Friday, January 25, 2019

கைவிட்டாளா குந்தி 2


அன்புள்ள ஜெ

வாசகர் சதீஷ் எழுதியிருந்த குறிப்பை வாசித்தேன். குந்தியிடமிருந்து கர்ணன் யமுனையில் தற்செயலாகக் கைவிடப்பட்டதாகவே வெண்முரசில் வருகிறது. வேண்டுமென்றே அவள் கர்ணனை கைவிடவில்லை. அவளுடைய உறுதியான கதாபாத்திரம் வெண்முரசில் பின்னர் உருவாகி வருகிறது. அந்த இயல்புக்கு அவ்வாறு கைவிடுவது பொருந்தாது. அவள் சின்னப்பெண்ணாகவே தெளிவான உறுதியான பெண்மணியாகவே இருக்கிறாள்.

ஆனால் கைவிடாவிட்டால் கதையின் மைய முடிச்சு நிகழாது. ஆகவே கைவிடுவதும் வருகிறது. அவள் நீந்தி திரும்பிவந்துவிடுகிறாள். மார்த்திகாவதிக்கு வந்ததுமே தன் குழந்தையை தேடிக்கொண்டுவர அவளால் ஆளனுப்பியிருக்க முடியும். அப்போதுதான் அஸ்தினபுரிக்கு மணமகளாகச் செல்லும் வாய்ப்பு அமைகிறது. அதைப்பற்றிய பேச்சுவந்ததுமே அவள் அப்படியே அதை தனக்குள் வைத்துக்கொள்கிறாள். குந்திபோஜரிடம் எதையுமே சொல்லவில்லை. அவனை அவள் ரகசியமாக அண்ணன் வ்சுதேவனை அனுப்பி தேடுகிறாள்.

அதுதான் கைவிடுதல். அந்த கைவிடுதல் மிகுந்த மனத்தெளிவுடன், எதிர்காலத்தை கணக்கிலிட்டு நிகழ்த்தப்படுகிறது

மகாதேவன்