Saturday, January 12, 2019

கனவுகளின் நாயகன்




அன்புள்ள ஜெ

வெய்யோன் முதல் ஒரு இயல்பு கர்ணனுக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அவன் அதிகமான நூல்களை வாசிப்பவன் அல்ல. யுதிஷ்டிரனைப்போல. அவனுக்கு அலைந்து திரிந்த அனுபவங்களும் இல்லை. அர்ஜுனனையும் பீமனையும்போல.அவன் கிருஷ்ணனைப்போல மெய்ஞானகுரு கொண்டவன் அல்ல. ஆகவே அவனுடைய மன ஓட்டங்கள் குறைவானவை. பெரும்பாலும் அவை சந்தேகமும் தயக்கமும் குழப்பமுமாகவே இருக்கின்றன.

அவன் பெரும்பாலும் பேசுவதில்லை. பிறர் பேசுகையில் மீசையைநீவியபடி சும்மா இருக்கிறான். அவன் நிலையழிந்துபேசுவது மது அருந்தியிருக்கும்போது மட்டும். அப்போது கொஞ்சம் clownish ஆகவும் இருக்கிறான். அவனைப்போன்ற இறுக்கமான மனிதர்கள் மது அருந்தினால் அப்படி ஆகிவிடுகிறார்கள்.

ஆனால் அவன் ஒரு நாயகன். ஒரு ஹீரோவுக்கு ஆழமாக வெளிப்பாடு இருந்தாகவேண்டும். அது அவனுக்கு கனவு வழியாகவே நிகழ்கிறது. கர்ணன் பரசுராமரிடமிருந்து ஞானம் பெறுவதும் சரி தன் ஆழத்திலுள்ளவற்றை புரிந்துகொள்வதும் சரி கனவுகள் வழியாக. அல்லது கனவுக்குச் சமானமான அனுபவங்கள் வழியாகத்தான். வெய்யோன் நாவலில் அவன் இளம் தட்சனைப்பார்த்ததும் சரி மீண்டும் பார்ப்பதும்சரி கனவுதான் என்று சொல்லலாம். அவன் தன் வில்லை மீட்டு எடுப்பதும் கனவில்தான்.

கனவு வழியாக அவன் இன்னொரு வாழ்க்கை வாழ்கிறான். மெய்வாழ்க்கையில் மிக இறுக்கமாகத் தன்னை ,குறுக்கிக்கொள்வதனால் அவனுடைய கனவுகள் விரிந்துபரந்துள்ளன. கனவுகளில் அவன் கட்டற்று இருக்கிறான். இத்தகைய ஆழமான விரிவான கனவுகள் வெண்முரசில் எவருக்குமே அளிக்கப்படவில்லை

சுவாமி