Friday, January 18, 2019

கடத்தல்அன்புள்ள ஜெயமோகன் சார்,


“கடத்தல் அத்தனை எளிதல்ல. இங்குள்ள ஒவ்வொரு இலைநுனியிலும் அமுதெனும் நஞ்சு. ஒவ்வொரு சுனையிலும் நஞ்செனும் அமுது. இதன் மாயங்களை எண்ணி எண்ணி பிரம்மன் சொல்மறக்கக்கூடும்" இது பன்னிருபடைகளத்தில் வரும் பீஷ்மரின்  வரிகள். "ஒரு விழவிலிருந்து பிறிதொன்றுக்கென சென்றுகொண்டே இருக்கவேண்டும். பாரதவர்ஷம் முழுக்க ஒருவன் அலைவான் என்றால் ஒவ்வொரு நாளும் விழவிலேயே வாழ்ந்து முதிர்ந்து மறைய முடியும்" இது பன்னிருபடைகளத்தில் வரும் இளையயாதவரின் வரிகள். இரண்டுமே ராஜசூயதிற்க்காய் இந்திரபிரஸ்தம் தயாராகும்போது கூறப்பட்டவை. ஓன்று moothaathayaiஇந்த வரிகள் சொல்லபட்ட தருணங்கள் முற்றிலும் வேறானவை.கார்கடலின் இருபது,இருபத்தியொன்றாம் அத்தியாயங்களை படிக்கும்போது  இது நினைவுக்கு வந்தது. அப்போதே இளையயாதவர்  த்ரௌபதி மூலமாக  பாண்டவர்களை தூண்டிவிட்டு   ராஜசூயம் செய்யவைத்து குருஷேத்ரதிற்க்கான ஒத்திகையை பார்த்துவிட்டார் என தோன்றுகிறது. நாகவேள்விக்கு தயாராகிகொண்டிருக்கும் மகதத்தில் ஜராசந்தனை சந்திக்க செல்லும்முன் ஏழு தோற்பறைகளைபீமன் கிழிக்க  அர்ஜுனனிடம் இளைய யாதவர்   " போர் தொடங்கிவிட்டது பார்த்தா" என்று கூறுகிறார்.

"ராஜசூயம்'" குருஷேத்ரத்தின் இன்னொருவடிவம். அனைத்து அரசர்களும் கலந்துகொண்டனர் அவர்களின் உள்ளங்களின் எண்ணங்களையும், வஞ்சங்களையும்  அவர்களின் நெறிகளையும்  பலங்களையும் பலவீனங்களையும் புரிந்துகொள்கிறார். குருஷேத்திரத்தில் மாபெரும் தொல்லையாய்  இருப்பார்கள் என்று எண்ணிய ஜராசந்தன்,சிசுபாலன் எல்லாம் அன்றே கொல்லபட்டுவிட்டார்கள். ஜரசந்தன் இளைய யாதவரிடம் பன்னிருபடைகளத்தில்  ..“ஆம், ஹிரண்யகசிபுவோ, ஹிரண்யாக்‌ஷனோ, ராவணனோ கூட அல்ல.,ஆனால் அந்நிரையில் வருபவன்” என்று கூற ,அதற்கு  இளைய யாதவர் “அவர்களனைவருமே மானுடம் கட்டுப்படுத்தி மேலேறியவற்றை கட்டவிழ்க்க முயன்றவர்கள். ஒவ்வொரு யுகத்திலும் அவர்கள் எழுந்தபடியேதான் இருப்பார்கள். ஏனென்றால் புதையுண்ட மரம்போல தொல்வேதம் மானுடனுக்குள் உயிர்திமிறிக்கொண்டேதான் இருக்கும். அதற்கு முடிவிலாத முளைக்கணுக்கள். என்றேனும் ஒருநாள் அது எழுந்து புடவியை மூடக்கூடும். அன்று இங்கே அனைத்தும் அழியும். ஊழி எழும்....” “மகதரே, நான் அரக்கர்களிலோ அசுரர்களிலோ நாகர்களிலோ ஒருவனாகக் கூட பிறந்திருக்கலாம். அப்போதும் இச்சொற்களையே சொல்வேன் என்று உமக்கு உறுதியளிக்கிறேன். ஆம், உண்மை அதுவே. வெல்வது வெல்வதனாலேயே வெல்லும் தகுதி கொண்டது. காலத்தை இடத்தைக் கடந்து விண்ணிலென நின்று நோக்குபவர் அறிவது அதையே. இப்புடவி வல்லமைகளின் முடிவற்ற மோதலால் தன்னை நிகழ்த்துகிறது.”....“எது அரக்கர்களை வீழ்த்தியதோ அரக்கர்களுடன் அது  மண்ணிலிருந்து மறைவதாக! எது அசுரர்களை அழித்ததோ அது அவர்களுடனேயே பழங்கதையாக மாறக்கடவதாக! எது நாகர்களை அழுத்தியதோ அது என்றென்றும் நம்முள் ஆழ்ந்தே கிடப்பதாக! இப்புவியில் மானுடம் வாழவேண்டும் என்றால் எது வெல்லத்தக்கதோ அது வென்றாக வேண்டும். கட்டின்றி விரியும் எதன் பொருட்டும் இப்புவியை ஒப்படைக்கலாகாது. ஏனெனில் இது மானுடர்க்கோ அரக்கர்க்கோ அசுரருக்கோ நாகருக்கோ உரித்தானதல்ல. புல்லுக்கும் புழுவுக்கும் புள்ளுக்கும் விலங்குக்கும் உரியது" எவ்வளவு பெரிய அறம்,தர்மம்.ஆதலால்தான் மனிதம் என்னும் கோடானுகோடி குருஷேத்திரங்கள் பிறந்து உதிர்கிறது போல.

ராஜசூயதுக்கு முன்னேயே ஒரு கதாசூய வேள்வி நடத்திய மகதன் ஜராசந்தனும்  தனது அன்னையின் மூலம் கிருஷ்ணனுக்கு எதிராய் வஞ்சம் வளர்த்துக்கொண்ட சேதியன் சிசுபாலனும் சாவது  எதோ  குறியீடு போல இருக்கிறது. ராஜசூயத்தில் அவிக்கபட்ட அமுதென்னும் நஞ்சுகள். மீதியாய் எஞ்சியவர்கள் நஞ்செனும் அமுதுகள். இந்த விழவையும் கடந்துசெல்ல இளையயாதவரால் மட்டும்தான் முடியும் என நினைக்கிறேன். ஒவ்வொரு நொடியும் விழிப்பாய் இருப்பது என்றால் என்ன என்பதும் வெண்முரசின் ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு முக்கியம் என்றும் புரிகிறது.


ஸ்டீபன் ராஜ் குலசேகரன்