Friday, January 25, 2019

அன்னையெனக் கரந்தவை



அன்புநிறை ஜெ,

குந்தி வருகிறாள், தவ்வையென, கத்ருவென, அன்னையென. 

அன்னை தருவதே வாழ்க்கையென மண்ணில் எஞ்சுகிறது. கத்ரு நாகங்களுக்கு சொல்வது போல //உலகறிய விரிப்பவை சிறகுகள் ஆகின்றன. கரப்பவை நஞ்சாகின்றன//
குந்தி தனது சிறகுகளைக் காக்க கரந்தவையை நாடுகிறாள். அவள் கரந்தவற்றின் நஞ்சு, வார்த்தைகளாய் வெளிவருகிறது. என் விழைவுக்காக உன்னை இழந்தேன் என்றவள், கர்ணனைப் பார்த்துக் கேட்கும் கேள்விகள் மிகவும் ஈரமேயற்றதாக கொல்லும் விசையொடு வருகின்றன. அவன் தனது நஞ்சால் பதிலளிக்கிறான்.
//நீ என் மைந்தன் என எப்போதேனும் அகத்தால் உணர்ந்திருக்கிறாயா? என்னை பார்க்க விழைந்துள்ளாயா? என்னை உள்ளத்தால் அணுகியிருக்கிறாயா?//

எழுதழலில் தாய்மையைப் பற்றிய மின்னல் ஒன்று வரும்:
// மாயைகளில் பெரிது அன்னையெனும் பற்று. அனைத்துச் சிறுமைகளையும் அள்ளிக்கொண்டு வந்து நிறைக்கிறது. அனைத்து வாயில்களையும் மூடி அறியாமையை வளர்க்கிறது. அனைத்துக்கும் மேலாக அன்னையென்று அமைந்து ஆற்றுவதெல்லாம் நன்றே என்ற பொய்யில் திளைக்கவைத்து மீட்பில்லாதாக்குகிறது.//

எவ்வளவு உண்மை அது!! தான் ஈன்றதையே கடித்துண்ணும் தாய் மிருகம்.

எனில் இது கைகளை இயக்கும் விசைகளோடு பகடைகளும் கருக்களும் சேர்ந்து ஆடும் களம். ஆட்டுவிப்பவனும் ஒரு கருவென களத்தில் நிற்கிறான். 

என்னை வெல்ல இளைய யாதவன் ஒருவனால்தான் இயலும் என உரைத்த கர்ணனுக்கும், அவனை வெல்ல என் ஒருவனால்தான் இயலும் என உரைக்கும் இளையாதவருக்குமான போர். அர்ஜுனனை காயப்படுத்தி வீழ்த்திய பிறகு கர்ணன் நாகவாளி தொடுத்து நிற்கும்போது இருகை விரித்து புன்னகைக்கும் இளைய யாதவர், இன்று தன்னிடம் இருப்பதில் சிறந்த கணையை ஏவியிருக்கிறான். கதிர்மைந்தன் இரு கைவிரித்து நிற்கிறான். 

என்னளவில் மிகவும் பாதித்து தூக்கமழியச் செய்த இரு அத்தியாயங்கள்.

அன்புடன்,
சுபா