Tuesday, October 21, 2014

பிரயாகை- முதல் அத்தியாயம்






பிரிய ஜெ,

நல்ல துவக்கம். இரு பெண்களுக்கு இடையிலான அதிகார பூசல் என்பதை தாண்டி நீதிக்கும் ருசிக்கும் இடையிலான மானுட குல போராட்டமாக விரிப்பது அபாரம்..


 //இப்புவியில் பேரன்பைப்போல சலிப்பூட்டுவது என ஏதுமில்லை//

இவ்வரி சட்டென பாய்ந்து செல்கிறது..உண்மையில் அபப்டித்தானா என கேட்டுகொண்டிருக்கிறேன், ஏன் அதிலிருந்து விலகி விலகி செல்கிறோம்?
முதற்கணலில் நிமித்தகன் அஜபாதன் சொல்வானே நீதியின் மீது இச்சையின் கொடி ஏறிவிட்டது அது தான் நினைவுக்கு வந்தது. ஒருவகையில் பாரதமே இந்த முரணை தான் விரித்து பேசுகிறது போலும்...

சுனீல் கிருஷ்ணன்





அன்பு ஜெயமோகன்,

விளக்க முடியாத விருப்புகளும், புரிந்து கொள்ளவே முடியாத வெறுப்புகளும் எனக்கும் இருக்கின்றன. அதனால் பிரயாகையின் முதல் வாக்கியத்திலேயே நான் விதிர்த்துப்போய்விட்டேன். எதற்காக விரும்புகிறோம், எதற்காக வெறுக்கிறோம் எனத்தெரியாத மனதின் அடர்இருட்டுப் பகுதியுடன்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விருப்பையும், வெறுப்பையும் இரட்டைப் பேரழகிகளாகப் பார்க்கை வைத்த பிரயாகையின் முதல் பத்தியே என்னை முன்நகர்த்தியது.   


உங்களை எதற்காக வாசிக்கிறேன் என அவ்வப்போது யோசிப்பதுண்டு. உங்களின் கதைசொல்லல் மொழிக்காக  எனும் பதில் அபத்தமானதாக் இருந்தாலும் ஏற்றுக்கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை. என்றாலும், மொழியின் அழகியலில் மட்டுமே பறிகொடுத்து நின்றுவிடும் கவிரசிகனல்ல நான்.  அம்மொழியின் ஊடாக நீங்கள் வெளிப்படுத்தும் அகக்கிளர்ச்சி தொடர்பான சித்திரங்களிலேயே நான் என்னை மறந்தவனாகி விடுகிறேன்.  மொழியின் புதுப்புதுச் சாத்தியங்களைத் திறந்து செல்லும் உங்களின் நடையில் மனதின் தர்க்கங்களும் பரவசமாகின்றன. அத்தர்க்கங்களின் தாகம் தீர்ந்தது போன்ற உணர்வும் எனக்குக் கிடைக்கிறது.


உணர்ச்சிக்கொந்தளிப்புகள் கொண்ட வாழ்க்கை அமைந்தவர்கள் நல்லூழ் கொண்டவர்கள். அவர்களுக்கு வேறேதும் தேவைப்படுவதில்லை வாழ்க்கையை நிறைக்க” எனும் வாக்கியங்களின் பரவசத்தில் திக்கிமுக்காடிப்போனேன். மனக்கொந்தளிப்பைப் பற்றி உத்தானபாதன் அதிகம் அலட்டிக்கொண்டிருக்க மிகச்சாதாரணமாக அதைக் கடந்துபோகச் சொல்லும் சுயம்புமனுவின் பகிர்தலில் காற்று வீசிக் கொண்டிருந்ததைக் கண்டுகொண்டேன். காற்றுமானியாக என் முகமே எனக்குள் தெரிந்தது. வதையற்ற வாழ்க்கையின் வதை துயரமானது. இப்போது என் நுரையீரலை நிறைக்கும் காற்று மெதுவாக வெளியேறுகிறது. அமைதியாய்க் கவனிக்கிறேன். மீண்டும் என் நுரையீரல் நிறையத் துவங்குகிறது. அமைதியாய்க் கவனிக்கிறேன். நல்லூழ் புரியத் துவங்குகிறது.


”காமத்தை எழுப்பாதவளின் அழகு போல பயனற்றது எதுவுமில்லை” எனும் தொடரின் வீச்சு உள்ளுக்குள் கூரிய கத்தியாக இறங்கியது. நில்லாது அலைபாயும் மனது கொழுத்துத் திரண்ட முலைகளையே அழகு என  மாறாமல் நின்றிருப்பதை அக்கத்தியின் கீறலால் கண்டுகொண்டேன்.  போலச்செய்வதைப் போன்று காமத்திற்கு நம்மைப் பழக்கியவர்கள் யார்? ஏன், நம்மால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. காமம் என்பது முலைகளா, பெண்ணா? அருணகிரிநாதர் வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை எனும் சொல்லில் அதைத்தான் சொல்கிறாரா? சுழற்றி அடிக்கும் கொங்கைகளின் ருசிக்கு அடிமையாகிப்போனதால்தான் நீதி ஆளவே முடியாமல் போனதா? உதித்து வரும் கேள்விகளால் அறிவு தடுமாறி நிற்கிறது. தோற்றுப்போனவனாக உணர்கிறேன். அதற்காக விலகப்போவதில்லை.


ஆம், தோற்றவர்கள் விலகுவதே இல்லை. தோல்விகளே முடிவின்மைக்கு மீண்டும் அழைத்துச் செல்கின்றன. முடிவின்மையிலிருந்து தப்பவே முடியாதவர்கள் நாம். கொந்தளிப்புகளும், தோல்விகளும், ருசிகளும் அவ்வளவு எளிதாக நம்மை விட்டு விலகாதவை.


பிரயாகைக்குப் பின் வருவதில் நாங்கள் முன் செல்வதாகப் படுகிறது. தொடருங்கள்.

        அரும்பெறல் மரபில் அக்கறை கொண்டிருக்கும்,
முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்),
படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிபாளையம்.