Wednesday, January 16, 2019

இடைவெளி



ஜெ

பலமுறை பலகோணங்களில் போர்முனை வர்ணிக்கப்பட்டுவிட்டது. இனி என்ன சொல்ல என்றுகூடத் தோன்றும்போது இன்னொன்று எழுந்துவருகிறது.

இரு படைகளுக்கும் நடுவே இருக்கும் அந்த நீண்ட வெற்றிடம் ஒரு நதி போலிருக்கிறது. அது உச்ச அழுத்தத்தில் அதிர்ந்துகொண்டிருக்கின்றது. அங்கு ஒரு விரல் வைத்தால் அறுந்து தெறித்துவிடும். பல்லாயிரம் உள்ளங்கள் எழுந்து அங்கே போரை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. அத்தனை தெய்வங்களும் அங்கே ஏற்கெனவே செறிந்தமைந்துவிட்டன. அங்கே பறக்கப்போகும் அம்புகள் முன்னரே முனைகள் விழிகொள்ள எழுந்துவிட்டன. அங்கே நிகழும் போர் பிறிதொன்று. பல்லாயிரம் நுண்படைக்கலங்கள். பல்லாயிரம் சொல்லிலா வஞ்சங்கள். பல்லாயிரம் பருவிலா விசைகள். இங்கிருந்து பார்க்கையில் அந்த இடைவெளி தெய்வங்களின் கையில் சாட்டை போலிருக்கிறது. அல்லது பெருநாகமா? செங்குருதி ஒழுக்கா? ஒரு புண்வடுவா? அனலா?

என்ற இடம் ஒரு திகைப்பை உருவாக்கியது. தெய்வங்கள் எங்கே இருக்கமுடியும்? அந்த வெற்றிடத்தில்தானே? அங்கே கண்ணுக்குத்தெரியாத போர் நடந்துகொண்டே இருக்கிறது. அதை எவரும் உணரவும் முடியும். அது பெரிய வெடிப்பு. அங்கேதான் எல்லா படைகளும் சென்றுவிழுந்துகொண்டிருக்கின்றன

மகாதேவன்