Tuesday, January 29, 2019

அபிமன்யு



அன்புள்ள ஜெயமோகன் சார்,


அபிமன்யு கதாபாத்திரம் குருஷேத்திரத்தின் மிகவும் முக்கியமான ஒரு கண்ணி.ஒரு வகையில் நம்மில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேர் வாழும் வாழ்க்கை. ஒன்றை பிடித்துகொண்டு அடம் பிடித்து அதனில் நுழைந்து அதிலேயே உழண்டு வழிதெரியாமல் திக்கி திணறி நிற்பது. முட்டும் போது திரும்பி வர வழி தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. இன்னும் கொஞ்சம் தூரம்தான் இன்னும் கொஞ்சம் தூரம்தான் என பதமவியூகத்தினுள் செல்பவரே மிகுதி.


 ஒட்டுமொத்தமாக வாழ்க்கை அப்படிதான் என்றாலும் அதில் எதோ ட்ரிக் இருக்கிறது. வாழ்க்கை கைவிட்டுபோவதை, முடிவில்லாமல் செல்வதை, அது ஒரு பொறி என்பதை  அறிந்து திரும்பி பின்னால் வர முடியும் என்று தோன்றுவதே இல்லை.புரியும்போது காலம் எண்ணும் பத்மவியூகம் சுற்றிவளைத்து தாக்க ஆரம்பிக்கிறது. அரைகுறையாய் போர்களத்திற்குள் வந்தவர்கள் தள்ளபட்டவர்களின் கதையை நினைத்தால் நெஞ்சு நடுங்குகிறது.

" இருபது  வருடத்திற்கு முன் பார்த்த "கிரீடம்" படத்தில் வரும் சேதுமாதவன் இன்னும் நெஞ்சில் ஓரத்தில் துடித்துக்கொண்டுதான் இருக்கிறான். படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சேதுமாதவன்  தான் தான் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் அப்போது தெரியவில்லை நானும் ஒரு பத்மவியூகத்தினுள் நுழைந்துகொண்டிருக்கிறேன் என்று. இப்போது சேதுமாதவன் நான் தான் என்று  ஒவ்வொரு நொடியும் உணர்கிறேன். ஒவ்வொரு நாளும் பத்மவியூகம் என்பதை உணர்த்து  குருஷேத்திரதிற்கு உண்மையாய் தயாராகிறவர்கள் பாக்கியவான்கள்.  


முதற்கனலில் உத்தங்கர்  ஜனமேஜேயனிடம் "குருவம்ச மாவீரன் அர்ஜுனனின் மைந்தன் அபிமன்யு தன் பதினாறாவது வயதில் குருஷேத்ரப் போர்க்களத்தில் மடிந்தான். அவன் மனைவி உத்தரைக்கு அப்போது பதினாறு வயது. அரண்மனைக்கு அப்பால் என்ன நடக்கிறதென்பதே அறியாத பேதைப்பெண்ணாக இருந்தாள். ஒவ்வொருநாளும் இறப்புச்செய்திகள் வருவதைக்கொண்டுதான் அவள் குருஷேத்ரப்போரையே அறிந்தாள். 

அவள் இரவுகள் தோறும் அஞ்சிக்கொண்டிருந்த செய்தி ஒருநாள் வந்தது. அவள் சிலநாட்கள் மட்டுமே அறிந்திருந்த இளம்கணவன், இன்னமும் முழுமையாக அவள் பார்த்திராத முகத்தைக்கொண்ட சிறுவன், மீளமுடியாத படைவளையத்தில் சிக்கி களத்தில் உயிரிழந்தான்" என்று கூறுகிறார். ஆனால் அபிமன்யுவின் மைந்தன் பரீக்ஷித் மூலம் தான் குருகுலம் தளிர்க்கிறது. பத்மவியூகம்  என்னும் சர்ப்பத்தின் வளைவுகளுக்குள்  சிக்கிகொண்டவர்கள் சொல்லவருவது எதை ? 

அர்ஜுனனுடன் துவாரகையை விட்டு வெளியேறியபின் சுபத்திரை கூறுகிறாள்"இப்போது வரும்போது எண்ணிக் கொண்டேன் வீரர்களால் எந்தச் சூழ்நிலையிலும் உள் நுழைய மட்டுமே முடியும் என்று. வெளியேறும் கலை அறிந்தவர்கள் யோகியர் மட்டுமே” என்று.அதற்கு அர்ஜுனன் அவளை பார்க்க  "வீரராகிய பார்த்தரை நான் வெறுத்தேன். யோகியாகிய உங்களை விழைந்தேன். என் வயிற்றுள் உறையும் விழைவு அது. நாளை இங்கு பிறப்பவன் வெளியேறவும் தெரிந்தவனாக இருக்க வேண்டும், என் தமையனைப் போல” என்று கூற ,அர்ஜுனன் அவள் தலையைத் தொட்டு “நான் வெளியேறத் தெரியாதவன். உன்னுடன் இணைந்து நானும் அதற்காக வேண்டிக்கொள்கிறேன். கருணைகூர்க தெய்வங்கள். அருள்க மூதாதையர்” என்றான். 

இன்று வெண்முரசில் கிருஷ்ணன் அர்ஜுனனோடு கடந்த காலத்தின் நதியில் நின்று பேசும்போது அர்ஜுனனும் வெளியேறமுடியாமல் தவிக்கிறான். வெளியேறிவிடவேண்டும் என்று துடிக்கிறான். ஆனால் அதற்கான விலை என்ன ?  நாம் செயல்களின் மூலம் வாழ்ந்தாலும் தினமும் அறுந்து தெறிக்கும் ஒட்டவே முடியாத பல்லியின் வால்கள் எத்தனை?  அவைகள் துள்ள துடிப்பது போலவே நமது மனம்  துடிக்கிறது.

காண்டீபத்தில் ஒரு கல்மண்டபத்தில் நாடோடியாய் இருக்கும் அர்ஜுனனுக்கு வணிகர்கள் மூலம் அபிமன்யு பற்றிய நினைவுகள் கிளறப்படுகின்றன. ஒரு வணிகன் “சுபத்திரை இப்போதும் இந்திரப்பிரஸ்தத்தில்தான் இருக்கிறாள். அவளுக்கு மைந்தன் பிறந்திருக்கிறான். அவனுக்கு அபிமன்யு என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் பிறவிநன்னாள் சடங்குகளுக்கு மரவுரி விற்கச் சென்றிருந்தேன். மக்கள் இன்னும் அந்நகரில் முழுமையாக குடியேறவில்லை. ஆயினும் பெருவிழா அது.”  என்று மற்றொரு வணிகனிடம் கூறுகிறான். 

அதை  போர்வீரனின் வேஷத்தை சூடிகொண்டிருக்கும் அர்ஜுனன் கேட்டுகொள்கிறான். அவனின் பெயரில் அமைந்த மாபெரும் நகரான இந்திரபிரஸ்தத்தில் பிறக்கும் அபிமன்யுவை பற்றி அறியும்போது அவன் நாடோடி.  அபிமன்யுவை அவன் சந்திக்கும்போது கூடவே சுஜயன், சுருதகீர்த்தி ,சுபத்திரை இருக்கிறார்கள்.அந்த சிறுகுழந்தை அபிமன்யு கலிங்க இளவரசியை சிறைபிடித்து வரபோவதாகவும் , பிறகு சிறிதுநேரம் கடந்தவுடன்  எல்லா குழந்தைகளையும் போல அல்லது அவனது இயல்பின்படி "அவள் கெட்டவள் " என கூறி சிரிக்கிறான். 

சுபத்திரை அர்ஜுனனின் கண்ணையும், வார்த்தையையும் கண்காணித்துகொண்டே அபிமன்யுவை பூரிப்பாய் பார்த்துகொண்டிருக்கிறாள். மரத்தில் தொங்கும் ஒற்றை மாங்காய் காண்டீபத்தால் அர்ஜுனனால் வீழ்த்தப்பட அதற்கு சுஜயனும் அபிமன்யுவும் முறைத்துகொள்வதை அர்ஜுனன் பெருமூச்சுடன் பார்ப்பதும் காண்டீபத்தை பார்ப்பதும் நடக்கிறது. அரசகுடியினர் ,உயர்குடியினர் கனவுகளே வேறு. அவர்கள் சிறுவயதிலே வேறுவகையில் வளர்க்கபடுகிறார்கள். அதை சாமானியர்கள் புரிந்துகொள்ள முடியாதுபோலும். ஆதலால் இன்றும் அரச,உயர் குடியினரின் குழந்தைகளை,அவர்களின் நடத்தைகளை கண்டு சாமானியன் திகைக்கிறான். 

வெறும் பாலியல் நடத்தைகளை கொண்டு அவர்களை திரித்து திரித்து மகிழ்கிறான். அவர்கள் இரண்டு வயதிலே பாலியலை அறிந்தவர்கள் என்பது அவனுக்கு தெரியவில்லை. பிறகும் அவர்கள் வெற்றிகரமாக இருப்பது அவனின் அனைத்து கணிப்புகளையும், அடித்து நொறுக்க வெம்பி வெறுத்து கூச்சலிடுகிறான்.    

இந்திரபிரஸ்தத்தில் ராஜசூயம் பற்றி ஆலோசனை நடக்கும்போது அர்ஜுன் கொஞ்சம் யோசிக்க சுபத்திரையின் மைந்தன் "“எந்தையே, தங்களிடமிருந்து அச்சத்தை நான் எதிர்பார்க்கவில்லை. தாங்கள் விரும்பினால் இந்த வேள்வி கோரும் அனைத்துப்போர்களையும் நான் ஒருவனே முன்னின்று நடத்துகிறேன்” என்றான். அதற்கு  அர்ஜுனன் ஏதோ சொல்ல முயல்வதற்குள் “அதற்கான ஆற்றல் எனக்குண்டு என்பதை தாங்களே நன்கறிவீர்கள். இந்த அவையும் அறியும்” என்றான். “தனிவீரத்திற்குரிய களமல்ல இது மைந்தா” என்று அர்ஜுனன் பொறுமையிழந்து சொன்னான்.

“நான் உரைப்பதே வேறு. நாம் பாரதவர்ஷமெனும் பெரும் களத்தில் ஆடப்போகிறோம்.” அபிமன்யு “ஆம், ஆனால் ஆடுவது நானோ நீங்களோ அல்ல. அன்னை. நான் அவர் அறைக்குள் செல்லும்போது நாற்களத்தை விரித்து அவர் ஆடிக்கொண்டிருப்பதை கண்டேன். இது என்ன என்றேன். இது மகதம் இது புண்டரம் இது வங்கம் இது அங்கம் என்று எனக்கு சொன்னார்கள். எந்தையே, நாற்களத்தில் அவர் முன்னரே வென்றுவிட்டார். அவர் சொல்லட்டும்” என்றான்.

அர்ஜுனன் சினத்துடன் “நாம் பேசிக்கொண்டிருப்பது போரைப்பற்றி” என்றான். “ஆம், போரை நிகழ்த்துவது அன்னை. நாம் அவர் கையின் படைக்கலங்கள். நாம் செய்வதற்கொன்றுமில்லை” என்றான் அபிமன்யு. பதினைந்து வயதில் அபிமன்யு இப்படி பேசு அனைவரும் அவனை மதிக்கிறார்கள்.  பிறகு உத்ரையை மணந்து , இன்று போரில் பத்மவியுகதினுள் நுழைய காத்திருக்கிறான். அவனுக்கான பத்மவியூகத்தை அமைத்தவள் பாஞ்சாலிதானா? 

ஸ்டீபன்ராஜ் குலசேகரன்