Thursday, January 17, 2019

பீஷ்மரும் கர்ணனும்



பீஷ்மர் கர்ணனை சம்பாபுரிக்கே சென்று கண்டமை குறித்து ஓர் கேள்வி விவாத தளத்தில் வந்திருந்ததுஅதன் சாத்தியக்கூறுகள் மற்றும் காலம் குறித்து. வெண்முரசு நிகழ்வுகளின் கால வரிசைப்படியே அந்நிகழ்வு அமைந்திருக்கிறது. 

பீஷ்மர் அஸ்தினபுரியின் பிதாமகர். அவருக்கு குடும்பத்தில் நிகழும் அனைத்தையும் ஒரு தெய்வ நோக்கில் குனிந்து பார்த்து அறிபவர். அவர் கண்களையும்கருத்தையும் தப்பி ஒன்றும் நிகழ்வதில்லை. இதை நமது வாழ்விலும் கண்டிருக்கலாம். வீட்டில் இருக்கும் வயதான அதிகாரம் உடைய மூத்தவரின் கண்களில் படாத குடும்ப விஷயங்கள் இருக்காது. பீஷ்மருக்கு யாதவ குலத்தில் இருந்து அஸ்தினபுரியின் அரசி வரவேண்டும் என்ற கணக்கு திருதாவின் மணத்திலேயே இருந்தது எனச் சொல்கிறது மழைப்பாடல். அவருக்கு காந்தாரத்திற்கு தூது செல்வதில் முதலில் ஒப்புதல் இல்லை. புதிதாக எழுந்து வரும் குடிகளில் இருந்துகுறிப்பாக யாதவர்களில் இருந்துதிருதாவுக்கு பெண் கொள்ளலாம் எனவும் எண்ணுகிறார். இந்த முடிவுக்கு அவர் வருகிறார் என்றால் எந்த யாதவகுடியார் அந்த பெண் போன்றவற்றையும் அவர் யோசித்திருக்கவே செய்திருப்பார். அப்படி ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்திருந்தால் அவளைக் குறித்து முழுமையாக அறிந்திருக்கவும் செய்திருப்பார். ஒரு வகையில் காந்தாரத்துடனான மண உறவுக்கு அவர் தயங்கியமைக்கு ஒரு காரணம் அவருக்கு அப்பெண்ணைப் பற்றிய விரிவான தகவல்கள் இல்லாமல் போனதும் கூடத்தான். இருப்பினும் திருதாவின் நலனுக்காக அவர் சத்தியவதியை நம்பிச் செல்கிறார்.

யாதவப் பெண்ணாக அவர் தேர்ந்தெடுத்தது குந்தியாகவே இருந்திருக்கும். ஏனென்றால் பாண்டுவுக்கு பெண் தேடுகையில் குந்தியை முன்மொழிபவர் அவரே. குந்திக்கு ஒரு மகன் இருப்பது அவர் கவனத்துக்கு வராது போயிருக்காது. அதை அறிந்தும் தான் அவர் குந்தியை பாண்டுவுக்கு தேர்ந்தெடுக்கிறார். ஒருவகையில் மற்றொரு சத்தியவதி. கர்ணனை அவள் இழந்த அன்று தான் அவளுடனான திருமண உறவைக் கோரி அஸ்தினபுரியின் தூது மார்த்திகாவதிக்கு வருகிறது. எனவே கர்ணனை அவர் அறிந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். மேலும் கர்ணன் யார் என்பது ஓரளவு திருதாவும் அறிந்திருந்தார் என்பதை அவர்களின் முதல் சந்திப்பிலேயே அறிந்து கொள்ளலாம். எனவே பீஷ்மரும்கர்ணனும் இளமையிலேயே சந்திப்பது சாத்தியமான ஒன்றே. மேலும் பீஷ்மரின் குணாதிசயம் முதற்கனல் துவங்கி ஒன்றேஅவர் அரசியல் மதியூகி அல்லர். ஒரு அரசியல் சிக்கலுக்கு அவர் அறம் என நம்பும் ஒரு தீர்வையே எப்போதும் முன்வைப்பவர். எனவே கர்ணனைக் கண்டதும் கொஞ்சும் அந்த தாதை எந்தஅரசியல் கணக்குகளையும் இட்டுக் கொஞ்சுபவர் அல்லர். பேரன்பே உருவான ஒரு பிதாமகர் மட்டுமே. இந்த பிதாமகரே கர்ணனின் கனவுள்ளத்திலும்ஆழுள்ளத்திலும் எஞ்சும் முகம். எனவே தான் அவரின் மரணம் அவனில் அத்தகைதோர் தளர்ச்சியை ஏற்படுத்துகிறது. வெண்முரசு உருவாக்கும் கதாபாத்திர முழுமைக்கு இது ஒரு சான்று.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்