞ்சு தயங்கி சிறகடித்து காற்றிலெழுகிறது" என்று வெண்முரசு கூறுகிறது. அப்போதே துரோணர் அஸ்வத்தாமனுக்காக என்னவேணும் செய்யலாம் என்ற மனநிலைக்கு வருகிறார்.அச்வதாமனின் பிறப்பு அனைவரையும் குருஷேதரம் நோக்கி கொண்டுவந்ததின் முக்கியமான கண்ணி.  அச்வதாமனின் பிறப்பு நேரத்தை வைத்து ஜோதிடம் சொல்லும் கனிகர் "அனைத்து களங்களிலும் அனல் திகழ்கிறது. வாழும்நாளெல்லாம் எரிந்துகொண்டிருப்பான். பெருஞ்சினத்தால். வஞ்சத்தால். ஏன்? எவரிடம்? எதையும் களங்கள் சொல்வதில்லை.”  என்கிறார். பிறகு அச்தினபுரியில் ஒரு யானை பிறந்திருப்பதையும் அஸ்வத்தாமனும் யானையும் பிணைக்கபட்டிருப்பதையும் கூறி செல்கிறார். பிறகு கனவிலும் நினைவிலும் பால் பற்றிய எண்ணத்திலேயே இருக்கும்  அச்வத்தாமனுக்கு பால் வாங்கும் பொருட்டு கிருபியால் துரத்தப்படும் துரோணர் தனது குருகுல மாணவனாகிய துருபதனிடம் அவமானபட்டு அரற்றி புலம்பும்போது அவரின் அன்னை குசை தோன்றி  ’தாம்யத’   ‘தத்த’ ‘தயை’ என்னும் மூன்று வார்த்தையை மந்திரம் போல்  கூற கடுப்பாகி அவளிடம் இருந்து விலக முயல அவள் அனல் உருவாக விஸ்வரூபம் எடுக்க துரோணர் பயப்பட்டு தனக்கு ஒன்றும் வேண்டாம் என கூறுகிறார். ஆனால் அன்னையின் நிழல் என எழுந்தவர்கள்[ குதிரைகளா அவை ?] அவரின் சார்பாக  “இவனுள் ஓடும் காயத்ரிக்கு அனல்சிறகுகள் முளைக்கட்டும். அவள் தொட்ட இடங்கள் எரியட்டும்!” என அவளிடம் கேட்க அன்னை “அவ்வாறே ஆகுக!” என்றாள். துரோணரை போன்றே குலத்திற்காகவும், குடும்பத்திற்காகவும்,  இரக்கும்போது வணிகத்தினால்,நட்பினால் அவமானபட்டு அழிந்து போன கோடானுகோடி ஆத்மாக்களின் ஒற்றை நம்பிக்கை துரோணர். அவரின் வாரிசு அஸ்வத்தாமன். 

அஸ்வத்தாமனை பிறகு அஸ்தினபுரியில் துரோணர் அர்ஜுனுக்கு கல்வி வழங்கும்போது,அர்ஜுனனைவிட வீரமாய் நுட்பமாய் குதிரையை அடக்கி அர்ஜுனனின் வெறுப்பை சம்பாதித்து கொள்கிறான்.பிறகு இருவருக்கும் சண்டைவர அதில் அஸ்வத்தாமனை கொல்ல அர்ஜுனன் தொடுத்தவில்லில் யானை மாட்டுகிறது.துரோணர் கல்வியில் முக்கால்வாசி குதிரையை அடக்குவதை பற்றிதான் அர்ஜுனனுக்கு கற்றுகொடுக்கிறார். குதிரைகளின் அரசனாகிய தனது மகனை வெற்றிகொள்ளதான் அவனுக்கு கற்றுகொடுத்தாரா?.பிறகு குருதட்சணையாக பாஞ்சாலத்தை கேட்க அர்ஜுனன் துருபதனை இழுத்துகொண்டு அவர்முன் போட துருபதனின் ராஜ்ஜியத்தில் பாதியை தன் மகனுக்கு கொடுக்கிறார் ஆனால் துரோணரின் வஞ்சத்தை நேருக்கு நேர் கண்ட அர்ஜுனன் மனதில் "இக்கணத்தில் துரோணரின் பாதம் என் நெஞ்சிலிருந்து அகல்கிறது. இதோ அவர் இறந்து என்னிலிருந்து உதிர்கிறார். இதோ நான் இறந்து மீண்டும் பிறக்கிறேன்" என்று கூறுகிறான்.பிறகு அஸ்வத்தாமன் உத்தரபாஞ்சால நாட்டை விதுரரின் ஆலோசனைப்படி ஆள ஆரம்பிக்கிறான்.  மறுபிறவி எடுத்திருக்கும் துருபதன்  மனதை  புரிந்து கொண்ட அவரின் அமைச்சர் ரிஷ்யசிருங்கதிற்கு சென்று துர்வாசரை சந்திக்கலாம் என புறப்படும்போது அஸ்வத்தாமன் துருபதனிடம் ஆசிர்வாதம் வாங்குகிறான். என்ன எண்ணிக்கொண்டு துருபதன் ஆசிர்வாதம் வழங்கி இருப்பான்? அப்போது அஸ்வத்தாமன் கண்ணீருடன் கூறுகிறான் "“இப்பிறவி முழுமையும் இருக்கிறது எனக்கு அரசே”  என்று. பிறகு குருஷேத்திரத்தின் மற்றொரு கண்ணியாகிய  பாஞ்சாலி பிறப்பு. இதை எல்லாம் கோர்க்கும்போது " இந்த பூமியைவிட்டு செல்லும்போது வஞ்சத்தோடு செல்லவேண்டுமா? வஞ்சத்தை தீர்த்துவிட்டா ? என்று தோன்றியது. ஆனால் இவர்கள் வரலாற்று நாயக நாயகியர் இவர்களுக்கு பிறகு வரலாறே மாறுகிறது ஆனால் நீ உண்டும் உறங்கியும் உயிர் மட்டுமே வாழும் கோடானுகோடி மானுட புழுக்களில் ஒருவன் என்றும் மனது கூறுகிறது.  துருபதன் சத்ராவதியை விட்டுகிளம்பும்போது அஸ்வத்தாமனிடம் பத்ரர் கூறுகிறார் "“அரசே, போரில் நிகழ்வதையெல்லாம் எவரும் வாழ்வில் நிகர் செய்துவிடமுடியாது. கருணையாலோ தன்னிரக்கத்தாலோ அதிகாரத்தை விளங்கிக்கொள்ளமுடியாது என்பதே அரசுநூலின் முதல்விதி. அந்த எல்லையைக் கடக்காமல் எவரும் ஷத்ரியர் ஆகமுடியாது. தங்கள் தந்தைக்கும் மூதாதையருக்கும் சத்ராவதியின் குடிகளுக்கும் செய்யவேண்டிய கடன்கள் எஞ்சியிருக்கின்றன. உடலையும் உள்ளத்தையும் காத்துக்கொள்ளுங்கள்” என்று .ஆம் குருஷேத்திரத்தில் நிற்பவர்கள் அனைவரும் கருணையை தன்னிரக்கத்தை கைவிட்டவர்கள். நிழல் உருக்களுக்கு கடன்பட்டவர்கள்.

வாரணவதத்தில் பாண்டவர்கள் இறந்தபின் அஸ்தினபுரியின் அமைச்சரவைக்கு பீஷ்மர் வரும்போது அர்ஜுனனின் இழப்பை பெரிதாக பொருட்படுத்தாதவராக தோன்றும் துரோணரிடம் பீஷ்மர் அஸ்வத்தாமன் நலம் விசாரிக்க “இன்று இருப்பவர்களில் கர்ணனும் என் மாணவனே. அர்ஜுனனுக்கு நிகரானவன். அஸ்வத்தாமனும் கர்ணனுடன் வில் குலைக்க முடியும்.அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனை பலராமரின் மாணவர் என்று சொல்கிறார்கள். துரியோதன மன்னர் உண்மையில் கதாயுத்தத்தின் அடிப்படைகளை என்னிடம்தான் கற்றார் என்பதை மறந்துவிடுகிறார்கள். அத்துடன் அவருக்கு வலக்கை கர்ணன் என்றால் இடக்கை அஸ்வத்தாமன் அல்லவா?”பீஷ்மர் “அஸ்வத்தாமன் எப்படி இருக்கிறான்?” என்றார். துரோணர் முகம் மலர்ந்து “நலமாக இருக்கிறான். அவன் நாடாளவே பிறந்தவன் என்கின்றனர் சூதர். இன்று பாரதவர்ஷம் முழுக்க அவனைப்பற்றியே மன்னர்கள் அஞ்சுகிறார்கள். சத்ராவதி இன்று பாரதவர்ஷத்தின் பெரும் துறைமுகமாக ஆகிவிட்டது. நாளொன்றுக்கு இருநூறு பெருநாவாய்கள் வந்துசெல்கின்றன அங்கே. கருவூலம் மலைத்தேன் கூடு போல பெருத்து வருகிறது. சில வேள்விகளைச் செய்யும் எண்ணம் அவனுக்கு உள்ளது. அதன்பின் அவனை சத்ரபதி என்றே ஷத்ரியர்களும் எண்ணுவார்கள்.துரோணர் கைகளை வீசி கிளர்ச்சியுடன் “இத்தனை அரசு சூழ்தலை அவன் எங்கிருந்து கற்றான் என்றே நான் வியப்புறுவதுண்டு. அவன் அன்னை அவனுடன் இருக்க விழைந்து சத்ராவதிக்கே சென்றுவிட்டாள். அங்கே அவளுக்கென கங்கைக்கரையிலேயே அரண்மனையும் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரும் அளித்திருக்கிறான். என்னை அங்கே அழைத்தான். நான் இங்குதான் என் ஆசிரியப்பணி என்று சொல்லிவிட்டேன்” என்றார். பீஷ்மர் “அவன் நல்லரசை அமைப்பான் என்று நான் எண்ணினேன்… நல்லது” என்றார்.துரோணர் இருக்கையில் முன்னகர்ந்து “அவனைப்பற்றி பாடிய ஒரு சூதன் இன்று பாரதவர்ஷத்தை ஆளும் சக்ரவர்த்தியாகும் வீரமும் ஞானமும் உடையவன் அஸ்வத்தாமன் மட்டுமே என்றான். அந்தக்காவியத்தை இங்கே என்னிடம் கொண்டுவந்து காட்டினான்” என்றார். அதன்பின்னரே அவர் பிழை நிகழ்ந்துவிட்டது என்று உணர்ந்தார். உடலை அசைத்து “நான் சொன்னேன், அது நிகழும் என்று. பாரதவர்ஷத்தை கௌரவ இளவரசர் ஆளும் நாள் வரும். அப்போது அருகே வில்லுடன் நிற்பவன் அவன். அவன் கொடிக்கீழ் பாரதவர்ஷம் அன்றிருக்கும் அல்லவா?” என்றார். பீஷ்மர் புன்னகையுடன் “உண்மை” என்றார். இதை மீண்டும் படிக்கும்போது "அடபாவிகளா எல்லாருக்கும் இதே எண்ணம்தானா என்று தோன்றியது. 

பிறகு அஸ்வத்தாமனின் உத்தரபாஞ்சாலநாட்டை சேர்ந்த  காளகூடத்தில்  சிருங்கசிலை எண்ணும் ஊர் அமைத்து பகன் தனியரசு அமைக்கமுயல அவனை தோற்கடிக்கும் பொருட்டு அஸ்வத்தாமன் போர்தொடுக்கிறான். ஆரம்பத்தில் வீழ்ந்தாலும் பிறகு சுதாரித்து புத்திசாலித்தனமாய் காத்திருக்கிறான். ஆனால் பகன்  அவனை ஏமாற்றி தப்பிவிட கடுப்பில்[அகத்தில் ஒரு நரம்பு முறிந்தது] அந்த ஊரையே எரிக்க ஆணையிடுகிறான். "அஸ்வத்தாமன் எரியை ஆள்வதில் பெரும்திறல் கொண்டிருந்தான்,நச்சுப் புகை கக்கும் ரசங்களை சிறுகுடுவைகளிலாக்கி அம்புகளின் முனைகளில் பொருத்தி ஏவும் முறையை  உருவாக்கியிருந்தான் என வெண்முரசு கூறுகிறது. 
பிறகு பாஞ்சாலியின் சுயவரத்தின் போது அனைவரும் அஸ்வத்தமனுக்காக காத்திருக்கிறார்கள்."பச்சைநிறப் பட்டின் மேல் மணியாரங்கள் சுற்றப்பட்ட முடியும் பொன்பட்டு சால்வையும் அணிந்து அஸ்வத்தாமன் கைகூப்பியபடி நடந்துவந்தான். அவனை துருபதனே அழைத்துவந்து அவையில் அமரச்செய்தார் என வெண்முரசு கூறுகிறது. துருபதணும் அஸ்வத்தாமனும் அந்த தருணத்தில் என்ன எண்ணி இருப்பார்கள்? 

பிறகு பாஞ்சாலியுடன் முதலிரவு கொள்ள செல்லும் பீமனிடம் குந்தி " அஸ்வத்தாமன் பெரிய எதிரி எனவும் , அவனை வெல்லவேண்டும் " என்று எண்ணி அதை திரவ்பதி மூலம் தர்மருக்கு சொல்லும்படி வற்புறுத்துகிறாள். ஆனால் அதை பீமன் மறந்துவிடுகிறான். உணமையிலே பீமன் அப்படி மறந்துவிடுகிற ஆளா என்ன ?
பிறகு பாண்டவர்களுக்கு எதிரான கவுரவர்களின் காம்பில்ய படையெடுப்பின் போது கவ்ரவர்களோடு போரிடுகிறான். ஆனால் கவுரவர்கள் தரப்பு தோற்கிறது. ஆனால் திருஷ்டதும்யுனனை அஸ்வத்தாமன் வீழ்த்துகிறான்.ரிஷபன் " ”அஸ்வத்தாமரை எதிர்கொள்ள அர்ஜுனராலும் கர்ணராலும் மட்டுமே இயலுமென ஏன் சொன்னார்கள் என அன்று கண்டேன். யாதவரே. என் விழிகளால் அவர் கைகளை பார்க்கவே முடியவில்லை. புதர்மறைவில் இருந்தவர்களை இலையசைவைக்கொண்டே அறிந்து வீழ்த்தினார். விண்ணிலெழுந்த அம்புகளை முறிக்கும் வில்லவர்களை கண்டிருக்கிறேன். அம்பெடுக்க எழுந்த கையை ஆவநாழியுடன் வெட்டி வீசும் வில்லவரை அன்று பார்த்தேன்.” என கிருஷ்ணனிடம் கூறுகிறான். ஆனால் கிருஷ்ணை என்னும் கிருஷ்ணனின் ஆடிபிம்பம் அஸ்வத்தாமனை "சதக்னியினாலவது " கொன்று இருக்கவேண்டும் என்று கூறுகிறது. 


பிறகு அனைத்து குடிவிழாக்களிலும் ,  அரசவைகளிலும் கலந்து கொண்டு இப்போது குருஷேத்திரத்தில் தந்தையோடு வந்து நிற்கிறான் அஸ்வத்தாமன்.  

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்