கற்றலில் கேட்டல் நன்று என்று சொல்வார்கள். கற்கும்போது நமது அறிவு அறியும் உண்மையை ஒரு எல்லைக்குள் ஒருவழிபாதையில் நின்றுவிட வாய்ப்பு உள்ளது. அதையே கேட்கும்போது நமது அறிவும், சொல்பவர் அறிவும் சேர்ந்து நம்மை பலதிசையில் சிந்திக்க வைக்கும் அதனால்தான் கற்றலில் கேட்டல் நன்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்.
பிரயாகை-8ல் திரு.ஜெ துருபதனுக்கும் துரியோதனுக்கும் போரை படிக்க வைப்பதோடு அந்த போரைப்பற்றி கேட்கவும் வைக்கின்றார். கற்றல் கேட்டல் என்ற இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கும் ஒரு கதைக்களம்.
கடக வியூகம் அமைத்து போருக்கு செல்லும் துரியோதனும், கருடவியூகம் அமைத்து போருக்கு செல்லும் சத்தியஜித்தும் போர் புரிந்தார்கள் என்பதை படித்து தெரிந்துக்கொள்கின்றோம். நன்றாக உள்ளது. நேரடியாக ஒரு யுத்த கலத்தில் நாமே நின்று போரைப்பார்பதுபோன்றது போல் உள்ளது.
பாண்டவர்கள் படையை மறைவில் நிறுத்தி அவர்கள் மூலம் அந்த போரை கேட்கவைக்கம்போது நமது கண்ணும் காதும் ஒரே நேரத்தில் சிந்திக்க தொடங்கிவிடுகின்றது.
கற்கும்போது ஏற்படும் நேரடி அனுபத்தைவிட கேட்கும்போது ஏற்படும் அனுபவம் விஸ்தாரமாக உள்ளது. பாண்டவர்களின் வாய்வார்த்தைகள் மூலமாகவே போரின் நுணுக்கத்தையும், மாந்தர்களின் இயல்பையும் அதிகமாக அறிய முடிகின்றது.
சத்தியஜித் பின்வாங்கி மீண்டும் துருபதனுடன் வந்தான் என்று படித்தால் நமது அனுபவம் என்னவாக இருக்கும். அதையே பாண்டவர்களின் வாய்ர்த்தையாக கேட்கும்போது அதன் துள்ளியம் பெரிதாகி விளங்குகின்றது.
//பீமன் தொடையில் அடித்து நகைத்து “போர் இப்போதுதான் தொடங்குகிறது பார்த்தா” என்றான். “ஓசையின்றி வந்திருக்கிறான்” என்றான் தருமன். “கழுகு ஓசையிடாது. வியூகத்தில் அந்த உயிரினத்தின்அமைப்பு மட்டும் அல்ல இயல்பும் கருத்தில்கொள்ளப்படும்” என்றான் அர்ஜுனன்//
வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளும், அனைவரும் எல்லைக்கடந்த தொலைவில் இருந்துப் பார்க்கும்போது ஒன்றாகவே இருக்கின்றது. அதனதன் எல்லையில் நின்றுப்பார்க்கையில் அது அதுவும் தனித்தனி முழுமையாகத்தான் இருக்கிறது என்பதை பெரும் யுத்தின் நடுவில் நின்று சிந்திக்கும் அர்ஜுனன் எந்த எல்லையில் நின்றாலும் எந்த எல்லையிலும் சிக்காத ஒன்றுடன் தனது அகத்தை இணைத்துக்கொண்டே இருக்கின்றான். எப்படி அவன் கீதைக்கு காரணமாகின்றான் என்பது விளங்குகின்றது.
வாழ்க்கை எவ்வளவு சிறியதாக சிக்கலாக இருந்தாலும் அதற்கும் அப்பால் அது ஞானத்தின் பெருவெளியோடு தொடர்பில் இருக்கின்றது என்பதையே காட்டுகின்றது.
காட்டுத்தீ எழாவிட்டால் காடு நோயுற்று அழியும் என்று சொல்லும் அர்ஜுனன்தான், குருதிவழியும் அந்த யுத்தத்தை கண்டுகொண்டு நிற்கையில் அகன் சட்டென மாறும் கணத்தை பார்க்கும்போதுதான் வாழ்வுக்கும் ஞானத்திற்கும் உள்ள முரணும் இணைப்பும் தெரிகின்றது.
//போரை தொலைவில் நின்று பார்க்கும்போது அது ஓர் ஒற்றை நிகழ்வாக மாறிவிடும் அற்புதத்தைஅர்ஜுனன் எண்ணிக்கொண்டான். ஆயிரக்கணக்கானவர்கள் தனித்தனியாக செய்யும் போர். அவர்கள்ஒவ்வொருவரும் அப்போது முழுமையான தனிமையில் தங்கள் எதிரிகளுடனும் ஆயுதங்களுடனும்இருந்துகொண்டிருப்பார்கள். ஆனால் அவை இணைந்து ஒற்றை நிகழ்வாகிவிடுகின்றன. இப்புடவியின்அத்தனைகோடி நிகழ்ச்சிகளும் இணைந்து விண்ணில் நின்று நோக்கும் தெய்வங்களுக்கு ஒற்றைநிகழ்வாகத் தெரியுமோ?//
திரு.ஜெவின் பிழை சிறுகதையில் வரும் இந்த வாழ்க்கைப்பற்றிய வரியை சிந்திக்கவேண்டி நேரம் இது. //“சகோதரா, சின்ன விஷயங்களில் என்னதான் கிடைத்தாலும், பெரியவிஷயங்களுக்குப் பக்கத்திலே இருந்து கொண்டிரு. அதுதான் வாழ்க்கை.//
வாழ்க்கைக்காகத்தான் யுத்தம், யுத்தத்தின் நடுவிலும் வாழ்க்கையின் பெரிய விஷயத்தைப்பற்றி பேசும் அர்ஜுன் வாழ்க!
அசோகர் சென்ற இடமெல்லாம் மரம் நட்டார் என்று வரலாற்றில் படிக்கின்றோம். ஜெ கதையில் செல்லும் இடமெல்லாம் விதியை விதைக்கின்றார் அப்போதுதான் அது காடாகும் என்பதால்.
//புகையும் அழுகையும் கலந்து நிறைந்த கிராமங்கள் வழியாக அவர்களின் படை சென்றபோதுஇருபக்கமும் பெண்கள் ஓடிவந்து மண்ணை அள்ளி வீசி பழித்துக் கூவினர்//
இந்தக்கூட்டத்தின் விதைதான் பாஞ்சாலி!
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.