Friday, January 25, 2019

கர்ணனும் குந்தியும்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

இன்று கார்கடலில்  கர்ணன் குந்தியை பார்த்து “அரசகுடியினர் பெருங்கவிஞன் ஒருவனின் கவிதைச்சொல்போல சொல்லில் செறிவுகொண்டவர்கள் என்று ஒரு சூதர்சொல் உண்டு. தாங்களோ ஓர் ஊழ்கநுண்சொல்லின் ஆழம் கொண்டவர்கள். இப்போது அச்சொல் மேலும் ஒலியின்மை நோக்கி சென்றுள்ளது”  என்று கூறுகிறான். இது நான் பரம்பரை உயர்குடியினரை கண்டு வியப்பது. அவர்கள் அனைவரும் எதோ ஒரு ஊழ்க நுண்சொல்லில் வாழ்பவர்கள் என்று இப்போது தோன்றுகிறது. வேறு எதை பற்றியும் சிந்திக்கமாட்டார்கள். அப்டி சிந்தித்தாலும் அது அந்த ஊழ்க நுண்சொல்லிலேயே  போய் முடியும். வெளியில் இருந்து பார்ப்பதற்கு எனது தாழ்வுமனப்பான்மையினால் "இதுலாம் ஒரு வாழ்க்கையா?" என கூறிக்கொண்டு,எனக்குள் சப்பைகட்டு கட்டிகொண்டு பொறாமையில் எரிவேன்.  ஆனால் அவர்கள்தான் இந்த உலகம்.அதை எனது உள்ளமும் அறியும். வேறு என்ன ? இயலாமைதான்.ஆனால் அவர்களின் ஊழ்க நுண்சொல் ஒலியின்மையில்  இருப்பதை நான் உணர்ந்ததில்லை. அதற்கும் அகங்காரம்,அறியாமை தான் காரணமாக இருக்கும். 

குந்தி நிழல் என நெருங்கி வந்து,எவ்வளவு தர்க்கபூர்வமாய் கர்ணனுள் நுழைய முயல்கிறாள் என்று வாசிக்கையில் மனிதர்களோடு நாம் எப்படி வாழ்வது என்றே திகைப்பாய் இருக்கிறது.  முதலில் அர்ஜுனனின் உடல்நிலையில் இருந்து ஆரம்பிக்கிறாள். பிறகு அவன் "உனது உடன்பிறந்தவன் என்கிறாள், பிறகு தாயின் ஆசையை நிறைவேற்றிவிடவேண்டும் என தவிப்பான் என நினைத்து தனது தவிர்க்க முடியாத விழைவை சொல்கிறாள். பிறகு ஷத்ரியர்களை குறித்து, பிறகு யாருக்கு பதிலிதியாய் கர்ணன் போர்களத்திற்கு வந்து நிற்கிறானோ அதே பீஷ்மரை வலுவாய் குறை சொல்கிறாள், பிறகு அன்னையின் பாசம் கொண்டு பேசுகிறாள் ,அழுகிறாள், ஆனால் கர்ணன் யார் ? அவளுக்கு பிறந்த நாகம் அல்லவா? அவனும் கொத்துகிறான்.  இது எதுவும் வொர்க் அவுட் ஆகலை என்றாலும் அவன் மனதை கலக்கிவிட்டாள். பிறகு கூறுகிறாள் ....." நான் உன்னோடு அரசியல் பேச வந்தேன் " என்று. என்ன ஒரு மாயை ? ஆனால் கர்ணன் " எனது தந்தை யார் ?" என்று கேட்பார்கள் என அவளிடமே கூற அவள் அதை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை . உள்ளத்தில் ஊறியிருக்கும் ஊழ்க நுண்சொல் வழிநடத்த,சென்றுகொண்டே இருக்கிறாள். பிறகு அரசு, சகோதர அன்பு,  எல்லாவற்றையும் கூறி  "திரௌபதி" உனக்கு கிடைப்பாள் என்று கூறும்போது உணமையிலே மனம் துணுக்குற்றது. பாரதவர்ஷத்தில் இன்றுகூட பல அன்னையர்கள் தினமும் உதிர்க்கும் வார்த்தைகள். ஆனால் கர்ணன் அவளை, ஹஸ்தினபுரியை எல்லாம் அசால்டாக ஓதிக்கிவிடுகிறான். கர்ணனுக்குள்ளும் ஓடும் ஒரு ஊழ்க நுண்சொல் அவளை துரத்துகிறது. கடைசியில் எங்கு தொடங்கினார்களோ அதே குலதகறாறில் வந்து இருவரும்  முட்டுகிறார்கள். பிறகு இந்த உலகம்,இந்த நிகழ்காலம் குறித்து எல்லாவற்றிக்கும்  கர்ணன் பதில் வைத்திருப்பதை கண்டு " அடுத்த ஜென்மம், விண் ஏகுதல் பற்றியும் இறந்தபின் அவனுக்கு சூளும் பெரும்பழியை பற்றியெல்லாம்  கூறுகிறாள்"  கர்ணன் அதையும் புறந்தள்ள தொய்ந்த நடையோடு கிளம்புகிறாள். 

கர்ணன் -குந்தி சந்திப்பு ஒரு உச்சகட்ட நாடக காட்சி. கதகளியில் நீங்கள் நுட்பமான வேறுபாடுகளுடன் பல நிகழ்ச்சிகளில்  அந்த காட்சியை கண்டிருப்பதாக கூறியிருக்கிறீர்கள்.அதை தர்க்கபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும்   எல்லா ஆங்கிள்களிலிருந்தும் நாங்கள் பார்க்க ஒரு சமநிலையில் கொடுத்து இருக்கிறீர்கள். குந்தி வெளியேறும்போது எந்த உணர்வும் இல்லாமல் மனம் வெறுமையாய் தான் இருந்தது . ஆனால் இன்னும் சில நொடிகளில்  கர்ணன் " அன்னையே " என்று அழைக்கபோவதை நினைத்தால் தான் நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பிக்கிறது. அதுதான் கர்ணனின் உண்மையான ஊழ்கநுண்சொல். 

ஸ்டீபன் ராஜ் குலசேகரன்