Tuesday, January 15, 2019

கர்ணனின் துயரம்



 “பின்னர் கர்ணன் பெருமூச்சுடன் பீடத்தில் உடல் தளர்த்தி கால் நீட்டி அமர்ந்தான். தலையை அண்ணாந்து பீடத்தின் சாய்வில் வைத்துக்கொண்டு கண்களை மூடினான். அவன் தசைகள் ஒவ்வொன்றாக தொய்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். மெல்லிய விம்மல் போலொன்று எழ அவன் நெஞ்சு அசைந்தது. விழிகளில் இருந்து ஊறிய நீர் இருபுறமும் கன்னங்களில் வழிந்தது. 

பீஷ்மர் களம்பட்ட செய்தியறிந்த பின் கர்ணன் அடைந்த துயரம் இவ்வாறு கூறப்படுகிறது.  பீஷ்மர் காலமெல்லாலம் கர்ணனை  ஒதுக்கி வைத்தவர். அவரின் இருப்பு காரணமாகவே அவன் தன் தோழன் துரியோதனனுக்காக போர் புரிய இயலவில்லை. துரியோதனன் களத்தில் தன் பிள்ளைகளை தம்பிகளை இழந்துகொண்டு  பெருந்துயருற்று இருக்கும் காலத்தில் அதைத் தவிர்க்க முயலாமல் அவன் உடனிருக்க முடியாமல் போனதற்கு பீஷ்மரின் இருப்பு முக்கிய காரணம்.  பீஷ்மர் போர் முடிவு வரை இருந்து துரியோதனன் வெற்றியடைந்தாலும் தோல்வியடைந்தாலும் கர்ணன் தன் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க முடியாத பெரும் துயருக்கு ஆளாவான். ஆகவே இப்போது பீஷ்மரின் வீழ்ச்சி அவனுக்கு இருந்த தடைகளை நீக்கி இருக்கிறது. பின்னர் ஏன் அவன்  துயறுற்று கண்ணீர் சிந்துகிறான் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.  
  
அதற்கு பீஷ்மரின் வீழ்ச்சி மட்டுமேகூட காரணமாக இருக்கலாம். பீஷ்மர் அவனை காலமெல்லாம் தவிர்த்து வந்தபோதிலும் அவர் அவன் மேல் அக்கறையும் பற்றும் கொண்டிருந்திருந்தார் என கர்ணன் ஒருவேளை உணர்ந்திருக்கக்கூடும். மாவீரரான பீஷ்மரை அவன் தந்தை என்று அவன் ஆழுள்ளம் கண்டிருக்கக்கூடும்.  பீஷ்மர் தன் வாழ்நாள் முழுதும் தன் விருப்பு வெறுப்புகளை பொருட்படுத்தாமல்  அஸ்தினாபுர அரியணை அமர்வோர்  கை ஆயுதமென இருக்கும் வாழ்வை கொண்டிருந்தவர். அதன் பொருட்டு அவருக்கான அறத்தை துறந்தவர். கர்ணனும் தன் நண்பன் துரியோதனனுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவன். அவன் விருப்பத்துக்காக தன் அறங்களை மாற்றிக்கொண்டவன். மேலும் பீஷ்மரும் கர்ணனும் ஒரே ஆசிரியரைக் கொண்டிருந்தவர்கள். ஆகவே  அவரில் கர்ணன் தன்னைக் கண்டிருப்பான். அவரின் வீழ்ச்சி அவனுக்கு தன்னுடைய வீழ்ச்சியென துயரளித்திருக்கலாம். மேலும் முதியவரான பீஷ்மர் தன் குலச் சிறுவர்களையே கொல்லும் நிலைக்கு இப்போர் தள்ளியிருந்தது. இது அவருக்கு எத்தகைய மனத் துயரத்தை தந்திருக்கும் என அவன் அறிந்து அதற்காக கண்ணீர் சிந்தியிருக்கலாம். 
     
அல்லது கர்ணன் போரில் அறத்திற்கு எதிரான தரப்பில் இருக்கவேண்டிய நிலையை எண்ணி துயருற்றிருக்கலாம். கர்ணனின் மனம்  பாண்டவர் தரப்பில்தான் அறம் இருக்கிறது என நினைத்திருக்கும். அதற்கு காரணம் பாண்டவர்களிடமிருந்து சூதாட்டத்தின் மூலம் நாடு கைப்பற்றப்பட்டது கர்ணனுக்கு சற்றும் ஒத்துக்கொள்ளாத முடிவாகும். பின்னர் சொன்ன சொல் படி நாடு திரும்பவழங்காமல் வாக்கு தவறியது கர்ணன் கொண்டிருந்த அறத்திற்கு மாறானது.  மேலும்  துரியோதனன்  பாண்டவர்கள் ஷத்திரியர்கள் இல்லையெனக் சொன்ன   காரணம்  கர்ணன் காலமெல்லாம்  அவமதிக்கப்பட்டு வருவதற்கான  அதே காரணம்.
   
இப்படியும் சிந்தித்துப் பார்க்கிறேன். தான் உண்மையில் யாருடைய மைந்தன் என்று கர்ணன் அறிந்தவனாகவோ அல்லது அத்தகைய  ஐயம் கொண்டவனாகவோ இருந்திருக்கலாம்.  அல்லது அவன் ஆழுள்ளம் தன் சொந்தச் சகோதரர்கள் என பாண்டவரை அறிந்திருக்கலாம். அவர்களை அவன் எதிர்த்து போரிடவேண்டியிருப்பதும் அப்போது அவர்களை, அவர்கள் மைந்தர்களை,  கொல்ல நேரலாம் என்பதும் அவனுக்கு பெருந்துயரளித்திருக்கலாம். இத்துயரத்தை ஒருவேளை அவன் புத்தி அறிந்திருக்காது. ஆனால் அவன் ஆன்மாவின் துயரென அவன் ஆழுள்ளம் கொண்டிருக்கலாம்.  வெளியில் சொல்ல முடியாத இந்தத் துயர் ஒருவேளை அவனிடம் கண்ணீராக வழிவதாக இருக்கலாம். 

நாகரே, கேளுங்கள்! பிறர் அறியாத ஆண்மகனின் துயர் தன்னந்தனி மதவேழத்தின் நோய் போன்றது. தெய்வங்கள் அன்றி பிறர் அதை அறியப்போவதில்லை. தெய்வங்களிடமும் அது முறையிடப்போவதில்லை.”
 உலகில் இருக்கும் எந்த ஒரு பெருங் காப்பியத்திலும் வெண்முரசின் கர்ணனைப் போன்ற துயர் மிக்க பாத்திரம் வேறெதுவும் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தண்டபாணி துரைவேல்