மனிதனுக்கு தன் வாழ்நாளில் பெரும் சலிப்பு தருவதாக இருப்பது ஏதோ ஒன்றுக்காக செயலின்றி காத்திருப்பது ஆகும். நிகழுமா நிகழாதா என்று அறியாது காத்திருக்கும் காலத்தில், ஒவ்வொரு நொடியையும் ஒரு கனத்தப் பாறையை நகர்த்துவதைப்போல கடினப்பட்டு நகர்த்துகிறான். மேலும் நிகழ்வின் மீது எதிர்பார்ப்பு அதிகம் இருக்கையில் இந்தக் காத்திருப்பு மிகவும் சுமை மிகுந்ததாகவும் துயர் தருவதாகவும் ஆகிறது.
“நாம் காத்திருப்போம். நமக்கு உரிய நாள் வரும். நம்முடைய தெய்வங்கள் அதை நமக்கென அமைக்கும்” என்று கர்ணன் சொன்னான்.
கர்ணன் மகாபாரதப்போரில் கலந்துகொள்ள காத்திருக்கிறான். அவனுடைய உளநிலையை மற்றவர்கள் அறிந்துகொள்ள முடியவில்லையே தவிர அவன் எப்போது அது நிகழும் எனக் காத்திருப்பவனாகவே உள்ளான். அவனுடன் அவன் அமைச்சரும் படைவீரர்களும் காத்திருக்கின்றனர். அவன் நாடே காத்திருக்கிறது. கர்ணன் தன் போர்த்திறமையை காட்டுவதற்காக, போரில் ஈடு இணையற்ற பெரு வீரனென காட்டுவதற்காக காத்திருக்கிறான் என்று சொல்ல முடியாது. மற்றவர்களின் அங்கீகாரத்திற்கு ஏங்கும் அளவுக்கு சிறியவன் அல்ல அவன். அந்தப் போரின் மூலம் அவன் நாட்டுக்கு உயர்வு வரும் என்று அவன் அமைச்சர் சிவதர் கூறுவது ஒரு வகையில் உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் அதை கர்ணன் பொருட்படுத்துபவன் இல்லை. இப்போரில் துரியோதனன் பக்கம் நின்று போரிடுவதற்கு அவன் ஏற்கும்படியான அறம் சார்ந்த காரணம் ஏதுமில்லை. பாண்டவர்களுக்கு ஒரு பகுதி நாடு கொடுப்பது என்பது கொடை வள்ளலான அவனுக்கு ஒரு எளிய ஏற்கும்படியான செயல். அவன் அங்க நாட்டைக் கேட்டிருந்தால் எடுத்துக்கொள் என உடன் கொடுக்கக்கூடியவன். அர்ச்சுனன் மேல் உள்ள வஞ்சம் தீர்க்க காத்திருக்கிறான் என்று சொல்ல முடியாது. அத்தகைய உணர்வுகளை அவன் தாண்டி வளர்ந்துவிட்டவன். பாஞ்சாலியுடனான உளவியல் சார்ந்த வஞ்சம் இன்னும் இருப்பதற்கு வழியில்லை. சூதவையில் திரௌபதிக்கு அவமதிப்பு நிகழ்ந்தபோதே அவன் வஞ்சமெல்லாம் அகன்றுபோய் குற்ற உணர்வுக்கு ஆளாகிவிட்டவன். நாகர்களின் வஞ்சம் தீர்ப்பதற்காக அவன் காத்திருக்கிறான் என்று சொல்லமுடியாது. நாகர்கள் தம் வஞ்சம் தீர்க்க கர்ணனுக்கு உதவுகிறார்கள். மற்றபடி அவர்களுக்காக முயன்று ஒரு போரை அதற்காக உருவாக்க எண்ணுபவன் இல்லை. இன்னும் இந்தப் போர் அவனுக்கு பல சங்கடங்களை விளைவிப்பதாக இருக்கும். பீஷ்மர் அவனை விலக்கி வைத்திருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக கருதுகிறான்.
கர்ணன் பெருமூச்சுடன் “ஆம்” என்றபின் “என்னை மெய்யாகவே நன்கறிந்திருந்தார் என்று தெரிகிறது. அவர் அறிந்திருந்ததென்ன என்பதுதான் எனக்குப் புரியவில்லை” என்றான். சிவதர் அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்தார். சில கணங்கள் அமைதிக்குப் பின் “தாங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை” என்றார். கர்ணன் “என்னைக் கடந்து பிறிதொன்றை அவர் பார்த்திருக்கிறார். என்னை விலக்கியது அதன் பொருட்டே போலும். நன்று! எதுவாயினும் நன்று!” என்று சொன்னான்.
ஆனாலும் கர்ணன் போரில் ஈடுபடுவதற்காக காத்திருப்பதற்கான முக்கிய காரணம் இருக்கிறது. துரியோதனனின் நெருங்கிய நண்பனாக அவன் இருந்தும் துரியோதனனுக்கு அவன் பெரும் உதவி எதுவும் செய்ததில்லை. சில போர்களை நடத்தி துரியோதனனின் ஆட்சியின் எல்லைகளை அவன் விரிவு செய்திருக்கிறான். அது ஒன்றும் அரும் பெரும் உதவியல்ல. அது துரியோதனன் அல்லது அவனுடன் தோழமைகொண்ட மற்ற பெருவீரர்கள் செய்திருக்கக் கூடியதுதான். துரியோதனன் நெஞ்சில் சூடிய அணியென இதுவரை அவன் இருந்திருக்கிறானே தவிர துரியோதனனின் பெரும் இடர் நீக்கி தன் நன்றிக்கடனை தீர்த்துக்கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவில்லை. அப்படியும் கூற முடியாது. வாய்ப்புகள் கிடைத்தும் அவன் தவறவிட்டிருக்கிறான். துரியோதனனுக்காக பாண்டவர்களுடன் புரிந்த இரு போர்களில் அவன் கலந்துகொண்டிருந்தும் வெற்றி பெற வைக்க முடியவில்லை. திரௌபதி சுயவரத்திற்கும் பிறகு நிகழ்ந்த போர் மற்றும் விராட நாட்டு எல்லையில் நடந்த போர் இரண்டிலும் துரியோதனனின் தோல்வியை அவனால் தடுக்க முடியவில்லை. துரியோதனனுக்கென அவனால் செய்யவேண்டியது, செய்யக்கூடியது, துரியோதனனை பண்டவர்களுக்கு எதிரான போரில் வெற்றிபெறவைப்பது மட்டும்தான். அதை துரியோதனனின் பேருள்ளம் விழைகிறது என்று சொல்ல முடியாது. ஆனால் துரியோதனனை சுற்றி இருக்கும் அவன் தம்பியர், தோழர்கள், வீரர்கள் அனைவரும் எதிர்பர்த்துக்கொண்டிருக்கும் ஒன்று. போர் துவங்கி பத்து நாட்கள் ஆகின்றன . கௌரவர்களில் சிலர், அவர்களின் பிள்ளைகள் பலர் கொல்லப்பட்டுவிட்ட நிலையில் போர்வெளிக்கு அப்பாலிருந்து ஒரு பார்வையாளனாக அவன் காத்திருப்பது அவனுக்கு எவ்வளவு வேதனையளிப்பதாக இருக்கும் என்பது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
தண்டபாணி துரைவேல்