விருப்பு, வெறுப்புகளுக்கு இடையே ஊசலாடும் உத்தானபாதனின் வாழ்க்கை ஒரு சாமானியனுடையதும்தான். இருமைகளுக்கு இடையே அலைபாய்வதென்பது எல்லோருக்கும் நிகழக்கூடியதுதான். இருமைகளால் ஆளப்படுபவர்கள் தங்கள் தொடர்ச்சியையும் அப்படியே காண்பர். “நான் விலக்கியவையும் நான் விரும்பியவையும் இணைந்துதான் மைந்தனாகி என் முன் வந்து நிற்கின்றதா?” எனும் உத்தானபாதனின் கூற்று அதையே அறிவிக்கிறது. ருசியை ஒதுக்கிவிட்டு நீதியை நிலைநாட்டுகிறேன் எனக்கிளம்பிய கோடானுகோடிப் பேர்களும் பாதியிலேயே திரும்பி இருக்கின்றனர். நீதியை விரும்பி, ருசியை வெறுக்க எங்கு கற்றுக்கொள்ள? அல்லது விரும்பவேண்டியது நீதியை மட்டும்தானா..ருசி நம் இயல்பில்லையா? உத்தானபாதன் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறான். சஞ்சலத்தோடு இருக்கும் அவனை துருவன் போன்றவர்கள் மேலும் கலக்கமூட்டுகின்றனர். இருமைகளைக் கடந்து சென்றுவிட நம்மைத் தூண்டியபடியே இருக்கின்றனர்.
உத்தானபாதன் துருவனிடம் சொல்கிறான் :”நான் விருப்புவெறுப்புகளில் அலைபாய்ந்தேன். நீ அனைத்து இருமைகளையும் கடந்துசெல்லக்கூடும். காலத்தையும் வெளியையும், இருப்பையும் இன்மையையும் நீ ஒன்றாக்கிக்கொள்ளவும்கூடும். ஆயினும் உன்னில் ஓர் நிலையின்மை இருந்துகொண்டேதான் இருக்கும்.”இருமைகளைக் கடந்த பின்னும் நிலையின்மையா என ஒரு கேள்வி உதிக்கிறது. மனதாலே இருமையைக் கடப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஒருவன் மனதைக் கடந்து விடுவதில்லை என்பதாக பதிலொன்றும் கிடைக்கிறது. காலங்கள்தோறும் அதைக்குறித்தே மனிதன் ஆய்ந்து கொண்டிருக்கிறான். துருவனுக்கு நிலைபேறு கிடைக்குமா? “மானுடமும் இப்புவியும் காலத்தில் ஒரு வெற்றுக் குமிழியாக வெடித்தழிந்தாலும் எஞ்சி என்றுமிருப்பவன்” எனும் துருவனின் கூற்று இருமைகளைத் தகர்த்தெறிந்தாலும் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. ஒருவேளை துருவனைக் குறியீடாகப் பாராமல் என்னைப்போல ஒருவனாக உருவகித்துக் கொண்டதன் பிரதிபலிப்போ? எப்படி இருந்தாலும் துருவனும், நானும் வேறு வேறு அல்ல; உத்தானபாதனும், நானும் அப்படியே. கொந்தளிப்புகளால் அலைக்கழிக்கப்படும் என்னுள் துருவனும், உத்தானபாதனும், ஜெயமோகனும், நானும் மாறி மாறிப் பேசிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் பேசுவதை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். பேச்சின் இறுதியில் நாங்களும், நானும் மறைந்து நானாகி.. நானும் மறைந்து.. நிலைபேறு எங்கும் நிறைந்தது போன்று ஒரு தோற்றம்.
அரும்பெறல் மரபில் அக்கறை கொண்டிருக்கும்,
முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்),
கோபிசெட்டிபாளையம்.