Monday, October 20, 2014

வண்ணக்கடல் ஆணவம் இருகதைகள்- ராமராஜன் மாணிக்கவேல்




வண்ணக்கடல்-32
July 07, 2014

வண்ணக்கடலின் இன்றைய ஓவியமும், கதை  கால்தொடும் அலைபோல உள்ளத்தில் எழுப்பும் சிலிர்ப்பும் எழுத தூண்டியது.

பெரும் பலம் வில்லாகி கிடக்கிறது.பலம் பலரின் இரத்தத்தில் மேல் மிதப்பதுபோல் அது சிவப்புக்கம்பளத்தில் மிதக்கிறது.

மனிதன் உருப்புகளால் நிமிர்வதில்லை, பலத்தால் நிமிர்கின்றான் என்பதுபோல் அதன்முன் போட்டியாளன்.


கதை-1

அப்பாவின் உதவியாளர் ஓய்வுநேரங்களில் சொல்லும் பலகதைகளில் அவரின் சொந்த கதைகள்தான் அதிகம்.

அரசுவேலைக்கிடைப்பதற்குமுன் கிடைத்த வேலையை செய்யும் அந்த அண்ணன் அறுவடைக்காலங்களில் தனது ஊர் கூட்டாளிகளுடன் பக்கத்தூருக்கு நெல்அறுவடை செய்ய செல்லவது உண்டு.

ஒரு முறை பக்கத்து ஊர் பண்ணையில் நெல் அறுவடை செய்ய இவர்கள் குழு போனபோது வேறு ஒரு ஊரில் இருந்து மற்றொரு குழு வந்திருந்தது.
குழு என்றால் போட்டி இல்லாமல் போகுமா?திறமையைக்காட்டினால்தானே மறுநாள் வேலை.

மௌனயுத்தம் நெல் வயலில்.

எதிரிகுழுவில் ஒருவன் அதிவேகமாக அறுத்து செல்கின்றான்.அவனின் ஒவ்வொரு அறுவா வீச்சுக்கும் சலங்கைஒலி.

என்ன அது?ஏன்?அண்ணனுக்கு மண்டைக்குடைச்சல்.

ஒரு வயலை அறுத்துப்போட்டுவிட்டு சாப்பிட உட்காரும்போதுதான் தெரிகின்றது.எதிரித்தலைவன் அறுவாள் கைப்பிடியில் ஐந்தாறு சலங்கைமணி.
என்ன அது?எதற்கு?” அண்ணன்.

என்னோடப்போட்டிப்போட்டு அறுப்பறத்து செயித்தவன் எவனும் இல்லைஎதிரணித்தலைவன்.

ஜெயிச்சிட்டா?” அண்ணன்.

இந்த அறுவாளையும், இன்றைக்கு வாங்கும் நெல்கூலியையும் தந்துவிடுகின்றேன்
போட்டிவிதி, பட்டத்தை அறுக்க ஆரம்பித்தபின்பு நிமிரக்கூடாது.யார் முன்னால் அறுத்து முடிக்கின்றார்களோ அவர்கள்தான் வென்றவர்.

போட்டி ஆரம்பம், அண்ணனும், எதிரணித்தலைவனும் மட்டும் ஒருவயலில்.நிமிராமல் அறுக்கணும், அண்ணனின் குதிகாலில் இருந்து இடுப்புவரை வலி.கண்ணுக்குத்தெரியாத யாரோ நரம்புகளை உருவி இழுக்கிறார்கள்.இடுப்புக்கு மேலே உடலும் உயிரும் உறுப்பும் இல்லாததுபோன்ற நிலை.அறுப்பதும் அரிவிழுவதும் தன்னிச்சையாக நடக்கின்றது.
அண்ணன் கடைசிப்பிடியையும் அறுத்துப்போட்டு நிமிரும்போது எதிரணித்தலைவன் பங்கில் ஒருதப்பிடி பாக்கி.

பக்கத்து வயலில் அறுத்துக்கொண்ட கூட்டாளிகள் ஓடிவந்து அண்ணனை தூக்கிக்கொண்டார்கள்.

தோற்றவன் அப்போதே அண்ணனிடம் அறுவாளைக்கொடுத்துவிட்டான்.அண்ணன் அந்த அறுவாளை வாங்கி அந்த சலங்கைமணியை மட்டும் பெயர்த்து எடுத்துக்கொண்டு அறுவாளை அவனிடமேக் கொடுத்துவிட்டார்.

இந்த கதையை பல ஆண்டுகள் கழித்து சொன்ன அண்ணன்.கடைசியாக அதைப்பற்றி இப்படி சொன்னார். ”அந்த பண்ணையில் பலநாள் நெல் அறுத்தோம் அதன்பின் அவன் ஒருநாளும் யாரையும் முந்திக்கொண்டு அறுத்ததைப் பார்க்கவில்லை, அப்ப அது எனது வெற்றியாக தெரிந்ததால் பெரிதாக தெரியவில்லை இப்ப நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. முன்னாடி இருந்த ஒருத்தனை கடைசியாள ஆக்கிட்டதுபோல் உள்ளதுஎன்றார்.


கதை-2


இதில் சரித்திரநாயகன் வருகின்றான் அதனால் இது சரித்திரமா?தெரியவில்லை.
மாமல்லன் என்ற அழைக்கப்பட்ட நரசிம்மவர்ம பல்லவனுடன், பாரதநாட்டின் பலபகுதியில் இருந்து வரும் மல்லர்கள் போட்டி போடுவது உண்டு.தோற்வர்களுக்கும் பரசு உண்டு.மாமல்லனை யாரும் மல்யுத்தத்தில் வெல்லாததாலேயே அவன் மாமல்லன்.  
ஒருமல்லன் போட்டிப்போடுகின்றான்.ஒன்று மாமல்லனை வெல்லவேண்டும் இல்லை என்றால் சாகவேண்டும்.இதை மாமல்லன் அறிகிறான்.


மாமல்லன்கூட மோதும்போதுதான் தெரிகிறது ஏன் இவன் மாமல்லன் என்று.
மாமல்லனால் மண்ணில் தள்ளப்படுகிறான் மல்லன்.நொடி நேரத்தில் பார்வையாளர் கண்கள் அறியும் முன் காட்சி மாற்றம்.பார்வையாளர்கள் கண்கள் நம்ப மறுக்கின்றது.மாமல்லன் கீழே கிடக்க மல்லன் அவன் நெஞ்சில் கிடந்து வெல்கிறான்.
அந்த மல்லனை மகா மல்லன் என்று போற்றுகின்றான் மாமல்லன்.மகா மல்லன் மட்டுமே அறிவான் அவன் ஏன் மாமல்லன் என்றும் ஏன் அரசனாக இருக்கிறான் என்றும்.  
வண்ணக்கடல் 

கதை- அந்தவில்லை அவர் திரும்பி வாங்கியபோது அது சிறிய பாம்புக்குஞ்சாக ஆகியதுஅதை தன்கையில் பவித்ரமாக கட்டிக்கொண்டு அவர் திரும்பிநடந்தார்.”.
பரசுராமனும், தசரத ராமனும் வெவ்வேறு உருவத்தில் வெவ்வேறு பெயரில் நம்கூடத்தான் இருக்கிறார்கள்.ஆணவம் இருக்கும்வரை வில்லாக, ஆணவம் அழிந்தபின்பு பாம்பு குஞ்சாக. 


ஒரு பெரும் வில் வெறும் பாம்பு குஞ்சாக மாறியது என்ற காட்சியில்  நான் அந்த அண்ணனிடம் சென்று மாமல்லனிடம் சென்று வந்தேன். 

மனிதன்ஆணவத்தை  வில்போல்தோளில்சுமந்துதிரிகிறான். ஆணவம்அழிந்தபின்புஅதையேகையில்வளையல்போல்மாட்டிக்கொண்டுவாழ்கிறான்.

நன்றி