Saturday, October 25, 2014

பிரயாகை 4 முழுமை






அன்பு ஜெயமோகன்,
முழுமையை மையப்படுத்தியே நம் தத்துவத்தளங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. முழுமையை முடிந்தவரை விளக்கிச்சொல்லவும் அவை முனைகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவ்விளக்கங்கள் நம்மிடையே புழங்கி வருகின்றன. எனினும், முழுமையை நாம் அறிந்திருக்கவில்லை. காரணம், முழுமையை நம்மிலிருந்து பிரித்தே தத்துவங்கள் அடையாளம் காட்டுகின்றன. முழுமையைப் பகுத்துக் காட்ட முடியாது என்றாலும் அறிவின் இயல்பு கருதி பகுத்தே காட்டுகின்றன. அறிவும் பகுத்தலின் ருசிக்கு முதலில் மயங்கி பின் அலறியடித்து வெளியே வந்து விடுகிறது. மீண்டும் முழுமையை வேறொரு பகுத்தலில் காண விழைகிறது. பிறகு அங்கிருந்தும் வெளியேறுகிறது. பகுத்தறிவது எப்போதும் முழுமையாகாது. பகுத்ததைத் தொகுத்து உணர்வதே முழுமை; அதுவே லீலையும். பகுப்பும், தொகுப்புமே முழுமை. பகுப்பு அலைபாய்தல் எனில் தொகுப்பு நிலைகொள்ளல். “நிலைகொள்ளலும் அலைபாய்தலும் இரு பக்கங்களாக அமைந்ததே முழுமை என்று உணர்க. செயலின்மையும் செயலூக்கமும் ஒன்றை ஒன்று நிறைப்பதே லீலை” எனும் வாக்கியங்கள் பொதித்து வைத்திருக்கும் ஞானம்  நெருக்கமானது; எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடியது.

முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்