அறிவியல் துறையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது ஆய்வுக்கட்டுரைகள் உலகின் பார்வைக்கு வந்தவண்ணம் உள்ளது. அவற்றை அந்தந்தத் துறையில் இல்லாத மற்றவர்களால் படித்து புரிந்துகொள்வது மிகக் கடினம். அதற்கு அவர்கள் அதை வேண்டுமென்றே கடினமாக்கி மந்தண சொற்களால் எழுதுகிறார்கள் என்பது பொருளல்ல. அவற்றை அனைவருக்கும் புரியும் எளிய மொழியில் எழுத இயலாது என்பதே காரணம் ஆகும். அறிவியல் உண்மைகள் சில எளிய சொற்களில் சொல்லப்பட்டாலும் அதிலிருந்துஒரு மேம்போக்கான பகுதியையே ஒருவன் அறிந்துகொள்கிறான். உண்மையில் அதை ஒருவன் முழுதுணர்ந்து புரிந்துகொள்ள வேண்டினால். அவன் அதற்காக நீண்ட நாட்கள் முயலவேண்டியிருக்கும். முதலில் அவன் அதற்கான அருஞ்சொற்பொருட்களை அறிந்துகொள்ள வேண்டும், அவற்றை புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு அருஞ்சொல்லையும் புரிந்துகொள்ள அதற்கு அடிப்படையான அறிவை அவன் பெற வேண்டும். அதற்காக மேலும் பல அருஞ்சொற்களை அறிந்துகொள்ள வேண்டும். ஆகவே ஆய்வுக்கட்டுரை எழுதப்பட்ட துறையில் இல்லாத ஒருவர் அதை புரிந்துகொள்ள அவர் அதற்கான அடிப்படைக் கல்வியிலிருந்து துவங்க வேண்டும். அப்படிப் படிக்கும்போது நாம் அதை பிழையின்றி சரியாக உள்வாங்கிக்கொள்கிறோமா என நாம் சில பயிற்சிகளைச் செய்து சரிபார்த்துக்கொள்ளவேண்டும். இப்படிப் படித்து தேர்ந்து ஆய்வுக்கட்டுரை இருக்கும் அறிவின் உச்சத்திற்கு சென்ற பிறகுதான் நாம் அந்தக் ஆய்வுக் கட்டுரையையே அணுக முடியும். பின்னர் நாம் நம் எண்ணத்தைக் குவித்து கவனமாக படிப்பதன் மூலமே அந்த ஆய்வுக் கட்டுரை சொல்வதை அறிந்துகொள்ள முடியும். ஏனென்றால், அக்கட்டுரை மிகத் தேவையான விளக்கங்களை மட்டும்கொண்டு மிகப்பொருத்தமான அருஞ்சொற்களைக்கொண்டு மிகவும் சுருக்கி எழுதப்பட்டவையாக இருக்கும். ஆகவே ஆய்வுக்கட்டுரைகள் அதிலிருக்கும் சூத்திரங்கள், தேற்றங்கள், கருதுகோள்கள் எல்லாம் அத்துறையில் இல்லாத ஒருவருக்கு புரியாத நுண்சொற்களாகவே தென்படும். அவனைப்பொருத்தவரை அவை பொருளற்ற வெற்றுசொற்கள் மட்டுமே.
இது மனிதன் அறிவியல் மற்றும் தத்துவத்தில் வளர்ச்சி அடையத் துவங்கிய காலத்திலிருந்து இருந்து வருவதாகும். இத்தகைய நுண்சொற்களாலான ஆய்வுக் கட்டுரைகளிருந்து உருக்கொண்டு எழுவதே மனிதனின் அனைத்து நுண்கருவிகளும். புவிப்புலம் தாண்டிச் செல்லும் விண்ணூர்திகளை உருவாக்கி செலுத்தி வழிநடத்துவது எல்லாம இத்தகைய அறிவியல் நுண்சொற்களாலானவைதான். அணுவைப் பிளந்து அதன் அற்றலை வெளிக்கொணர்ந்து ஆக்கத்திற்கோ அழிவுக்கோ பயன்படுத்தக் காரணமாக இருந்தது எல்லாம் இப்படி ஆய்வுக்கட்டுரையில் நுண்சொற்களாக இருந்தவையே. பெருவெளியின் எண்ணற்ற விண்மீன்கள் கோள்களின் இயக்கத்தை ஒரு சில எழுத்துக்கள் கொண்ட ஒரு சிறிய சூத்திரம் வழிநடத்துகிறது. இத்தகைய சூத்திரங்களை அறிவியல் அறிஞர்கள் கல்விப்பயிற்சி என்ற தவத்தாலும், ஆய்வு என்ற தியானத்தாலும் கண்டறிந்து எழுதி வைக்கிறார்கள். ஒருவன் தானும் அந்தக் கல்வித் தவத்தைச்செய்தே அந்த நுண்சொற்களின் பொருளை முழுதுமாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
பரசுராமர் என்ற பெரும் ஞானி தன் தியானவெளியில் ஒரு திறன் மிக்க வில்லை கண்டடைகிறார். அது அப்போது பருவடிவில் இருக்கவில்லை. அது சூத்திரமாக இருக்கிறது. தான் கண்டுகொண்ட அந்த வில்லை நுண்சொற்களாலான செய்யுளாக குறித்து வைத்திருக்கிறார். அந்த வில்லைப்பயன்படுத்தும் தகுதி கர்ணனுக்கு இருப்பதாக உணர்ந்து அதை சொல்வடிவாக கர்ணனுக்கு அளிக்கிறார்.
பரசுராமர் முழந்தாளிட்டு அமர்ந்து தன் இரு கைகளாலும் வாய் மூடி அவன் காதருகே உதடு கொண்டுவந்து அந்தப் பாடலை சொன்னார். இருமுறை அதை திரும்பச்சொல்லி “மூவகையில் பாடம் செய்து கொள்க!” என்றார். அவன் அதை ஜட, த்வஜ, கன முறையில் சொல்லிக்கொண்டான்.
பேராற்றலை வெளிப்படுத்த உதவும் வில் ஒன்று ஒரு சூத்திரமாக நுண்சொற்களால் கூறப்படுகிறது. புராணங்கள் வில் ஒன்றை கர்ணனுக்கு தந்தார் என்று சொல்லிவிடும். ஆனால், வெண்முரசு கர்ணன் அந்த வில்லை அடைந்ததை மிகவும் தர்க்கபூர்வமாக காண்பிக்கிறது. காளிகர் தன் உதவியாளர்களுடன் அந்த நுண்சொற்களை பதினெட்டு நாட்கள் ஆய்ந்தறிந்து முழுதுணர்கிறார். பின்னர் அந்த நுண்சொற்களிலிருந்து விஜயம் என்ற வில் பருவடிவாக வார்த்தெடுக்கப்படுகிறது.
அவர்கள் அனைவருக்கும் பொதுவான உள்ளமொன்று அங்கே எழுந்து வந்தது.
அதில் மானுடர் உளம் திரள்கையிலெல்லாம் தோன்றும் சொல்லரசி எழுந்தருளினாள். ஒருவர் பிறிதொருவரிடம் சொல்லாமலேயே அச்சொற்கள் என எழுந்த பொருளை, அப்பொருளென வெளிப்படும் பிறிதொன்றை, அப்பிறிதொன்று தொகையான முழுதொன்றை கண்டுகொண்டனர். பதினெட்டு நாட்களில் அந்த வில்லின் வடிவை அசையா, அழியா பொதுக்கனவென அவர்கள் எண்மரும் ஒரே தருணத்தில் கண்டனர்.
ஒரு புராண அதி மானுட நிகழ்வாக இருந்த ஒன்றை வெண்முரசு தர்க்கபூர்வமாக சாத்தியமான ஒன்று என்று வாசகர்களை உணரவைக்க்கும் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பானதாகும்.
தண்டபாணி துரைவேல்