Wednesday, January 30, 2019

மறுபக்கம்அன்புள்ள ஜெயமோகன் சார்,

இன்று கார்கடலில் வாசித்த   "மறுபக்கம் பாண்டவர்கள் மெல்லிய துடிப்புடன் நின்றிருந்தனர். ஏதோ ஒன்று நிகழுமென அவர்கள் எவ்வண்ணமோ அறிந்திருந்தனர். அவ்வண்ணம் முடிவதற்குரியதல்ல அது என்பதையே அவர்கள் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர். அது பிறிதொன்று" என்ற இந்த வரிகள் மிகவும் உலுக்கியது. மெல்லிய துடிப்புடன் காத்திருந்த ,வெறும் ஊழின் முன் இருந்த கணங்கள், "முடியாது இப்படி இந்த நிகழ்வு முடியாது அவர் கண்டிப்பாய் நம் பக்கம் வருவார் ,"அவர் அவனை விட்டுவிட மாட்டார் " என பேசியபடி கழித்த இரவுகள். "மிராக்கிள் அல்லது புதுமை " ஏதாவது நடந்துவிடும் என்ற நம்பிக்கை. இன்றும் அப்படிதான் ஒவ்வொரு நாளும் கழிகிறது. ஒவ்வொருவருக்கும் வாழ்வு இப்படிதான் இருக்கிறதா?   

கார்கடல் 31ம் அத்தியாயத்தில்வரும் வரியான "இளைய யாதவர் குறுகிய மூங்கில் கணுப்படிகளினூடாக வண்டுபோல் தொற்றி கீழிறங்கி வந்தார். அவரது மேலாடை காற்றில் பறந்தமையால் விண்ணிலிருந்து இறகு விரித்துப் பறந்து இறங்கி மண்ணில் நிற்பவர் போலிருந்தார்" என்று வாசிக்கும்போது மிகவும் கிளச்சியாக இருந்தது. ஏனென்றால் இது எனக்குள் கிடந்த கிறிஸ்துவின் படிமம். நான் படித்த பள்ளியின் உள்ளே இருந்த தேவாலயத்தில் கிறிஸ்து வானத்தில் அங்கி பறக்க தோமாவுக்கு காட்சி தர எழும்  ஒரு ஓவியம் இருந்தது. எவ்வளவோ வருடங்கள் கடந்தபின்னும் இந்த வரியை வாசிக்கும்போது கண்முன் அதை கண்டேன். இளையயாதவர்  உயிருக்கு போராடிகொண்டிருக்கும் அர்ஜுனனை எழுப்புவது கிறிஸ்து மரித்த லாசரை எழுப்புவது போல் இருந்தது. கிறிஸ்துவும் லாசர் சுகவீனமாய் இருக்கிறான் என்று தெரிந்தே தாமதிப்பார். கிருஷ்ணனும் அப்படியே . ஆனால் கிறிஸ்து இறந்து நான்கு நாள் ஆன பின் வருவார். இது நடப்பது போர்களத்தில். கிறிஸ்து லாசரை உயிரோடு எழுப்பியபின் தனது வாழ்வின் கடைசிக்குள் செல்வார். அது அவரே தன்மீது தொடுத்துக்கொண்ட போர். 

ஆனால் அர்ஜுனனை பார்க்க வந்த இளைய யாதவர் .....................அர்ஜுனனின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு குனிந்து அவன் காதில் “பார்த்தா!” என்று அழைத்தார். அர்ஜுனன் அதை கேட்கவில்லை. “பார்த்தா!” என்று அவர் மீண்டும் ஒருமுறை அழைத்தபோது அவனுக்குள்ளிருந்து மெல்லிய சுடரொன்று நடுங்கியது. “பார்த்தா!” என்று அவர் மூன்றாம் முறை அழைத்தபோது இமைகள் நலுங்கின. அவன் “ம்ம்” என்று மறுவிளி கேட்டான்.
காலஇடங்களுக்கு அப்பால் ஓரிடத்தில் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். அது காளிந்தியின் கரை. கரிய பாறை மேல் மலரமர்வில் இளைய யாதவர் அமர்ந்திருந்தார். கீழே சிறுபாறை மீது கைகளை மார்பின்மீது கட்டியபடி அவரை நோக்கி அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவர்களைச் சூழ்ந்து நீரோசையும் காற்றோசையும் நிறைந்திருந்தன. “இது பிறிதொரு காலம், பாண்டவனே” என்று இளைய யாதவர் சொன்னார். “அன்று சென்று நின்று நான் இதை உன்னிடம் கேட்கிறேன். நீ எழ விழைகிறாயா? இங்கு இன்னும் எஞ்சியுள்ளதா?” என்றார். “ஆம். எனக்கு ஆணையிடப்பட்டதை நான் இன்னும் முடிக்கவில்லை” என்றான் அர்ஜுனன். “அனைத்தையும் செய்து முடித்தவன் ஆவநாழி ஒழிந்தவனும்கூட” என்று இளைய யாதவர் சொன்னார். “ஒழிந்து இங்கு அனைத்திலிருந்தும் பறந்தெழவே விழைகிறேன். இப்பிறவியில் இங்கு எச்சமென எதுவும் இருக்கலாகாது” என்று அர்ஜுனன் சொன்னான்.
“நோக்குக, இவ்வினிய நீர்! இவ்விளங்காலை. இக்குளிர்காற்று. இங்கு அனைத்தும் எத்தனை இனிமை கொண்டுள்ளன! அமுதென்பதென்ன, புலன்கள் தொடுகையில் ஐம்பருக்களும் கொள்ளும் கனிவுதான் அது. மானுடன் உணரும் இன்பத்தையே விண்ணில் அமுதென வாற்றி வைத்திருக்கிறார்கள். பாற்கடல் என்பது என்ன? இவ்வனைத்திலும் பிரம்மத்தை உணரும் ஒருவனின் உள்ளப்பெருக்கு அல்லவா அது? அதை கடைந்தெடுக்கும் சுவை தெய்வங்களுக்கு உகந்தது. தேவர்களை அழிவற்றவர்களாக்குவது. பாண்டவனே அறிக, அந்த அமுது இங்கு அனைத்திலும் உள்ளது! மரத்தில் வேர்முதல் இலைவரை தேன் மறைந்திருப்பதைப்போல” யாதவரின் விழிகளை பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன் “ஆம்” என்றான்.
“சிறிய வாழ்வில் புழங்குந்தோறும் இன்பமும் துன்பமும் இனிமையும் கசப்புமென இவ்வுலகு நிலைமாறி அலைகொள்கிறது. இங்கு செயல்யோகியென ஒருவன் மாறுகையில் துன்பங்கள் மீதும் கசப்பின் மீதும் ஆளுகை கொள்கிறான். இன்பத்தை தனித்தறியத் தொடங்குகிறான். ஞானத்தால் தவத்தால் அவன் வீடுபேறடையுந்தோறும் இனிமை மட்டுமே எஞ்சுகிறது. அமுதொன்றே எஞ்சும் ஒரு நிலையும் உண்டு. அதில் அமர்ந்தோர் யோகிகள். அவ்வமுதனைத்தையும் உதறி இங்கிருந்து செல்பவனே வீடுபேறடைபவன்” என்றார் இளைய யாதவர். “உன் நெற்றியின் ஊற்றுக்கண் திறந்து இனிமைப் பெருக்கு எழுந்து உடலின் ஒவ்வொரு கணுவும் உவகை கொள்ளும் தருணம் ஒன்றிலிருந்து முற்றிலும் உதறி மேலெழ இயலுமா உன்னால்?”
“ஆம், இக்கணம் அதை என்னால் உறுதியாக சொல்ல இயலும். இங்கிருக்கும் பேரின்பங்கள் அனைத்தும் திரண்டு ஒரு துளியென ஆகி என் நாவிற்கு எட்டும் தொலைவில் முழுத்திருந்தாலும் ஒதுக்கிவிட்டு முன்செல்லவே விழைவேன்.” இளைய யாதவர் நகைத்து “எனில் சொல்க, மீண்டெழ விழைகிறாயா? இப்போது இறப்பின் விளிம்பிலிருக்கிறாய். உன் ஒரு சொல்லில் வாழ்வையோ இறப்பையோ நீ தெரிவுசெய்ய இயலும், சொல்க!” என்றார். தயக்கமில்லாமல் “மீண்டெழவே விரும்புகிறேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “இனிய மலர். தெய்வங்கள் அமர்ந்தருளும் நறுமணப்பீடம் கொண்டது. ஆயிரம் பல்லாயிரம் இதழ்களால் சூழப்பட்டது. உள்ளே செல்லும் வழி விரியத் திறந்திருக்கிறது. அதனுள் உள்ளன அனைத்து அழகுகளும் இனிமைகளும். காற்றில் எழுந்து பரவி அனைத்து சித்தங்களுக்குள்ளும் நுழைந்து அருகே இழுக்கின்றது அதன் நறுமணம்.”
“உள்ளே நுழைவது எளிது. அங்கு நுழைந்துள்ளது இனிய மது. பார்த்தா, உள்நுழைவோரில் பல்லாயிரத்தில், பல லட்சங்களில், பல கோடிகளில் ஒருவரே வெளியேற இயல்கிறது. மீண்டும் உள்நுழைய விழைகிறாயா?” என்றார் இளைய யாதவர். “ஆம், இன்னும் சில அம்புகள் எஞ்சியுள்ளன. யாதவனே, உனது அருளிருந்தால் நான் வெளியேறுவேன்” என்று அர்ஜுனன் சொன்னான். “சொல்க! நான் வெளியேறும் வழி எது?” இளைய யாதவர் அவனருகே குனிந்து “அங்கு உனது ஒரு துளியை நீ எஞ்சவிட்டுச் செல்லவேண்டும். பல்லி தன் வாலை அறுத்து உதிர்த்துவிட்டுத் தப்புவதுபோல. அதுவே ஒரே வழி” என்றார். அர்ஜுனன் “ஆம்” என்றான். “உனது மிகச் சிறந்த பகுதியை. நீ மிக விரும்பும் ஒரு பகுதியை” என்றார் இளைய யாதவர். “அது உனக்கு பிறிதொரு இறப்பென்றே ஆகும். அப்பேரிழப்பால் நீ அதை கடந்து செல்ல இயலும்.”
அர்ஜுனன் “ஆம், நான் அதற்கு ஒருக்கமே” என்றான். “எனில் எழுக!” என்று சொல்லி இளைய யாதவர் அவன் நெற்றிப்பொட்டை தன் கைவிரலால் தொட்டார். அவன் வலக்கால் இழுத்துக்கொண்டது. முகம் கோணலாகி உதடு வளைந்து எச்சில் வழியத்தொடங்கியது.

இதை அப்படியே கிறிஸ்து -லாசர் உரையாடல் போல் வாசித்தால் வேறொரு உலகு திறக்கிறது. பைபிளில் இது இல்லை. உண்மையில் ஒரு ஞானி இப்படிதான் பேசியிருப்பார். அது சுற்றி உள்ளவர்களுக்கு புரியவேண்டுமே ? கதையின் பாதையில் குறிக்கிடுகிறது என மேற்கத்திய பதிப்பு கம்பெனிகளின் எடிட்டர் போல் வெட்டி இருப்பார்கள்.அப்ப வெட்ட ஆரம்பித்தவர்கள்தான் இன்னும் புரிந்துகொண்ட பாடில்லை.கிருஷ்ணனுக்கு எப்படி அர்ஜுனனோ அதேபோல் லாசரும் அவரும் அவரது சகோதரிகளும் கிறிஸ்துவுக்கு நண்பர்கள் .
  ஸ்டீபன் ராஜ் குலசேகரன்