அன்புள்ள ஜெயமோகன் சார்,
காண்டீபத்தில் பால்குனை "ஒவ்வொரு உடலையும் நிழல் தொடர்கிறது வரலாறு என்னும் நிழல் ...."குல வரலாறு ,குல வரலாறு, முந்தைய அறிவின் வரலாறு " ...ஆனால் அவனுக்கு பின்னால் ஒளிரவேண்டியது அவனுடைய ஒளியுடல். அது உருவாக்கும் நீள்நிழல் அவனுக்கு முன்னால் விழவேண்டும் ,அவன் செய்வதற்கு ஒருகணம் முன்னரே அது எல்லாவற்றையும் செய்திருக்க வேண்டும் .அது அமர்ந்த பீடங்களிலேயே அவன் அமரவேண்டும் அது கடந்து சென்ற வெளியிலேயே அவன் காலெடுத்து வைக்கவேண்டும் " என்று கூறுகிறாள்.முதற்கனலின் முதலாம் அத்தியாத்தில் ஆஸ்திகனிடம் "கரியநிறமான நாகத்தின் பெயர் தட்ச பிரஜாபதி. இமையாத கண்கள் கொண்டவன் என்று பொருள். வெண்ணிறமான நாகத்தின் பெயர் மரீசி பிரஜாபதி." என மானசா தேவி கூறுகிறாள்.
ஆனால் இன்று ஒளியுடல் கொண்டு நின்றிருக்கும் கர்ணனின் முன் குந்தி வந்து குலவரலாறையும் குடி வரலாறையும் கருப்பும் வெள்ளையும் அல்லாத நீலவண்ண இளைய யாதவனின் அறிவுரைப்படி கர்ணன் மேல் யாருக்கும் அறியாமல் போர்த்துகிறாள்.மீண்டும் இருள்.இதை துரியோதனனும் , கவுரவ படைகளும் அறியும்போது என்ன நடக்கும்? ஒரு திரில்லர் நாவல்போல் மழைப்பாடல் 26ம் அத்தியாயத்தில் தொடங்கிய பிருதை என்னும்ம் குந்தியின் பயணம் முடிவடையாமல் நீண்டு உச்சகட்டத்திற்கு வந்துள்ளது.கர்ணனை தொடர்ந்த தட்சபிரஜாபதி.இமையாமல் ஒவ்வொருநாளும் அவனை நினைத்துகொண்டு இருந்தவள்.வெண்மை நிறம் கொண்ட மரீசி பிரஜாபதியான "சுப்ரியை" அவனை கொத்தி தள்ளி, கொத்துவாங்கி சென்றுவிட்டாள். ஆனால் அவள் சென்றது சூக்ஷ்மை என்னும் நாகனியோடு. அதை பற்றி ..."அது நாகமாயை. அதற்குள் சென்றவர் மீள்வதில்லை. மண்ணுக்கு அடியிலுள்ளது அவர்களின் உலகம். அது நம் நனவின் அடியிருள். எப்போதேனும் அவர்களே அங்கிருந்து இங்கு வந்து நஞ்சுமிழ்ந்தோ மணியை கொடையளித்தோ மீள்வார்கள் நாம் அவர்களை தொடரவியலாது" என சிவதர் கர்ணனிடம் கூறியிருக்கிறார். அவள் அகன்ற பின் தான் கர்ணன் சுடர்விடுகிறான். ஆனால் எப்போது வந்து நஞ்சுமிழ்கிறாளோ இல்லை மணியை கொடை அளிப்பாளோ?
ஸ்டீபன் ராஜ்