Thursday, January 31, 2019

ஜைத்ரம்இனிய ஜெயம் 

பயணத்திலிருந்து தம்பி தொலைபேசினான் . புவனேஸ்வர் ல நிக்குதுப்பா வண்டி என்றான் .  பேசிய கணம் நானும் பயணத்திலிருந்தேன். பேருந்து ஜன்னலுக்கு வெளியே ,  விரிந்த நீர்வெளியை, வான் பரப்பை , பொன்னென ஒளிரவைத்துக் கொண்டிருந்தது அதிகாலைச்சூரியன்.  இயல்பாக உள்ளே எழுந்த சித்திரம் கொனார்க் சூரியனார் கோயிலில் வளாகத்தில்  அமர்ந்து கண்ட, கோயிலை நிழலாக்கி  அணைந்து கொண்டிருந்த அந்திச் சூரியனின் இறுதித் தங்கப் புன்னகை . புலரியில் ,அந்தியில் ஒரு குறிப்பிட்ட கணத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் , அந்திக்கோ புலரிக்கோ சம்பந்தம் அற்ற கதிரவனின் பொற்சிரிப்பின் தழளொளி  .

அன்றைய இரவு படுக்கையில் கிடந்தபடி யோசித்தவைகளில்  சூரியனார் கோவில் குறித்த கதைகளும் அடங்கும் . கதைகள் ஒன்றின் படி , தனது நோயை குணமாக்கிய சூரியனுக்கு கோவில் கட்ட விழைகிறான் நரசிம்ம தேவன் . பாரத நிலத்தின் மிகப்பெரிய கோயிலாக இது அமையவேண்டும் என கனவு காணுகிறான் .கனவு ஆணவமாக மாறுகிறது . தலைமை சிற்பியை கசக்கிப் பிழிகிறான். [ பச்சைத் தமிழன் ராஜராஜன் எத்தனை மேன்மை கொண்டவன் .பெருந்தச்சருக்கு வெற்றிலை மடித்து தந்தெல்லாம் சேவகம் செய்திருக்கிறான் ;) ]

கும்பாபிஷேகத்துக்கு மன்னன் குறிப்பிட்ட நாள் நெருங்குகிறது .சிற்பியோ கோயில்  விமானம் உச்சி மீது , இறுதியாக பூட்டாக  வைத்து முடிக்கும் கலசத்தை , இத்தனை பெரிய விமானத்தில் வைத்துப் பூட்ட வகை தெரியாமல் திணறுகிறான் . மன்னன் நாள் தவறினால் சிற்பிகள் அனைவரையும் தலை வெட்டி வீசுவேன் என கோபப்படுகிறான் . இந்த சூழலில் சிற்பியின் பதின்வயது ஒரே மகன் அந்த சிக்கலுக்கு தீர்வை சொல்லுகிறான் .

கோவில் பணி சிறப்பாக முடிய ,மன்னன் அனைவர்க்கும் பரிசு வழங்கி பாராட்டுகிறான் .அதே சமயம் இப்படி ஒரு கோயில் இதற்க்கு பிறகு பாரத நிலத்தில் கட்டப்படக் கூடாது எனும் தன்முனைப்பில் ,சிற்பியின் மகனுக்கு மரண தண்டனை விதிக்கிறான் . தலைமை சிற்பி உன் காலத்துக்குப் பிறகு ,இந்த விமானம் இடிந்து சரியும் என சபிக்கிறான் . 

மகன் தனது இறுதி ஆசையாக அந்த விமானத்தின் உச்சியில் இருந்து விழுந்து உயிர் துறக்க விரும்புவதாக தெரிவிக்க ,மன்னன் அனுமதிக்கிறான் .  மகன் விமானத்தில் ஏறும்போது ,விமானத்தின் திசை நோக்கும் சிற்பங்களின் ஒன்றான சிங்க சிற்பம் ஒன்றினை ,[அது விமானத்தின் பூட்டுக்களில் ஒன்று ] தனது தொழில் அறிவு கொண்டு ,சற்றே அணுவிடை அளவு நிலைபெயர செய்து விட்டு ,உச்சிக்கு சென்று உயிர் தியாகம் செய்கிறான் .

மன்னனின் காலம் முடிந்ததும் ,விமானத்தில் அந்த சிங்கம்தான் முதலில் உடைந்து விழுகிறது . கற்களின் எடையை தாங்கும் சமதளத்தின், பரப்பளவு விசைகள் கொஞ்சம் கொஞ்சமாக கணக்குகள் பிழைக்க , எஞ்சுவது இதோ இப்போது நாம் காணும் கோவில் .

இந்த கார்கடலின் வாசிப்பின் தொடர்ச்சியாக அந்த கோனார்க் கோயிலுக்கு என்னுள் வேறொரு முகம் அமைந்து விட்டது. 

ஆம்  எனக்கு இனி  அதன் பெயர் ஜைத்ரம். 

போர்க்களத்தில் கர்ணன் நீங்கிய பின் தனித்துக் கிடக்கும் அவனது பொற் தேர் .

ஜைத்ரம் கர்ணன் ஆரோகணிக்க வந்த சூரியனார் கோவில் . வெகுசீக்கிரம் ,மீண்டும் சென்று ஜைத்ரத்தை காணவேண்டும் ;)
 

கடலூர் சீனு