Saturday, January 12, 2019

அணைத்துக்கொள்ள இடர்தரும் அணிகலன்கள்




        நாம் ஒருவரை சந்திக்கும் போது கைகொடுத்துக்கொள்கிறோம். ஒரு சிலரை அணைத்துக்கொள்ளவும் செய்கிறோம். கை கொடுப்பது என்பது அவருக்கு நாம் மனதளவில் அருகாமையில்(கைக்கெட்டும் தூரத்தில்) இருக்கிறோம் என்பதை உணர்த்துவதாக இருக்கலாம். ஒருவரை அணைத்துக்கொள்ளும்போது இருவர் நெஞ்சங்களும் அருகருகே வருகின்றன. அது இருவரும் நெஞ்சத்தால் நெருங்கியவர்கள் என்பதை உணர்துவதற்கான புறச்செயலாக தோன்றுகிறது.

          குழந்தைகளை நாம் எப்போதும் அணைத்துக்கொள்கிறோம். அவை நம் நெஞ்சத்திற்கு நெருங்கியவை. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகையில் நாம் அணைத்துக்கொள்வது குறைந்துவிடுகிறது. சிலர் தம் பிள்ளைளைத் தொடுவது கூட குறைந்துவிடுகிறது. ஒரு தந்தை தனது பிள்ளைகளை சீர்திருத்தி வளர்க்கஅன்பு பாசம் போன்ற நெகிழ்வான  உணர்வுகளை மறைத்துக்கொண்டு  கண்டிப்பனவன் எனத் தோன்றும் முகத்தோற்றத்தை அணிந்துகொள்கிறான்அதைப்போன்று ஒரு பிள்ளை தன் மன வளர்ச்சியினால் ஏற்பாடும் உளவேறுபாடுகளை மறைந்துக்கொள்ள அசட்டை செய்பவன் என்ற அணிகலனை அணிந்துகொள்கிறான். இருவர் பூணும் இந்த அணிகலன்கள் அவர்கள் அணைத்துக்கொள்ள தடைகளாக இருக்கின்றனகணவனும் மனைவியும் காமத்துக்காக அல்லாமல் அணைத்துக்கொள்வது என்பது காலஓட்டத்தில் மிகவும் குறைந்துவிடுகிறது. அதற்கு கணவன் தான் ஆண் அதனால் உயர்ந்தவன் என்ற எண்ணத்தால் அகங்காரத்தை அணிந்துகொள்கிறான்பெண் தான் தாழ்ந்தவள் அல்ல எனக் காட்டிக்கொள்வதற்கான அகங்காரத்தை அணிந்துகொள்கிறாள். இவை இருவரும் அணைத்துக்கொள்ள இடர் தருவனவாக அமைகிறதுஇதைப்போன்ற உறவற்ற  ஆண்களும் பெண்களும்காமத்தை தெரிவிப்பதாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தால் விலகல் என்ற அணிகலன்களை இயல்பாக அணிந்துகொண்டிருக்கின்றனர்இதைப்போன்று மனிதர்கள் தம்மை உயர்த்திக் காட்டுவதற்காகவும், மற்றும் தாம் கொண்டிருக்கும் விருப்பு வெறுப்புகளாலும் பல்வேறு   அணிகலன்களைன்கவசங்களை  அணிந்து கொண்டிருப்பதால் மற்றவரை நெஞ்சம் இணையத் தழுவிக்கொள்ளுதல் இயலாமல் போகிறது.
  
        
 இதோ கர்ணனும் துரியோதனனும் நெஞ்சத்தால் நெருங்கியவர்கள். அவர்கள் அணைத்துக்கொள்ள தடைசெய்யும் எந்த அணிகலன்களும் அவர்கள் அணிந்துகொண்டிருப்பதில்லை. கர்ணன் குருஷேத்திரப்போரில் கலந்துகொள்ள வேண்டிய தருணம். சுபாகுவும் பூரிசிரவஸும் அவனை அழைக்க வருகிறார்கள். இப்போது சிவதர் கர்ணனுக்கு சில அணிகலன்களை அவசரம் அவசரமாக பூட்டுகிறார்அவர்கள் நேரிடையாக கர்ணனை அழைக்க வருவதே ஒரு அணிகலன் என்று கொள்கிறார். அடுத்து கர்ணனனை அரசனென  அணிகொள்ள சொல்கிறார்.

நான் சென்று அவர்களை அழைத்துவருகிறேன். தாங்கள் அரசணி கோலத்தில் அவர்களை எதிர்கொள்ள வேண்டும்என்றார். கர்ணன்அது எதற்கு?” என்றான். “தாங்கள் அணிகொள்ள இன்னும் பொழுதில்லைஆனால் அரசணிக்கோலமே முறைமை. முறைமையே ஓர் அறிவிப்புதான்” 

கர்ணன், பூரிசிரவஸ் மற்றும் சுபாகு அரச முறைமைகள்  என்ற என்ற அணிகலனக்ளை அணிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வருகை முகமன், கர்ணனின் வாழ்த்துரை எல்லாம் அவர்கள் உள்ளம் அணிந்திருக்கும் அணிகலன்கள் என்று தோன்றுகிறது

பூரிசிரவஸ் முறைப்படி ஏழு அடி எடுத்து முன்னால் வந்து உடல்வளைத்துஅங்கநாட்டு அரசருக்கு பால்ஹிக நாட்டு இளவரசனின் வணக்கம். என் குலம் உங்கள் வாழ்த்துகளால் சிறப்புறுக! அஸ்தினபுரியின் அரசரின் ஆணைக்கேற்ப தங்களிடம் தூது சொல்லும் பொருட்டு வந்துள்ளேன்என்றான். கர்ணன் வலக்கை தூக்கி அவனை வாழ்த்திநலம் சூழ்க! வெற்றி எழுக!” என்று வாழ்த்தினான்சுபாகு அதேபோல முறைப்படி தலைவணங்கிஅங்கநாட்டு அரசருக்கு கௌரவ இளவரசனும் அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனின் இளையோனும் தார்த்தராஷ்டிரனுமாகிய சுபாகுவின் வணக்கம். என் தமையனின் ஆணைப்படி தங்களிடம் தனிச்சொல்லொன்று உரைக்கும்படி பணிக்கப்பட்டுள்ளேன்என்றான். “சிறப்புறுக! புகழ் கொள்க!” என்று கர்ணன் அவனை வாழ்த்தினான். அமரும்படி அவன் கைகாட்ட இருவரும் பீடங்களில் அமர்ந்தனர்.
  
ஆனால் கர்ணனுக்கு முன் இத்தகைய  அணிகலன்கள் எதுவும் தேவையற்றது என  பூரிசிரவஸ் அறிகிறான்தான் ஒரு அரசன் மற்றும் அஸ்தினாபுரம் என்ற பேரரசின் தூதுவன் என்பதான தன் அணிகளை அகற்றி நேரிடையாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான்

பூரிசிரவஸ்இனி முறைமைகள் ஏதுமில்லை, மூத்தவரே. நேரடியாகவே சொல்லெடுக்கிறேன். அஸ்தினபுரி இன்று தங்களை பணிந்து எதிர்பார்த்திருக்கிறது. தங்களால் காக்கப்படும்பொருட்டு தவித்திருக்கிறது. கைவிடலாகாதென்ற மன்றாட்டுடன் இங்கு வந்திருக்கிறேன். அஸ்தினபுரி எங்கள் நாடும் கொடியும் என்பதுபோல் உங்களுடையதும் கூட. நாங்கள் கோராமலேயே தந்தையென்றும் தெய்வமென்றும் வந்து நின்றிருக்கவேண்டியவர் நீங்கள். அதற்கு நாங்கள் எந்த முறைமை சார்ந்த கோரிக்கையையும் வைக்கவேண்டியதில்லைஎன்றான்.
 
கர்ணனைத்தவிர மற்ற எந்த ஒரு அரசனிடம் இக்கூற்றை கூறி இருந்தாலும் இது அஸ்தினாபுர அரசுக்கும் துரியோதனனுக்கும் பெரும் இழிவெனக் கருதப்பட்டிருக்கும். ஆனால் பூரிசிரவஸ் அதற்கான முறைமைகளை எல்லாம் தவிர்த்துவிட்டு இவ்வாறு உரைக்கிறான்
அடுத்து சுபாகு தான் அஸ்தினாபுரியின் இளவரசன், துரியோதனன் என்ற பேரரசனின் தம்பி, போன்ற அணிகளை அகற்றி வெறும் துயர்கொண்ட மனிதனென கர்ணனிடம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறான். தன் மகன் இறப்பின் துயரத்தை எவ்வித தயக்கமுமின்றி வெளிப்படுத்துகிறான்.

 பூரிசிரவஸ் திகைப்புடன் திரும்பி ஏதோ சொல்வதற்குள் சுபாகு விரைந்த அசைவுகளுடன் எழுந்து முழந்தாள் மண்ணிலறைய விழுந்து கர்ணனின் இரு முழங்கால்களையும் பற்றிக்கொண்டுதங்களை சந்தித்து மடியில் தலை வைத்து கதறி அழவேண்டுமென்று நூறுமுறை எண்ணியிருப்பேன், மூத்தவரே. எனக்கு யாருமில்லை. பெரும்படை சூழ்ந்த களத்தில் தன்னந்தனியாக என் மைந்தனை எண்ணி அழுதுகொண்டிருக்கிறேன்என்றான்.
    
பூரிசிரவஸும் சுபாகுவும் தன் அணிகள் அனைத்தும் அகற்றி வெற்றுடம்புடன் கர்ணன் முன் நிற்பதாகத் தோன்றுகிறது. அதே நேரத்தில் சிவதர் கர்ணனுக்கு மேலும் மேலும் அணிகளை பூட்ட நினைக்கிறார். அதற்காக பூரிசிரவஸிடம் சொல்லுறுதிகளை எதிர்பார்க்கிறார். கர்ணனுக்கு படைத்தலைமை கிடைக்குமா என வினவுகிறார். துரோணரிடம் கர்ணனுக்கு அங்கீகாரம் கிடைக்குமா என கேட்கிறார்கர்ணனின் புதல்வர்களுக்கு நடந்த அவமதிப்பை நினைவுறுத்துகிறார்

இங்கு நாங்கள் சில சொல்லுறுதிகளை விரும்புகிறோம் என்பதாவது அஸ்தினபுரியின் அரசருக்கு தெரியவேண்டும். ஒரு சொல்லுமில்லாது வந்து படையில் இணைந்து எளிய வில்தாங்கி என்று அணியில் நிற்க அங்கநாட்டு அரசர் எழ மாட்டார்என்றார் சிவதர்.   

மூன்று கோரிக்கைகள் உண்டு. சென்று அவற்றை சொல்க! அவற்றுக்கு அஸ்தினபுரி உடன்பட்டாகவேண்டும்ஓங்கிய குரலில் அவர் தொடர்ந்தார்.  “அங்கநாட்டரசர் எப்போதும் தனிக்கொடியுடன் படைப்பிரிவுகளின் தலைவராகவே இருப்பார். துரோணர் தவிர்த்த பிற அனைவருமே அவருக்குக் கீழ்தான் படை திரண்டிருக்க வேண்டும். அங்கநாட்டு அரசருக்கு துரோணர் உட்பட எவரும் ஆணைகளை இடலாகாது. அங்கநாட்டரசர் எந்நிலையிலும், எந்த அவையிலும், அஸ்தினபுரியின் அரசர் உட்பட எவர் முன்னிலும் முடி தாழ்த்த மாட்டார். அவர் அவரை நட்பு நாட்டரசர் எனக் கருதி போர்த்துணை கோரி அஸ்தினபுரியின் அரசாணை ஒன்று ஓலையில் எழுதப்பட்டு அங்குள்ள அனைத்து ஷத்ரிய அரசர்களுக்கும் அனுப்பப்படவேண்டும்.”
   
சிவதர் மிக உறுதியாக தன் நிலைப்பாட்டில் இருக்கிறார். அவர் சொற்கள் கர்ணனைச்சுற்றி ஒரு கவசமென அமைகின்றன. அதைத்தாண்டி பூரிசிரவஸ் கர்ணனை எப்படி அணுகுவது என்று தெரியாமல் நிற்கிறான். துரோணரின் கருத்து அறிய வேண்டியிருக்கிறது. ஆனால் அதற்கான பொழுதில்லை. அப்போது கர்ணன் தான் அங்க நாட்டு அரசன் என்று அணிந்திருக்கும் அங்கியைசிவதர் கோரிக்கைகள் என்ற கவசங்களை ஒரு விணாடியில் களைந்தெறிந்து எழுகிறான். தன் சொற்களால் அஸ்தினாபுரத் தூதுவர்களை சேர்த்தணைத்துக்கொள்கிறான்.

கர்ணன் இரு கைகளாலும் பீடத்தின் கைப்பிடியை தட்டியபடி எழுந்துஎதுவும் வேண்டியதில்லை. நான் வருகிறேன். இப்போரை வென்று துரியோதனனை அஸ்தினபுரியின் அரியணையில் அமரச்செய்கிறேன். படைத்தலைவன்  என்றால் தலைவனாக, வெறும் வீரனென்றால் வீரனாக, சூதன் என்றால் அவ்வாறாக படைநிற்க நான் ஒருக்கமே

சுபாகுவிடன் தன்னை வெறும் மனிதனென வெளிப்படுத்திக்கொள்கிறான்.

கர்ணன் அருகணைந்து தன் நீண்ட கையை சுபாகுவின் தோளைச் சுற்றி செலுத்தி அவனை அணைத்துக்கொண்டுசுஜயன் என் மைந்தன். என்னுடைய கண்ணீரும் அவனுக்கு செல்லட்டும். அதற்கப்பால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லைஎன்றான்.
  
அதே நேரம் அவன் அங்க நாட்டின் அரசனென்ற முறையில் அந்நாட்டின் பெருமையைக் காக்க வேண்டிய கடமையும் இருக்கிறது ஆகவே அவன் சிவதருக்கு இது தனக்கோ அல்லது தனது நாட்டுக்கோ எவ்விதத்திலும் பெருமையை குறைக்காது என்ற உறுதியையும் அளிக்கிறான்.

எங்கு நின்றிருந்தாலும் போர் என்னை முன்னிறுத்தியே நிகழும். வெற்றி என்னிலிருந்தே எழும். அஸ்தினபுரியிடமிருந்து ஒரு சொல்லும் நான் கோரவில்லை. இங்குள்ள எவரிடமும் நான் கோரிப்பெறுவதற்கு ஒன்றுமில்லைஎன்றான்.

கர்ணன் தன் பேருள்ளத்தை வெளிப்படுத்திய சிறப்பான ஒரு நிகழ்வாக இது அமைந்திருக்கின்றது.

தண்டபாணி துரைவேல்