அன்புள்ள ஜெயமோகன் சார்,
இன்று கார்கடலில் குந்தி “நான் உன்மேல் தீச்சொல்லிடுவேன் என்றபோது நீ அகத்தே ஏளனம் கொண்டாய் அல்லவா?” என கேட்கிறாள். உணமையிலே எனக்கு யாரவது சாபம் கொடுத்தால் சிரிப்புதான் வரும். என மனதில் தோன்றும் ஒரே காரணம் " இவன்லாம்,இவள்லாம் ஒரு ஆளு, நீலாம் சாபம் வேற குடுக்குறியா ? என்று என் மனம் உள்ளுக்குள் அதை எண்ணி எண்ணி சிரிக்கும். நாம் யாருக்கும் அவர்களின் செயல்களினால் அல்லாமல் வேறு செயல்களை செய்ய சாத்தியம் இல்லை. முக்கியமாய் அவர்கள் அவர்களின் தேவைக்காய் நம்மீது நம்பிக்கை கொண்டு நிற்கும்போது நமது செயல்கள் எதிர்மறையாகவோ இல்லை அவர்கள் எண்ணியே பார்த்திருக்காத கோணத்திலோ அமையும்போது அதிர்ச்சியில் அடிக்கவருவார்கள் இல்லை சாபம் விடுவார்கள். இதற்கு முதல் காரணம் நம்மை அவர்கள் இலகுவாக மதிப்பிடுகிறார்கள் என்ற ஆணவம்தான் . நான் எனது வாழ்வில் கற்றுகொண்டது தகுதி இல்லாமல் யாரிடமும் தகுதி இருப்பதாக நினைத்துகொண்டு உதவியை கேட்க கூடாது என்பதுதான்.அதுவே அவர்களின் ஆணவத்தை சீண்டுவது போல் இருக்கும். ஆனால் கர்ணன் தனது சொந்த அம்மாவிடம் சிரிக்கிறான். கம்பீரமான அரசியாய், அன்பான அம்மாவாய் , ஆறு பேரும் விளையாட்டாய் சண்டை போட அதற்கு மத்தியஸ்தம் செய்பவளாய், புத்திமதி கூறுகிறவளாய், தனது கீழ்மைகளை கண்டு முகம் சுழிக்கிறவளாய், தனது திருமணம், குழந்தைகள் எல்லாவற்றிலும் கலந்து கொள்பவளாய் என அவளை ஆயிரம் தருணங்களில் கனவிலும் நினைவிலும் கர்ணன் குந்தியை வைத்து பார்த்து இருப்பான். ஆனால் அவனின் எல்லா தருணங்களிலும் கூடவே இருந்தவன் துரியோதனன்தான். துரியோதனின் திருமணதிற்கு கூட ஆசி வழங்கியவள் குந்தி. ஆனால் அது எல்லாம் காலம் கடந்துவிட்டது. இன்று அவளே அவனுக்கு ஒரு பொருட்டு அல்ல என்னும் போது ஏளனம் வராமல் என்ன செய்யும்?
அனைத்து வாசல்களையும் தட்டிவிட்டு கடைசியில் அவனைக்கொண்டே அவனை வீழ்த்தும் ஆயுதத்தை எடுத்து குந்தி “தருணங்களுக்கேற்ப உருமாறியும் உருப்பெற்றும் கடந்துவருவதே மானுட இயற்கை. நீ அத்தனை தருணங்களிலும் உன்னை மாறாது அமைத்துக்கொண்டாய். ஆகவே தளிர்க்காத பூக்காத கல்மரமாக நின்றாய்”எனவும் கூறுகிறாள்."குந்தி நீ என்ன மாற்றம் அடைந்தாய்?"என கர்ணன் ஒரு வரி கேட்டால் கதையே மாறிபோய் இருக்கும் ஆனால் கர்ணனுக்கு அவள் கூறுவது உண்மை என தெரிந்து இருக்கிறது.ஆதலால்தான் அவன் அவளிடம் வீழ ஆரம்பிக்கிறான். உண்மை எவ்வளவு பெரிய ஆயுதம் என்பதும் அது எப்படியோ நம்மை வீழ்த்தும் என்றும் புரிந்தது. அறியப்படாத அல்லது பகிரப்படாத ரகசியங்கள் என்பது உண்மைதானா?
குந்தி "உண்மை மிகச் சிக்கலானதாகவே இருந்தாகவேண்டும் என்பதில்லை. அது மிகமிக எளிதானதாகவே இருக்கலாம். உச்சநிலை மெய்மைகள் மிகமிக உலகியல்சார்ந்ததாக, மிக அன்றாடத்தன்மை கொண்டதாக இருக்கலாம். அது பெண்களுக்கே புரியும். ஆண்கள் அடுமனைக்குச் செல்லவே ஏழுமலை கொண்ட காட்டுப்பாதையை தெரிவுசெய்வார்கள் என நாங்கள் பெண்கள் சொல்லிக்கொள்வதுண்டு” என்றாள். முதலில் இதை வாசித்தபோது குந்தி எப்போது சமைத்தாள் என எண்ணினேன்? ஏனென்றால் அவளை விதுரர்,திருதாஷ்டிரர், பீஷ்மர் என அனைவரும் அவள் ஒன்றுமே இல்லாமல் வெறும் கனவினை வைத்துக்கொண்டு இருக்கும்போதும் "அரசி" என்றுதான் கூப்பிடுகிறார்கள். ஆதலால் குந்தி சமைக்கும் பிம்பமே மனதில் உருவாகவில்லை.பாஞ்சாலி மாமலரில் சமைத்து பீமனுக்கு விருந்து அளிக்கும் பிம்பம் மனதில் இருந்தது. ஆனால் திருப்பி வெண்முரசை படிக்கும்போது அவள் தனது வாழ்நாளில் நிறைய நேரம் சமைத்து கொண்டுதான் இருந்திருக்கிறாள். சத்ருங்கசிங்கதில் மாத்ரியுடன் தொடங்கிய வாழ்க்கை ,பிறகு இடும்பவனத்தில், பகாசூரனின் நாட்டில், பாஞ்சாலத்தில் எல்லாம் சமைத்துக்கொண்டே இருக்கிறாள். பாஞ்சாலியை அர்ஜுனன் திருமணம் முடித்து வரும்போதுகூட சமைத்துக்கொண்டுதான் இருக்கிறாள். அத்தையும் மருமகளும் கூட சமைத்துக்கொண்டே பலவிஷயங்களை பேசி இருப்பார்கள். பெண்களோடு நீ இயைந்து நீ உலகியல் ஆற்றவில்லை என்பதுதான் பொருள். பெண்கள் சுயநலவாதியை ஒரு தடவை பேசிய உடனேயே கண்டுகொள்கிறார்கள்.
எல்லாம் முடிந்தபின் கர்ணனின் தோற்றத்தை குறித்து வியக்கிறாள் குந்தி. அவளுக்கு அவனை பெற்றெடுக்க காரணமானவர் ஞாபகத்திற்கு வந்திருப்பார் என நினைக்கிறேன். அதுதான் அன்னைக்கும் மகனுக்குமான உறவுபோலும். குந்தி கிளம்பி சென்ற பின்னும் கர்ணனின் கண்களில் இனி அவள்தான் இருக்கபோகிறாள்
ஸ்டீபன்ராஜ்