அன்புள்ள ஜெயமோகன் சார்,
வெண்முரசின் ஆரம்பத்தில் இருந்தே ஒருவர் ஒரு செயல் செய்துவிட்டு அறைக்குள் வரும்போதோ அல்லது தனித்திருக்கும்போதோ தேவதைகள் அல்லது துர்தேவதைகள் அவர்களை சூழ்ந்துகொள்கின்றன. இது நாமே உணர்வதுதான், ஆனால் இப்போதுதான் புத்திக்கு உறைக்கிறது. ஒரு செயலை முழுமையாய் செய்து முடித்து உறக்கம் வர கட்டிலில் காத்து படுத்து கிடக்கும் நம்மளை அறியாமலே புன்னகையும் சந்தோஷமுமாக கால்மேல் கால்போட்டுகொள்கிறோம், தோல்வியில் தனித்திருக்கும்போது தவிப்பும் சோர்வுமாக கைகளால் கட்டிலை அடிக்கிறோம், என்ன செய்யவேண்டும் என தெரியாமல் இருக்கும்போது குழப்பமாக நகத்தை கடித்துகொள்கிறோம் அல்லது கட்டிலையோ தலையணையோ பிராண்டுகிறோம், முடிவெடுக்கும் தருணத்தில் உறுதியாக வேகமாய் எழுகிறோம் இது எல்லாம் நம்மை அறியாமலே செய்கிறோம். ஆனால் காற்றில் அவை நம்மை தொடரும் தேவதைகளின் திருவிளையாடல்கள் என எண்ணும் போது கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. எப்போதும் நாம் தனிமையில் இல்லை என்ற ஆசுவாசம்.ஆனால் ஒருவருக்கு துரோகம் பண்ணிவிட்டு அல்லது அவமானபட்டு இருக்கும்போது மனம் மட்டுமே கொந்தளிக்கிறது உடல் உறைந்துபோய் இருக்கிறது. ஆனால் உலகின் அனைத்து கண்களும் நம்மையே கவனிக்கிறது என தோன்றிக்கொண்டே இருக்கும்.அந்த கண்கள் யாருடையவை? அதுதான் உண்மையிலே நமது மனம் விழிப்பாய் இருக்கும் தருணம். இதை எல்லாம் உணரும் மனங்களை நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.
கர்ணனின் பிறப்பின் போது நாகம், துரியோதனின் பிறப்பின் போது காகம், என சிலர் பிறக்கும்போதே தங்களோடு சிலவற்றை கொண்டுவருகிறார்கள். ஆனால் எல்லாருக்கும் தேவதைகள் உண்டு என்றே வெண்முரசு சொல்கிறது. செயல்களின் மூலம் அக்காளும் தங்கையும் உள்ளே வருகிறார்கள் அல்லது வெளியே செல்கிறார்கள்.இதைதான் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்கிறார்கள் என நினைக்கிறேன்.இன்று துரியோதனின் நிழலாய் இருந்த காகம் அவன் கலிதேவனாய் அனைவரையும் துறந்து பிறந்தபின் துச்சாதனுக்கு நிழல் ஆகிறது.துச்சாதனன் அதை உணர்கிறான். ஆனால் சூதர்கள் எப்போதோ உணர்ந்து அதற்கு அருஞ்சொற்பொருள் அளிக்கிறார்கள்.உண்மையில் வாழ்வது என்பதும் வயசாகிறது என்பதும் காற்றில் பொருளில்லாமல் நின்றிருக்கும் சப்தங்களை உணர்வதுதானா? நல்ல செயல்கள் செய்பவர்களிடம் நுண்ணிய வடிவில் தேவர்கள் அல்லது தேவதைகள் அல்லது சொற்கள் துணை நிற்கின்றன. கெட்ட செயல்களுக்கு துர்தேவதைகள் அல்லது நினைவுகள்.ஒட்டு மொத்தமாய் நுண்ணிய சொற்களை இழப்பதற்கு பெயர்தான் மரணமா?
ச்டீஃபன்ராஜ் குலசேகரன்