வணக்கம் சார்,
போருக்கு முந்தைய கதைகளில் சூழ்நிலைக்கேற்ப வீரக்கலை பற்றிய கருத்துக்கள் அல்லது வர்ணனைகள் வரும். அப்போதெல்லாம் அதை பற்றி எழுதும் போது நினைத்து கொள்வேன், போர் ஆரம்பித்த பிறகு தினமும் எழுதும் படி இருக்கும் என்று. ஆனால் போர் ஆரம்பமான பிறகு தான் தெரிந்தது கடலின் கரையில் நின்றால் அலையை ரசிக்கலாம், கடலில் குதித்த பிறகு எந்த அலையை தனியாக ரசித்து சொல்வது.
நூல் இருபது – கார்கடல்-15 இல் வந்த கர்ணனின் சொல்லாக “மிகச் சரியாக படைநூல்கள் கூறும்படி அமைக்கப்பட்டுள்ளன இச்சூழ்கைகள். ஆனால் நூல்களில் இல்லாத ஒன்று எப்போதும் படைகளில் நிகழும். அதுவே போரை வடிவமைக்கும்” என்று கர்ணன் சொன்னான். இந்த வேறுபாடு உண்மையை மீண்டும் உணர்த்தியது. வியுகமாக இருந்தாலும் அல்லது எந்த சண்டை நுட்பமாக இருந்தாலும் ஏட்டில் படித்து புரிந்து கொள்வதற்கு நடைமுறை சாத்தியங்களுக்கும் உள்ள நடைமுறை வேறுபாடு தேர்ந்த வீரர்களால் மட்டுமே அறியமுடியும். வீரக்கலை புதிதாக கற்பவர்கள் சில நுட்பங்களை அறியும்போது அது தான் உச்சம் என்று நினைப்பார்கள். ஆனால் அதை உடைக்கும் இன்னொரு நுட்பம் தெரியவரும் போது, யாராலும் தப்பமுடியாத நுட்பத்தை சொல்லி தரும்படி கேட்பார்கள். அப்படி ஒரு நுட்பம் கிடையாது மாட்டி கொள்வதும் தப்பிச்செல்வதும் எதிரில் நிற்பவரின் திறமையை பொருத்து தான் உள்ளது என்று கூறினால் ஏற்க மறுப்பார்கள். மந்திரம் போல ஒரு நுட்பம் தன்னை எந்த நிலையிலும் காக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர்.
ஏட்டில் படித்து அதையே பல ஆயிரம் முறை பயிற்சி செய்தாலும் உண்மையான சண்டையில் அந்த நுட்பத்தை பயன்படுத்த ஒரு மனோ தைரியம் தேவைப்படும்.
கர்ணன் போன்ற ஒரு பெருவீரனின் நுழைவே ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. குலத்தின் இயல்பை வைத்து படைகளை கணிக்கும் கர்ணனின் இந்த ஆற்றல் துருபத மன்னனை சிறை பிடிக்கும் பாஞ்சால போரில் அர்ஜுனனிடம் வேறு வகையில் வெளிப்படும்.
நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 8“ இல் கழுகு ஓசையிடாது. வியூகத்தில் அந்த உயிரினத்தின் அமைப்பு மட்டும் அல்ல இயல்பும் கருத்தில்கொள்ளப்படும்” என்றான் அர்ஜுனன்
“மூத்தவரே, இந்த மலைநிலத்தை அவர்கள் ஆயிரம் வருடங்களாக காத்துவருகிறார்கள். எத்தனை ஆதிக்கப்படைகளை கண்டிருப்பார்கள். அத்தனை எளிதாக குலத்தையும் மண்ணையும் விட்டுக்கொடுப்பவர்களாக இருந்தால் அவர்கள் இதற்குள் அழிந்திருப்பார்கள். அப்படி அழிந்த பல்லாயிரம் குலங்கள் இங்குள்ளன” என்றான் அர்ஜுனன்.
ஆனால் இன்றைய போரில் கார்கடல்-22 அர்ஜுனனின் வீழ்ச்சி மனதை வருத்தியது. இரு பெரும் வீரர்கள் மோதும் போது ஒருவர் வீழ்வது கசப்பான உண்மை தான்.
நன்றியுடன் ,
ரஜினிகாந்த் ஜெயராமன்