Monday, January 28, 2019

பிள்ளைதின்னி



அன்புள்ள ஜெ

குந்தி கர்ணனை வேண்டிக்கொண்டு எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வதை வாசித்தபோது எனக்கு நீங்கள் எழுதிய அன்னை என்ற கதைதான் ஞாபகம் வந்தது. ஒரு பெண் தன் குழந்தையுடன் படுத்திருக்கிறாள். அவள் ஒரு கனவு காண்கிறாள். அதில் அவள் வெளியே சென்று தன் குழந்தையைத் தின்னும் ஒரு பன்றியை கனவுகாண்கிறாள். தன் குழந்தையை வாயில் கடித்தபடி தெய்வமாக அமர்ந்துவிடுகிறாள்:

அந்தக்கதையைப்பற்றிய ஒரு பேச்சில் சில அன்னையர் தன் பிற மக்களுக்காக ஒரு மகனை கொல்வார்கள். பெரும்பாலும் மூத்தமகனை. நேரடியாக அல்ல. கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வார்கள். அவனை பிணைக்கைதிபோல வைத்து வேலைசெய்யச்செய்து தன் மற்றபிள்லைகளை வளர்ப்பார்கள். தன் மகனே ஆனாலும்கூட அந்த மூத்தமகனின் வாழ்க்கையை அழிப்பதைப்பற்றி கவலையே படமாட்டார்கள் என்று சொன்னீர்கள்

என் அப்பா அப்படிப்பட்டவர். 17 வயதில் அவர் வேலைக்குச் சென்றார். அவர் திருமணம் செய்துகொண்டது 51 வயதில் அதுவரை நல்ல சட்டைபோட என் பாட்டி விட்டதில்லை. ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட விட்டதில்லை. திருமணம் செய்துகொள்ளவும் அனுமதிக்கவில்லை. குற்றவுணர்ச்சியை உருவாக்கிக்கொண்டே இருந்தார். கடைசித்தங்கைக்கு திருமணம் ஆனபின்னாலும் கூட திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. எட்டு பெண்கலுக்கு சீர் செய்ய யார் இருக்கா, நீ திருமணம் செய்துகொண்டால் நானும் என் பெண்களும் தெருவில் நிற்கவேண்டும் என அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். ஆனால் என் அப்பா திருமணம் செய்துகொண்டார். ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே இறந்துபோனார். பாட்டி எங்களுடந்தான் இருந்தார்கள். அம்மா பாட்டியைப்பற்றி சொல்லும்போது பிள்ளையத்தின்னி என்றுதான் சொல்வார்கள். அப்பாவுக்குரிய வேலை அம்மாவுக்கு கிடைத்ததனால் நாங்கள் பட்டினி இல்லாமல் வாழ்ந்தோம்.

குந்தி போன்ற பெண்கள் நம் சமூகத்திலே இருந்துகொண்டேதான் இருக்கிறர்கள்


சுரேஷ்குமார்