[18 days. byகிராண்ட் மோரிஸன். பெரிதாக்க படத்தில் சொடுக்கவும்]
ஓம் முருகன் துணை
அன்புள்ள திரு.ஜெ வணக்கம்
நீலம் பற்றிய ஒவ்வொரு வாசகர் எழுதும் கடிதமும், அதற்கு தகுந்த இடத்தில் நீங்கள் தரும் பதிலும் மேலும் மேலும் நீலத்தை புரிந்துக்கொள்ளவும் அதில் உள்ள புதுப்பொருள்கள் மணிவண்ணமாகி ஒளிர்வதையும் அறிந்து மகிழ்கின்றேன்.
அழகு என்றால் முதலில் முகம் ஞாபகம் வருகின்றது. முகம் மட்டுமா அழகு என்றுப் பார்த்தால் ஒவ்வொரு பார்வைக்கும் ஒரு அழகு இருப்பது தெரியும். உதிர்ந்துபோகும் ஒற்றை முடிக்கூட காற்றால் அதற்குறிய கணத்தில் அதற்குறிய இடத்தில் நின்று அழகு மலத்திவிட்டு செல்லும் அதுபோல்தான் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு வாசகரும் ஒவ்வொரு அழகை ஆனந்தத்தை தரிசனத்தை வெளியை வெளிச்சத்தை காட்டி வெண்முரசை பெரிதாக்கி புதுமையாக்கி அர்த்தம் கொள்ள செய்கின்றார்கள். உங்கள் பதில் அதில் வைரமணிமுடி.
வெண்முரசு விவாதங்களுக்கு என்றே ஒரு தளத்தை நிறுவி வாசகர்களுக்கு வாசக அனுபவ வாசலை திறந்து வைத்த உங்களின் உள்ளம் கண்டு மகிழ்கின்றேன். எழுதுவது எனது வேலை, பின்னால் வந்தால் வா வராட்டிப்போ என்று சொல்லி ராஜஉலா நடத்தாமல், அதோபார்..அதோபார்..இதோ..இங்கே ..அங்கதான் என்று தாயின் உள்ளத்தோடு தோழமையோடு புதுமையை, பூக்களை, தேனை, கனிதை, நல்லதை, உயர்ந்ததைக்காட்டிப்போகும் உங்களுக்கு எனது நன்றி!
ஒவ்வொரு வாசகரின் கடிதம் எனக்கு பயன்படுவதுபோல் எனது கடிதம் யாருக்காவது பயன்பட்டால் அது உங்களுக்கும் தழிழ் அன்னைக்கும் நான் செலுத்தும் நன்றிக்கடன்.
நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்