Wednesday, October 29, 2014

பிரயாகை 9 - பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு




அன்பு ஜெயமோகன்,

          பிரயாகையின் போர்க்காட்சி, ஒரு நிகழ்வை ஒட்டிய மனதின் அலைவைத் தெளிவாக முன்வைத்தது. போரில் வெற்றி பெறுகிறவர்கள் தாங்கள் வென்றதாகவும், தோற்றவர்கள் ஊழ் பழிவாங்கி விட்டதாகவும் கருதிக்கொள்வது அவரவர் மனப்பாங்கே. போர் ஒரு நிகழ்வு. வெற்றியும், தோல்வியும் அதன் விளைவுகள்.வெற்றியைப்  போன்றதே தோல்வியும். தோல்வியால்தான் வெற்றியை அடையாளம் காண்கிறோம். என்றாலும்,  எப்போதும் நம் மனது வெற்றியையே எதிர்நோக்குகிறது. அறவழிகளுக்கு முறையான வியூகத்தைக் கையாண்டாலும் பரவாயில்லை. வெற்றி மட்டுமே முக்கியம். வெற்றி பெற்றவர்களையே நாம் வரலாற்றுச் சான்றுகளாகவும் ஆவணப்படுத்துகிறோம். தோல்வியடைந்தவர்களை வரலாற்றில் நாம் சேர்த்துக்கொள்வதே இல்லை. தோல்வியடைந்தவனை துரோணர் தட்டிக்கொடுக்கிறார். தன்னைக் கடந்திருக்கும் வெளியைப் பார்ப்பதற்கான வாய்ப்பை அது தருவதாகவும் சொல்கிறார். /*தோல்வியில் மனிதர்கள் விதியாகி வந்திருக்கும் பிரபஞ்சத்தை அறிகிறார்கள். வெற்றியில் தன்னை மட்டுமே அறிகிறார்கள் என்று துரோணர் */ வெற்றியை மட்டுமே ஒரு மனித மனம் விழைவதற்கான காரணம் அதன் அகங்காரமே. தோல்விதான் அவன் அகங்காரத்தை நோக்கி கூரம்பை விடுக்கிறது.அகங்காரத்தின் அலறலில் தன்னைப் பின்னுக்கு நிறுத்தி பிரபஞ்சத்தைக் கவனிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டுகிறது. பிரபஞ்சத்தின் விதிகள் எளிமையானவை எனும் புரிதலும் அவனுக்குள் மெதுவாக அரும்பத் துவங்குகிறது. மிக எளிமையான பிரபஞ்சத்தின் விதிகளுக்குள் அகங்கார முகமூடியால் ஊசலாடும் மனிதனின் இறுக்கம், அவன் உருவாக்கிக் கொண்டதே. போரும் வெற்றியும் தோல்வியும் காலத்தையும், இடத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. பிரபஞ்சமோ எல்லாவற்றையும் கடந்து, எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் பேரமைப்பு. வெற்றி ஒருவனை அவனுக்குள் முடக்கிப்போட, தோல்வியோ அவனை அவனிலிருந்து விடுவிக்கிறது.அவனிலிருந்து விடுபட்டவனுக்கு தோல்வியும் வெற்றியாகும் அற்புதக்காட்சி வாய்க்கிறது. /* நம்பிக்கையிழப்பின் இறுதிக் கணத்தில் கிடைக்கும் நம்பிக்கை மாபெரும் ஆற்றலுடையது.*/ ஆம். அதுவே தோல்வியின் வெற்றி.


          /*அர்ஜுனன் போருக்கும் பயிற்சிக்கும் வேறுபாட்டை உணரவில்லை. இங்கும் அம்புகளும் இலக்குகளும்தான். சில கணங்களுக்குப்பின் இலக்குகள் மட்டும்தான் இருந்தன. அவன் இருக்கவில்லை. அவன் இல்லாததனால் இறப்பு குறித்த அச்சமும் எழவில்லை. பிறர் போர் வேறுபட்டது என உணர்வதற்கான காரணம் ஒன்றேஅது உயிரச்சம். அவன் கைகளிலிருந்து அம்புகள் சென்று அந்த தலையை தொட்டு தொட்டு மேலேற்றிக்கொண்டிருந்தன*/ பயிற்சியே போருக்கான தயார்படுத்தல்தான் என்றாலும் பயிற்சி வேறு, போர் வேறு. பயிற்சியில் நம்முன் இருப்பது மாய யதார்த்தம்; போரிலோ நிஜ யதார்த்தம். மாய யதார்த்தத்தில் நம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. நிஜ யதார்த்தத்திலோ அது நம்மால் உறுதிசெய்யப்பட வேண்டியது. அதனால்தான், போர்க்களத்தின் மனநிலை ஒருவித உச்சகட்டத்தீவிரத்தில் இருக்கிறது. அர்ச்சுன்னின் மனக்கலக்கமும் அத்தகையதுதான். மாயம், நிஜம் என இரண்டுவிதமான யதார்த்த நிலைகள் இருக்கின்றனவா எனும் கேள்வி இங்கு எழுவது இயல்பு. ஆம், மனித வாழ்வில் இருவித யதார்த்த நிலைகள் எப்போதும் உண்டு. ஆனால் இரண்டுமே ஒருநேரத்தில் வெளிப்படுவதில்லை. நாம் இருக்கும் சூழலைக் கருத்தில் கொண்டே அவை வெளிப்படுகின்றன. இப்போதைய கணத்தை மாய யதார்த்தமாகக் கருதும் ஒருவனுக்கு அடுத்த கணமே நிஜயதார்த்தமாகத் தெரிந்தாலும் தெரியலாம். சூழலும், மனநிலையுமே அடிப்படை. இங்கு நமக்கான சிக்கலே எந்த யதார்த்தம் சரி எனத் தீர்மானிப்பதுதான். நிச்சயம் நம்மால் அதைத் தீர்மானித்துவிட முடியாது. அப்புரிதலே நம்மை யதார்த்தத்தின் இருவித நிலைகளின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும்.


          அர்ச்சுன்னும் நம்மைப் போன்றே ஒரு யதார்த்தத்தை மட்டுமே உறுதியாய் நம்பிக் கொண்டிருக்க விருப்பினான். போர்க்காட்சியோ அவனுக்கு இன்னொரு யதார்த்தத்தையும் காட்டித் திகைக்க வைத்தது. /* வில்வித்தையில் முழுமையான அகஅமைதியே அம்புகளை குறிதவறாமல் ஆக்குமென அவன் கற்றிருந்தான். ஆனால் உச்சகட்ட வெறியும் அதையே நிகழ்த்துமென அப்போது கண்டான்.*/ முழுமையான அகஅமைதியே சிறந்த யதார்த்தம் என்பதாக இருந்தவனுக்கு உச்சகட்ட வெறியும் அப்படியானதே எனும் எண்ணம் கிளைத்தது பிரபஞ்ச விதியால்தான். முழுமையான அகஅமைதி  கொண்டவனுக்குள் உச்சகட்ட வெறியும் இருக்கிறது. உச்சகட்ட வெறிக்குள் முழுமையான அமைதியும் இருக்கிறது. பிரபஞ்சத்தின் விதிகளில் இருமைகளும் சந்திக்கும் புள்ளியை நோக்கிய கவனமே முக்கியமாய் இருக்கிறது. இன்னும் எளிமயாகச் சொல்வதானால், பிரபஞ்சத்தின் ஒருமையை மனிதன் இருமைகளாக வகுத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கிறான். இருமைகளுக்கு அடிப்படையாய் இருக்கும் பிரபஞ்ச ஒருமையை நோக்கிய கவனக்குவிப்பு அவனது அலைபாய்தலைக் கொஞ்சம் குறைக்கும். சமயங்கள் அதையே சாத்திரங்களாக, தோத்திரங்களாக, புராணங்களாகத் தொடர்ந்து விவாதிக்கின்றன. உடனே, சாத்திரங்கள் ஒருமையை மிகச்சரியாக அடையாளம் காட்டுகின்றனவா எனக் கேட்பது சரியன்று. இங்கு சாத்திரங்கள் உள்ளிட்ட நூல்களனைத்தும் மனிதனின் அனுபவப்பகிர்வுகளே. ஆக, அவையும் ஓரளவே ஒருமையைச் சுட்ட முனைந்திருக்கும். மேலும், அவை வழிகாட்டிகளே அன்றி நிச்சயம் வழியாகா. வழிகாட்டிகளைத் தேர்வு செய்வதும், வழியில் பயணிப்பதும் நம் தனிப்பட்ட வேலை. நமக்காக அதைப்பிறர் ஏற்றுக்கொள்வர் என்பது அபத்தத்திலும் அபத்தம். ”தன்னந்தனி நின்றது தானறிய / இன்னும் ஒருவற்கு இசைவிப்பதுவோ”, “அவ்வாறு அறிவார் அறிகின்றதலால் / எவ்வாறு ஒருவர்க் கிசைவிப்பதுவோ?” போன்ற அருணகிரிநாதரின் பாடல்கள் வழிகாட்டிகளே; அவை வழியாகா. வழியைத் தேர்ந்தெடுக்கவும், பயணிக்கவும் நம்மை அவை தயார்படுத்துகின்றன.


முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்)
கோபிசெட்டிபாளையம்.