Wednesday, January 16, 2019

அந்தணன் என்பான்



அன்புள்ள ஜெயமோகன் சார்,

"தனக்கு மேல் தன் ஞானம் இன்றி தெய்வமும் இல்லாதவனே அந்தணன்" துரோணரின் இந்த வரியை வாசித்தபோது எனது நண்பர்கள்,ஆசிரியர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மனதில் வந்து சென்றார்கள்.இது எனக்கே தோன்றிய ஓன்று.இப்போதும் பிராமணர்கள் முதலில் தங்களின் ஞானத்தைத்தான் நம்புகிறார்கள் என்று தோன்றும்.இரண்டாயிரம் வருடங்களாக இந்த பாரத வர்ஷத்தில் தங்களின் கருத்துகளை எழுதியும் மற்றவர்களின் கருத்துகளை அல்லது தரிசனங்களை தொகுத்தும் அடைந்த ஞானம்.முதலில் அவர்களிடம் பேசும்போது நான் வாய் திறந்த நான்கு வரிகளுக்குள்ளே அவர்களின் முகம் கடுகடுக்க தொடங்கும்.இப்போது எண்ணி பார்த்தால் நான் பேசிய நான்கு வரிகளுக்கும் அவர்கள் என்னை பொறுத்து கொண்டதே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது.உணமையிலே நான் உங்களின் தளத்திற்கு வருமுன் பிராமணர்களை ஆசிரியர்களாக தேடியவன்.ஏனென்றால் எப்படியோ எனக்கு அவர்களின் மேல் ஒரு ஆழமான நம்பிக்கை இருந்தது,இந்த உலகத்திலும் ஆன்மிகத்திலும் முன்னேற அவர்கள்தான் தேவை என்று என் மனம் தினமும் சொல்லும்.அப்படி வந்தவர்கள் எனது அறியாமைனால் மூன்றாவது தடவைக்குமேல் போனை எடுத்ததில்லை.எவ்வளவு பெரிய இழப்பு என்று உறுத்துகிறது.அந்தண ஆசிரியர்கள் அனைவரும் அல்லது எல்லா குருநாதர்களும் முதலில் எதிர்பார்ப்பது அர்பணிப்பு,பணிவு,உடலாலும் மனதாலும்.மொக்கை கருத்துகளை மனதில் வைத்துக்கொண்டு அதையே பெரிய தன்னம்பிக்கையாய் எடுத்துகொண்டு அவரிடம் சென்றால் கடுப்பு வராமல் என்ன செய்யும்.தனது உடலின் மூலம் குருநாதனை வணங்காதவன் அவரின் சொல்லை மட்டும் எப்படி மனதால் வணங்குவான்.கர்ணன் துரோணரை நிலம்பட வணங்கும் போது நானும் எனக்கு இரண்டு நாள் ஆசிரியர்களாக இருந்தவர்களின் அத்தனைபேர் காலிலும் விழுந்தேன். 

ஆனால் துரோணரின் சொற்கள் ஒரு ஆசிரியரின் பாவமன்னிப்பு கேட்கும் தருணத்தில் இருந்து வருபவை.எந்த ஆசிரியரும் மாணவனின் முன்னால் இப்படி நிற்க கூடாத தருணம்.துரோணர் கர்ணனிடம் பேச பேச கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடியே இருந்தது.உண்மையிலே துரோணர் ஷத்ரியர் தான்.அவர் அந்தணனாக தன்னை நினைத்துகொண்டு இருக்கிறார்.எந்த அந்தணனுக்கும் தனது ஞானத்தை தவிர பெரிய விஷயம் இந்த உலகத்தில் இல்லை. உறவு, நட்பு, அன்பு ,பாசம் எல்லாம் உண்டுதான் என்றாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அவன் அதனிடம் இருந்து பெரிதாய் எதிர்பார்ப்பதில்லை, அதைத்தான் துரோணர் "அந்தணன் தன் ஞானத்தால் அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்தவன்.அனைத்திலிருந்தும் ஞானத்தால் காக்கபட்டவன், நானோ என் அந்தணநிலையை உதறி ஷத்ரியநிலை நோக்கி வந்தவன்.என் பிழைகள் ஷத்ரியர் இயற்றுபவை,நான் கொள்ளவேண்டிய தண்டனையோ அந்தணர்களுக்குரியது"என்று கூறுகிறார்.தன்னறத்தில் மகிழ்வடையாதவர்களின் சொற்கள்.

இந்த பாரதவர்ஷத்தின் அனைத்து தரிசனங்களையும் ஞானங்களையும் இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளாய் உயிரே போனாலும் விடாப்பிடியாய் இன்றுவரை கொண்டுவந்த அனைத்து அந்தண ஆசிரியர்களுக்கும் நன்றி.

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்