அன்பு ஜெயமோகனுக்கு,
பெருங்காப்பியங்களாக நிலைபெற்றிருக்கும் இராமாயண, மகாபாரதக்
கதைகளின் அடர்த்தியான தொகுப்பை எண்ணி எண்ணி சமீபமாய்த்தான்
பிரமித்துப்போயிருக்கிறேன். வாய்மொழிக்கதைகளாக வழங்கப்பட்ட கதைகளைத் தொகுத்ததோடு
அவற்றை நெடுங்காப்பியங்களாக நமக்கு அளித்த வியாசரை இப்போது நெருக்கமான
நண்பராக உணர்கிறேன். மகாபாரதம், இராமாயணம் போன்ற காப்பியங்களைப் புனிதப்படுத்தி
வணங்க வலியுறுத்தியவர்களால் அக்காப்பியங்களை விட்டு விலகியது குறித்து வருத்தம்
கொள்கிறேன். வைணவத்தின் புனித நூல்களாக நான் கருதியிருந்த அக்காப்பியங்கள் அடிப்படையில்
இராமனை நல்லவனாகவும், இராவணனை கெட்டவனாகவும் முன்னிறுத்தி இருப்பதாகவே கோபப்பட்டேன்.
சமீபமாய் அவற்றின் சில கதைகளை ஊன்றிப்படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கும்
அக்காப்பியங்கள் இருவரையும் புனிதச் சட்டகங்களுக்கு அடைத்ததாகத் தெரியவில்லை. அது
அவர்களை இயல்பாகவே அணுகி இருக்கிறது. கெட்டவனாகவே
இராவணனைச் சித்தரிப்பதாக இருந்தால் சீதையைத் தொடாமல் தூக்கிச் செல்பவனாக அவன்
காட்டப்பட்டிருக்க வேண்டியதில்லையே? அதைப்போன்றே இராமனை நல்லவனாக மட்டும் சித்தரிப்பதாக
இருந்தால் சீதையைத் தீக்குள் இறங்கச் சொல்லும் சந்தேகம் கொண்டவனைப்போன்று
காட்டப்பட்டிருக்க மாட்டானே? மேலும், அக்காப்பியங்களைக் கொண்டு இராமனைப்
புனிதப்படுத்தும் மத அரசியலால் அக்காப்பியங்களில் இருந்து விலகி இருக்கவே நாங்கள்
பழக்கப்படுத்தப்பட்டோம். மகாபாரதத்திலும் கிருஷ்ணர் கதையின் கிளைப்பாத்திரமாகவே
வருகிறார். அவரை மையப்படுத்தி அக்காப்பியம் நகரவில்லை என்பதைப் படித்தால் நிச்சயம்
உணரலாம். வியாசர் எவ்வித உள்நோக்கமும் இல்லாமல்தான் அக்காப்பியங்களை நமக்களித்திருக்கிறார்.
சில வைதீக பிராமணியக் குழுக்களின் தலையிடலால் அக்காப்பியங்கள்
அரசியலாக்கப்படுகின்றன; அவற்றில் நாம் மாட்டிக்கொண்டு தவிக்க நேரிடுகிறது. அன்றைய
வாழ்வியலோடு அக்கால வரலாற்றையும் நாம் ஓரளவு அறிந்து கொள்ள அக்காப்பியங்கள்
பெரிதும் துணைநிற்கின்றன. ஒருபுறம் அவை புறத்தில் நம் வரலாற்றைப் புரிந்து கொள்ள
உதவுவதோடு, அகத்தில் கொந்தளிக்கும் இருமைகளின் ஊடாட்டம் குறித்தும் பேசுகின்றன.
காப்பியங்களின் உலகில் நிகழும் உரையாடல்கள் நமக்கான தரிசனங்களாகவும் இருக்கின்றன.
நடைமுறை வாழ்வில் தத்தளிக்கும் ஒருவனின் மனதிற்கு உருவகங்களால் ஆறுதல் அளிக்கும்
காப்பியங்களை நிச்சயம் வருந்தலைமுறைக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும். பெருங்காப்பியங்களைக்
காலம் ஒதுக்கி ஒருவரால் படித்துவிட இயலும்; அவை தரும் அகக்கிளர்ச்சியை உணர்ந்து
கொள்வதற்கு முன்முடிவுகளற்ற குழந்தைமை வேண்டும். குழந்தைமையை இலக்கியங்களே
மீட்டுக் கொடுக்கின்றன.
நிற்க. யோக வாசிட்டம் எனும் நூலைப் படிக்கும் வாய்ப்பு
கிட்டியது. முன்னரே அந்நூலைப் படித்திருக்கிறேன் என்றாலும் இப்போது வாசித்தது
போன்ற அனுபவம் அப்போது இல்லை என்பதாகவேபட்டது. பிரயாகையின் மூன்றாவது
அத்தியாயத்தில் இடம்பெறும் ”எந்த அறிதலும் அறியப்படும் அத்தருணத்துக்கு மட்டும் உரியதே” எனும் வரியால் என் அனுபவத்தின்
விசித்திரம் புரிந்ததாகப்பட்டது. யோக வாசிட்டத்தை இன்னும் பலமுறை படிக்க வேண்டும்
என்றிருக்கிறேன்; அறியப்படும் தருணத்தில் கிடைக்கும் எதிர்பாரா
அறிதல்களுக்காக. தொகுத்துவிடவே முடியாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்
மனதின் ஊசலாட்டத்தை எளிமையாக நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள் சுநீதியின் வழியாக. ”விலகுவதை எண்ணிக்கொண்டிருப்பதே மெல்லமெல்ல
விலக்கத்தை உருவாக்குமென அறிந்தாள். பின்பொருநாள் விலகுவதைப்போல எளியசெயல் ஏதேனும்
உண்டா என வியந்துகொண்டாள்” எனும் வாக்கியங்கள் மனதின் மாயத்தன்மையை
அம்மணமாக்கி நிறுத்தின. அம்மணத்தைக் கண்ட பின்னும் உடைகளின் மீதான ருசி விலகவில்லை,
என் மனதுக்கு.
முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்),
கோபிசெட்டிபாளையம்