Tuesday, January 15, 2019

மூத்தவர்



அன்புள்ள ஜெ

புரிந்தது புரியாதது என ஒரு வாசகர் [சதீஷ்] எழுதியிருந்ததை வாசித்தேன். நானும் அதே கேள்வியை எழுப்பிக்கொண்டேன். பீஷ்மருக்கு கர்ணன் பாண்டவன் என்று தெரியும் என்றால் அவனை ஏன் அரசனாக ஆக்கவில்லை? ஏன் சும்மா திரும்பி வந்தார்?

அவர் அப்படி செய்ய நினைத்திருந்தால் எப்படிச் செய்யமுடியும்? அவனை மகன் என்று சொல்லவேண்டியவள் குந்தி. அவள் சதசிருங்கத்திலிருந்து திரும்பும்வழியிலேயே அவனை வெட்டி வீழ்த்திவிட்டாள். அவனை அவள் ஏற்றுக்கொள்ளாமல் எவரும் எதுவும் செய்யமுடியாது. எதைச்செய்யமுயன்றாலும் அது குந்திமேல் அவதூறுசெய்வதாகவே ஆகும்

ஆகவே பீஷ்மர் கர்ணன் பிற பாண்டவர்கள்மேல் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என நினைக்கிறார். அவன் போரில் ஈடுபடக்கூடாது என நினைக்கிறார். குறிப்பாக அவனும் அர்ஜுனனும் போர்செய்யவேகூடாது என ஆசைப்படுகிறார்

அதற்காகவே அவனை கரித்துக்கொட்டிக்கொண்டிருக்கிறார். இதை நம்மூரில் பல பெரியவர்கல் செய்வார்கள். நோயாளியான ஒரு மகன் இருந்தால் அவனை திட்டிக்கொண்டே இருப்பார்கள். அப்போதுதான் அவன் பத்திரமாக இருப்பான் என்பது நம்பிக்கை

இப்படி சில புதிர்கள் விழுந்து அதை நாமே அவிழ்ப்பதுதான் வாசிப்பின் திளைப்பு

ஆர்.ரவிக்குமார்