அன்பு ஜெயமோகனுக்கு,
பிரயாகையின் சொற்கனலில் வெம்மையான பயணம் துவங்கி இருக்கிறது. அர்ச்சுனனும், தர்மரும் சந்தித்துக் கொண்டதுமே தங்களையறியாமல் விழவுக்கொண்டாட்டங்களை தத்துவ தளத்திற்கு நகர்த்திச் சென்றுவிடுகின்றனர். ” ஒரு புன்னகையில் கடந்துசெல்லக்கூடிய எளிய பகைமைதான் மானுடர்களிடமுள்ளவை எல்லாம் என்று மூத்தவர்களுக்கு காட்டிக்கொண்டே இருக்கின்றனர் குழந்தைகள்” எனும் வாக்கியம் மகாவாக்கியமாக எனக்குள் விரிந்து சுருங்கியது. மகாவாக்கியங்களை எதிர்க்கொள்ளும்போது ஏதோ கண்டடைந்துவிட்டதாக இறுமாப்பு கொண்டுவிடுகிறோம். சில கணங்களிலேயே அவ்விறுமாப்பு கலைந்து விடுகிறது. ஒரு எளிய புன்னைகையால் நான் பகைமையைக் கடந்துவிட முடியும் என்றாலும் அதை சில நபர்களிடம் முயற்சிப்பதேயில்லை. காரணங்களோ சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கின்றன. அப்போதுதான் பிற்பாடு துரோணர் சொல்லும் “சிந்தனையில் வளைவு என்பது எப்போதும் முக்கியமானதே” எனும் கருத்தில் ஆசுவாசம் கிட்டுகிறது. அலைபாய்தலில் நான் நிலைபெற்றிருப்பதை உணர்ந்தே இருக்கிறேன். குழந்தைகள் பகைமையைக் கடந்து போகக்காரணம் அவர்கள் யாரையும் தங்கள் உலகிற்கான விருப்பு, வெறுப்புகளாக மாற்றாமல் இருப்பதே. சொல்லப்போனால் பொம்மைகளைக் கொண்டாடும் குழந்தைகளின் உலகில் உச்சகட்டப் பரவசம் இருக்கிறது. இன்னும் நுட்பமாகச் செல்லும் மனதில் குழந்தைகளுக்கு பொம்மை போன்று நமக்கு நம் வாழ்க்கை எனும் காட்சியாகிறது. இருந்தும், வாழ்க்கையை நாம் கொண்டாடுவதில்லை. காரணம், நாம் குழந்தைகளாயில்லை எனக் கருதிக்கொள்கிறோம். ஆனால், வாழ்க்கையோ பொம்மையாகவே இருக்கிறது.
”கல்வி என்பது நூலறிவும் நூலை வெல்லும் நுண்ணறிவும் மட்டுமே” எனும் தருமனின் கூற்றும் நுட்பமானது. கல்வியைத் தொடர்ந்து ஒரு வரையறைக்குள்ளாக இறுக்கி அடைத்து வைத்துத் தடுமாறிக்கொண்டிருக்கிறோம். நிகழ்காலத்தை எதிர்கொள்ளத் தயங்கும் ஒருவன் கற்றதாகச் சொல்லிக் கொள்ளும் கல்வி எவ்வகையில் பயன்படப்போகிறது? ஆக கல்வி என்பது நூலறிவு, நுண்ணறிவைத் தாண்டி வாழ்வின் எதிர்பாராமைகளை எதிர்கொள்ளும் துணிவைத் தருவதாக இருக்க வேண்டும். பயிற்சியைக் கல்வி எனச்சொல்லும் தொழில்நுட்பக் காலத்தில் உண்மையான கல்வியை தனியொருவன் தானாகவே முயற்சித்தே நெருங்கியாக வேண்டும். அதற்கு ஒருவனைத் தயார்படுத்தலே முக்கியம்.
”அலகிலாதது பரம்பொருள். அதை மானுடன் அறிய ஓர் உருவம் தேவைப்படுகிறது. ஓர் இடம், ஓர் அடையாளம், ஒரு சொல் தேவையாகிறது. அது பரம்பொருளின் இயல்பு அல்ல. மானுடனின் எல்லையின் விழைவு” எனும் துரோணரின் பகிர்தலில் மானுட சமூகத்தின் கால-இட எல்லைகளைக் கடந்து விரிய முயலும் ஏக்கத்தின் வடிவம் வெளிப்பட்டிருந்தது. எவ்வளவுதான் மனிதமனம் அறிவால் விரிந்து கொண்டே சென்றாலும் பரம்பொருளை விளங்கிக்கொள்வது சாத்தியமே இல்லை. அறிவு நம்மை விரிவுபடுத்தும்; அறியாமையோ சுருக்கும். அறிவற்று, அறியாமையும் அற்றவருக்கே பரம்பொருளை நெருங்குதல் சாத்தியம். அறிவும், அறியாமையும் கடக்க நம்மால் முடியுமா? நிச்சயம் முடியாது. ஆனாலும் பரம்பொருளை உணர்தல் சாத்தியப்பட்டே இருக்கிறது. அதுதான் நமக்கான கொடுப்பினை. இடமும், உருவமும், சொற்களும் அதைச் சாத்தியப்படுத்துகின்றன. வானில் இருக்கும் நிலவை நம்மால் தொட முடியுமா? கட்டாயம் முடியாது. நம் ஊர்க்குளத்து நீரில் தெரியும் அதை நம்மால் தொடமுடியும்தானே.. அப்படியானதுதான் பரம்பொருளுக்கான வடிவங்களும், வழிபாடுகளும். வடிவங்கள் பரம்பொருளைச் சுட்டி நிற்கும் கருத்தாக்கக் குறியீடுகளே அன்றி அவையே பரம்பொருள் ஆகா.குளத்து நிலா ஒரு குறியீடே அன்றி அதுவே நிலவாகிவிடாது.இங்குதான் நாம் தடுமாறி மதப்பூசல்களில் மாட்டிக்கொண்டு அவதியுறுகிறோம். ”அறிபடுபொருளுக்கு எல்லையில்லை என்பதனாலேயே அறியும் முறைக்கு எல்லையை அமைத்துக்கொள்க! உனக்கான ஒரேயொரு அறியும்முறை வழியாகவே நீ அனைத்தையும் அறிந்துகொள்ளமுடியும்” என்பது நாம் புரிந்து கொள்வதற்கான வியாக்கியானமே அன்றி வேறல்ல.
,
முருகவேலன்(சக்திவேல் ஆறுமுகம்)
கோபிசெட்டிபாளையம்