அன்புள்ள ஜெ
வெண்முரசில் போர்க்களக் காட்சியில் ‘அவன் கவசங்கள் உடைந்து தெறித்தன’ என்று வந்துகொண்டெ இருக்கிறது. இது ஒரு நடைமுறைச் சிக்கலால் எழுதப்படுவதும்கூட. மூலமகாபாரதத்தில் அவன் குறிதவறான நூறு அம்புகளால் அடித்தான். அதன்பின் முந்நூறு அம்புகளால் அடித்தான் என்றெல்லாம் வந்துகொண்டே இருக்கும். குறிதவறாத அம்புகளால் அடித்தும் எதிரி ஏன் சாகவில்லை என்று தோன்றும். அந்தக்கால போர் வர்ணனை அப்படிப்பட்டது. அதை நவீனச்சூழலில் சொல்லும்போது அம்புகள் கவசங்களை உடைத்தன என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். ஆனால் கவசங்கள் உடைந்தன என்ற வரி எனக்கு பெரிய அர்த்தம் அளித்தது. கடைசியில் கவசம் உடைந்து அழிந்து மனிதனாக நிற்கும்போதுதான் மரணம் நிகழ்கிறது. அத்தனை கவசங்களும் உடையும் இடம்தான் போர்க்களம்
மகேஷ்