Wednesday, January 16, 2019

கர்ணனின் பொற்தேர்தன் சிறப்பை தன்னை சுற்றி இருக்கும்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் தெரிவிக்கின்றனர்.  மற்றவர்களுக்கு நம் சிறப்பை அறிந்துகொள்வதில் சிறிதளவும் ஆர்வமிருப்பதில்லை. ஆகவே நாம் ஏதோ ஒரு வகையில் உலகின் கவனத்தை ஈர்த்து நம்மை கவனிக்கவைக்க விழைகிறோம்.  ஆகவே மக்கள் கூட்டத்தில் ஒருவனென கரைந்து போய்விடாமல்   தம்மை தனித்து காட்டுவதற்காக   தமக்கென ஒரு தேரை உருவாக்கி அதில் உலா வருகிறார்கள்.   இந்தத் தேரை அவரவருக்கிருக்கும் திறனுக்கேற்ப தயாரித்துக்கொள்கிறார்கள்.    இங்கு தேர் என்பது ஒரு தலைமைப்பதவி  என இருக்கும்  ஒரு பதவிக்கான நாற்காலியாக இருக்கும். ஒரு கலையில் திறன் மிக்கவன் என வெளிக்காட்டுவதாக இருக்கும். நகைச்சுவையாக பேசுவது, உரத்த குரலில் பேசுவது, விறைப்பாக நடப்பது, வித்தியாசமான உடையணிவது, வேறுபட்ட சிகையலங்காரம் செய்வது போன்றவற்றை தம்முடைய தேர் எனக்கொண்டு உலா வருபவர்கள் இருக்கிறார்கள். 

   சமூகத்தின் கீழ்நிலையிலிருந்து மேலெழும்பி வருபவர்கள்  தன் சமூகத்திற்கும் உலகிற்கும் தன் உயர்வை அறைகூவி உரைக்கும் விதமாக இத்தகைய தேர்களைக்கொள்வதுண்டு. உங்கள் எதிர்ப்பை , அலட்சியத்தை எல்லாம் தாண்டி நான் முன்னேறி வந்துவிட்டேன் என்று காண்பிக்கும்  விதமாகவும் தான் இருந்த சமூகத்திற்கு தன் வாழ்வின் மூலம் வழிகாட்டி ஊக்கப்ப்படுத்தும் படியாகவும் தன்னை சற்றே அதிகமாக உயர்த்திக்காட்ட நினைப்பார்கள். அது மற்றவர்கள் பகட்டுக்காக செய்துகொள்ளும் விளம்பரங்கள் போல் அல்ல. இது அவரகளுக்கு மேலும்  அதைவிட அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்திற்கு மிகவும் தேவையாக இருக்கும்.  

    வெண்முரசில் கிருஷ்ணர், திரௌபதி கர்ணன் மூவரும் தங்களுக்கென பொற்தேர்களை கொண்டவர்கள்.   யாதவ அரசர்கள்ல் மற்ற அரசர்களால் தாழ்வாகக் கருதப்படுபவர்களாகவும் ஒடுக்கப்படுபவர்களாகவும் தங்களுக்குள் ஒற்றுமை இல்லதவர்களாகவும் இருந்து வந்தனர். அவர்களை ஒருங்கிணைந்து ஒரு புதிய அரசை நகரை கிருஷ்ணர் உருவாக்கி நிலை நிறுத்துகிறார்.  யாதவர்கள் தமக்கெனெ பெருமிதம் கொள்ளுபடியாகவும் அவர்களின் ஒற்றுமை அவர்களுக்களிக்கும் பெருமையை பறை சாற்றும் விதமாகவும்     துவாரகை என்ற பெருநகரை உருவாக்கியிருக்கிறார். அந்த நகரத்தின் பிரதிபலிப்புதான் அவருடைய பொற்தேர்.   

    பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தை துரியோதனனுக்கு என பகிர்ந்தளிக்கப்பட்ட பின் தமக்கென்று இந்திரப்பிரஸ்தம் என்ற ஒரு நகரை தங்களுக்கென உருவாக்கிக்கொள்கிறார்கள்.  தாம் இவ்வாறு ஒரு புதிய நாட்டை கட்டமைத்துக்கொண்டதை  உலகுக்கு  பறைசாற்றுவதற்காகவே  அவர்கள் அஸ்வமேத யாகம் நடத்துகிறார்கள். திரௌபதி இனி நான் பேரரசி என்று நிறுவியதைக் காட்டவே தமக்கென ஒரு பொற்தேரை வடிவமைத்துக்கொள்கிறாள். 

    கர்ணன் அங்க நாட்டை துரியோதனனிடம் பரிசெனப் பெற்றவன். அவனை அரசென ஏற்றுக்கொள்ள மற்ற நாட்டு மன்னர்களும் அவன் நாட்டு மக்களுமே தயங்கும் நிலையில் இருந்தவன். அவன் தன்நாட்டில்  நல்லாட்சியை நிறுவி படைநடத்தி வெற்றிகள் சூடி நாட்டை வளமாக்கி இருக்கிறான் ஒரு  சிறந்த அரசனென உலகிற்கு எடுத்துக்காட்டி நிறுவவே அவனுக்கு பொற்தேர் தேவைப்படுகிறது. அது போர்த்தேரும் கூட. அவன் ஷத்திரியன் இல்லை என்பதால் போரில் அவனை சேர்த்துக்கொள்ள தயங்கும் மன்னர்களுக்கிடையே அவன் அனைவரையும்  விட உயர்ந்த நிலையில் தான் இருப்பதைக் காட்டிக்கொள்ளும் விதமாக பொற்தேரை கைக்கொள்கிறான்.  தேரோட்டுபவனின் மகனெனஅறியப்பட்ட கர்ணன் ஏறிச்செல்வது மன்னர்கள் பலர் வியக்கும் பொற்தேர் என ஆவது உலகிற்கு அவன் அளிக்கும் ஒரு செய்தியாகும்.

    நம்முடைய இந்திய சமூக விதிகள் பல ஒரு சாதியினரை தாழ்த்தப்பட்டவராக ஆக்கி நடத்தி வந்தது. ஒரு சமயம் அந்த சமூக விதிகளை சீர்திருத்தி எழுத வேண்டிய நிலை வந்த போது அதற்கான தலைமைப்பொறுப்பை அந்த  தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்த ஒருவர் ஏற்று இந்திய சட்டம்  உருவாக முக்கியப் பங்காற்றினார்.   அந்தப் பதவி அவருக்கான  பொற்தேர் அல்லவா?

தண்டபாணி துரைவேல்