Monday, January 14, 2019

ஒளிந்திருந்து சீறி எழும் நாகம்       

மனிதன் மற்றவருக்கு தீங்கு செய்கிறான். சிலசமயம் எவ்வித காரணமுமின்றிகூட  ஒருவருக்கு தீங்கு செய்கிறான். யாரோ ஒருவன் தனக்கு செய்த தீங்குக்காக எவ்வித தவறும் செய்யாத மற்றொருவருக்கு தீங்கு செய்கிறான்.  ஒரு தீங்கு  அதிகமாக பாதிப்பது அவன் மனதைத்தான். அத்தீங்கு ஒரு நோய்த்தொற்றைப்போல   அவன் எண்ணங்களை உண்டு வளர்ந்து நஞ்சென  அவன் உள்ளத்தில் திரளுகிறது. அந்த நஞ்சின் கடுமை தாளாமல் அதை திரும்பவும் தனக்கு தீங்கிழைத்தவன் மேல் மற்றொரு தீங்கென உமிழ்கிறான். அல்லது தொடர்பே இல்லாத யாரோ ஒருவன் மீது உமிழ்கிறான். அந்த மற்றொருவன் மனதில் நோய்த்தொற்றை உருவாக்குகிறது.  இது  வஞ்சமென பேருருக்கொண்டு அவன் மனதை ஆக்கிரமித்து அவனை தன் வசப்படுத்திக்கொள்கிறது.  அந்த  வஞ்சம் அவன் மனதில் ஆறா ரணமாக இருந்துகொண்டே இருக்கிறது.   எல்லாவற்றையும் கரைத்தழிக்கும் காலத்தால்கூட அது சீக்கிரம் கரைந்துவிடுவதில்லை.    ஒரு முறை யாரோ எவருக்கோ இழைக்கப்பட்ட தீங்கு  மறைவதேயில்லை. அது வஞ்சமென உருக்கொண்டு அவனுள் இருந்துகொண்டே இருக்கிறது. அது அவன் குடும்பத்தின் வஞ்சமென அவன் இனத்தின் வஞ்சமென  பெருகி  தலைமுறை தலைமுறையாக அழியாமல் இருப்பதும் உண்டு. வஞ்சமெனும் இந்நோய்த்தொற்றை தவிர்ப்பது மிகக் கடினம்.  கொள்ளைநோயென இது பெருகி மனிதர்களை வதைத்து வருகிறது. இப்படி மனதில் சேரும் நஞ்சு  ஒருவரை ஒருவர் நம்புவது, ஒருவருக்கொருவர் உதவுவது, ஒருவரை ஒருவர் சினேகிப்பது, ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்வது  போன்றவற்றை பாதிக்கிறது. 

        சுப்ரியை தன்னைக் கவர்ந்து வந்த மணம் புரிந்த   கர்ணன்மேல் இவ்வாறாக வஞ்சம் கொண்டிருந்தவள். அதன்  காரணமாக அவள் சொல்லாலும் நடத்தையாலும் அவன்மேல் நஞ்சினை உமிழ்ந்துகொண்டிருந்தவள். ஆனால் கர்ணனின் பேருள்ளம் அவற்றைப் பொருட்படுத்தாமல்  அவள்மேல் வஞ்சம் கொள்ளாதிருந்ததாக நாம் எண்ணியிருந்தோம். ஆனால் அவனுள் ஒரு சிறு விதையென அது இத்தனை நாள் உறங்கி இருந்தது.  ஆனால் இவ்வளவு ஆண்டுகள் கழிந்து அவன் உள்ளத்தில் ஒளிந்திருந்த வஞ்சமென்ற நாகம் சீறி எழுந்து அவள் மேல் அவள் மனதைப் பொசுக்கி சிதைக்கும் வண்ணம் நஞ்சினை உமிழ்கிறது.   அவன் அருந்திருந்த மது இல்லாத வஞ்சத்தை உருவாக்கவில்லை, மாறாக ஏற்கெனவே ஒரு துளியென ஊறந்திருந்த வஞ்சத்தை  உருப்பெருக்கிஆடியென பெருக்கியது.
கோகர்ணன் “அரசே, வாசுகிக்கு நிகரான நஞ்சு உங்கள் நாவில் உள்ளது” என்றான். கர்ணன் கண்களைச் சுருக்கி “என்ன சொல்கிறாய்?” என்றான். “இப்போது நீங்கள் அரசிமேல் உமிழ்ந்தது மானுட உள்ளம் உருவாக்கிக்கொள்வதிலேயே ஆற்றல் மிக்க நஞ்சு” என்றான் கோகர்ணன். “என்ன?” என்று கர்ணன் மீண்டும் கேட்டான். “களிமயக்கில்லையேல் உங்கள் அறம் அதைச் சொல்ல ஒப்புக்கொண்டிருக்காது. களிமயக்கு என்பது ஒரு நுட்பமான நடிப்பு மட்டுமே. எந்தக் களிமகனும் அவனுக்குள் இல்லாத ஒன்றை சொல்லிவிடுவதில்லை” என்றான் கோகர்ணன்.
       நம் மனதில் வஞ்சத்தை நாம் ஒரு வகையில் விரும்புகிறோம். அதை எப்படியாவது இன்னும் இன்னும் என பெருக்கிகொள்ளவே விழைகிறோம். அந்த வஞ்சத்தைபோக்கிக்கொள்ள அமையும் சந்தர்ப்பங்களை தவிர்க்கிறோம். ஏனென்றால் அது நாம் இதுவரை கொண்டிருந்த வஞ்சத்தை அர்த்தமிழக்கச்செய்கிறது. ஒருவகையில் வஞ்சம் நம் அகங்காரத்தை ஊதிப் பெருக்குகிறது. அதனால் பொறுத்துக்கொண்டு சமாதானமாவதை  நம் அகங்காரம் ஏற்றுக்கொள்வதில்லை. 
கோகர்ணன் “அவர் இங்கே வந்தது ஏன் என்று நீங்கள் அறிவீர்கள், அரசே” என்றான். “அவர் உங்கள் காலடியில் விழுவதற்காக வந்தார். இதுகாறும் கொண்டிருந்த அனைத்துக் கவசங்களையும் களைந்துவிட்டு வந்திருந்தார். அதை நன்கறிந்தமையால்தான் நீங்கள் அந்த நச்சு அம்பை உங்கள் நாணில் பூட்டினீர்கள்.” கர்ணன் போதும் என்பதுபோல கையை காட்டினான். “இத்தனை நாட்கள் நீங்கள் அவரை பொறுத்தருளினீர்கள். அத்தகைய பெரும்பொறை மானுடர்களுக்கு இயல்வதல்ல. பாறைக்குள் நீர்த்துளி என ஒரு சொட்டு நஞ்சு உள்ளே எங்கோ சென்று சேர்ந்துகொண்டே இருந்திருக்கிறது.”
 ஆனால் ஏன் கர்ணன் இன்று அந்நஞ்சைசை சுப்ரியை மேல் உமிழ்கிறான்?  வேள்வியவையில் அந்தணர்களலும் ஷத்திரியர்களாலும் அவமதிக்கப்பட்டதின் நஞ்சு அவன் உள்ளத்தில் முன்னர் உறங்கிகியிருந்த நஞ்சை விழிக்க வைத்திருக்கிறது சேர்ந்திருக்கலாம். அவமதிப்பைவிட அவன்தோழனான துரியோதனனுக்கு உதவவேண்டிய, தன் செஞ்சோற்றுக்கடன்  தீர்ப்பதற்கான வாய்ப்பை இழக்குபடியானது அவனுக்கு இழைக்கக்கப்பட்ட தீங்கென உணர்ந்திருப்பான்.  அதன் காரணமான வஞ்சம் அவன் உள்ளத்தில் புகைந்துகொண்டிருந்தது.   அந்தநேரத்தில் சுப்ரியை அவன் முன்னே வந்தாள் அந்த நஞ்சு முழுதையும் அவனையறியாமலேயே அவள்மேல் உமிழ்ந்துவிட்டான். சிவதர் அதை நன்கறிந்தவராக உள்ளார்.  
“நமக்கிழைக்கப்பட்ட பிழைகளை நாம் பிறருக்கு இழைத்து ஆறுதல் கொள்கிறோம்” என்றார் சிவதர்.

   இப்படிப்பட்ட  வஞ்சம் என்ற நோய் தன்னுள் சேராமல் தவிர்க்க, தன்னிடமிருந்து மற்றவருக்கு பரவாமல் தடுக்க ஒருவர் என்ன செய்யவேண்டும் என சிந்தித்துப்பார்க்கிறேன்.  எப்போதும் நிபந்தனையற்று மன்னிப்பவராகவும், உலகின் எந்தத் தவறுக்கும் தான் பொறுப்பு என உணர்ந்து மன்னிப்பு கோருபவராகவும் இருக்க வேண்டும்.  அப்படி இருக்கும் ஒருவர்  அமைதியின் தூதுவராக  இருப்பார்.   அவரிடமிருந்தே சமாதானமும் சாந்தியும் பெருகி இந்த அகிலத்தை நிறைக்கும்.


தண்டபாணி துரைவேல்