ஜெ
முதற்கனலை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். கணியன் பூங்குன்றனின் வரிகளுக்குச் சமானமான வரிகளாக இந்த வரிகள் வந்தன என்ற வரிகளை இங்கே இப்படிக் கண்டது ஒரு பெரிய ஆச்சரியமான மகிழ்ச்சியை ஏற்படுத்தியது,.
நெடுநீர்வழிப்படும் புணையெனப்போகும் இவ்வாழ்வில் பெரியோரென்றும் சிறியோரென்றும் எவருமில்லை.
நீர்வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆதலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
வெண்முரசின் சாராம்சமே இதுதான் என தெரிந்தது. தமிழையும் இந்தியாவின் மெய்ஞான மரபையும் இணைப்பது. இதை ஒற்றை உரையாடல்பரப்பாக காட்டுவது. அந்த மகத்தான இலட்சியத்தை இங்கே கோடிட்டுக் காட்டிவிட்டீர்கள்.
தமிழகத்தின் ஞானமாகிய சைவம், வைணவம் பௌத்தம் சமணம் அனைத்துமே இந்திய அளவில் முகிழ்த்து வலர்ந்தவை. நாம் மொழியாலும் கருத்தாலும் ஒன்றாகவே இருந்தோம். வெண்முரசு அதை உறுதிசெய்யும் காவியம்
வணக்கம்
திருஞானசம்பந்தன்