Thursday, January 17, 2019

எந்த அளவு வரலாறு?




அன்புள்ள ஜெ

வெண்முரசை எந்த அளவுக்கு வரலாறாக வாசிப்பது என்னும் குழப்பம் எனக்கு உள்ளது. பல இடங்கள் சாகசக்கதைகளாக உள்ளன. தொன்மக்கதைகள் வருகின்றன. சில இடங்கள் நேரடியாகவே மாயக்கதைகள். இதை எப்படி எடுத்துக்கொள்வது?
எச்.ராஜேஷ்

அன்புள்ள ராஜேஷ்

வெண்முரசை வாசிக்கையில் இத்தகைய சில இடர்கள் தோன்றும். இது எழுதப்படும் தர்க்க ஒழுங்கை முதலில் விளக்கிவிட்டால் புரியும் என நினைக்கிறேன். மகாபாரதம்போன்ற செவ்வியல்நூல்களுக்கு நான்கு அடுக்குகள் உண்டு. ஒன்று, அது நேரடியாகவே வரலாறு. இன்னொன்று, அது அது குறியீட்டுக்கதைகளும் தொன்மக்கதைகளும் நம்பிக்கைகளும் அடங்கிய தொகுப்பு. மூன்று அது மானுட உணர்ச்சிகளின் பெருந்தொகை. நான்கு குழந்தைக்கதைகளின் தொகுப்பு. இந்நான்கு வகைமைகளையும் பின்னிப்பிணைத்துக்கொண்டே வெண்முரசு செல்லும். சில இடங்களில் அது குழந்தைக்கதைகளுக்குரிய சித்தரிப்பைக் கைக்கொள்ளும். சில இடங்களில் அது குறியீட்டுக்களத்தில் விரியும்.

வரலாறாக இந்நாவல் கொள்வது அன்றிருந்த அரசியல்சூழலையும் குலங்களுக்கிடையே பூசல்கள் உருவாகிவந்த விதத்தையும் மட்டுமே. அதைக்கூட பெரும்பகுதியை கற்பனையால் நிரப்பியே சொல்கிறது, ஏனென்றால் இந்தக்காலகட்டத்தில் வரலாற்றெழுத்துக்கான ஆதாரங்கள் மிகக்குறைவு. பொதுவாக அன்றைய வரலாற்றுச்சூழலில் இயல்வதற்கு வாய்ப்பில்லாதவற்றை மட்டும் தவிர்க்கிறேன். அதேசமயம் தொன்மநம்பிக்கைகளை பெரும்பாலும் அப்படியே வைத்துக்கொள்கிறேன்

ஜெ