Saturday, October 18, 2014

நீலமும் நீலமும்





அன்புள்ள ஜெ,

நீலம் அட்டை 3 எனக்கு பிடித்தது. காரணம் அதில் முழுவதும் வியாபித்திருந்த நீலம் தான். நீலம் என்ற நிறமே கருமையில் வெண்மையை ஊடுருவ விட்டால் வரும் ஒரு நிறம் தானே. கருமை என்பது என்றுமேயிருக்கும் இருள் அல்லவா? 

நீலம் நாவல் முழுவதுமே வருபவை மூன்று விஷயங்கள்.

1. இருள் 
2. தனிமை 
3. கரந்துறையும் எதோ ஒன்று

ஆம். இப்போது நீலத்தை நினைத்துப் பார்த்தால் உடனடியாக நினைவுக்கு வருவது கரத்தல் என்ற சொல் தான். இவ்வுலகில் ஒவ்வொன்றும் இன்னொன்றை தனக்குள் மறைத்து தானே வைத்து இருக்கின்றன. மற்ற நாவல்கள் எல்லாம் தெளிந்திருக்கும் மனதிற்கு என்றால், நீலம் நமக்கு நாமே மறைத்துக்கொண்ட அந்த ஏதோ ஒன்றிற்கு. 

மேற்கூறிய அனைத்துக்கும் கச்சிதமாக பொருந்திவருவது இந்த அட்டை எண் 3 தான். 

சில அட்டைகளில் நீலக் குவளையும், ரத்த நிறமும் பார்த்தேன். அவை ஏதோ ஒருவகையில் நாவலை விளக்கி விடுகிறது. ஆனால் அட்டை எண் 3, நாவல் வாசகரின் மனதில் நிகழ்ந்த பிறகு வரும் அருவமான உணர்வை பிரதிபலிக்கிறது. அந்த வகையில் இது ஓர் செவ்வியல் ஓவியம்.

அந்த அட்டை எண் 3 இந்த கடிதத்தில் இணைத்திருக்கிறேன்.

அட்டை எண் 6 மற்றும் 1 ல் உள்ள நீலம் என்னும் எழுத்தின் மேல் வரும் அந்த புல்லாங்குழலின் பட்டு குஞ்சம் நீர்த் துளிகள் மாதிரி இருந்தது மிக நன்றாக இருந்தது. முடியுமென்றால் அட்டை எண் 3 லும் அவ்வாறே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். அதே போன்று நீலம் என்ற வார்த்தையின் முதல் எழுத்தான 'நீ'யில் வரும் கால் பகுதியைக் கத்தி போல இட முடிந்தால் நாவலின் குருதி முனையைக் கூடத் தொட்டு விட முடியும்.

ஒரு கேள்வி. இந்த செம்பதிப்பு வீட்டிற்கு அனுப்ப முடியுமா? அல்லது கடைகளில் மட்டும் தான் கிடைக்குமா? ஏனென்றால் நான் வெண்முரசின் அனைத்து செம்பதிப்புகளையும் சென்னையில் உள்ள என் மனைவியின் வீட்டுக்குத் தான் அனுப்ப சொல்வேன். இன்னும் ஒரு வருடத்தில் இந்தியா வருவதாக திட்டம். எனவே புத்தகங்கள் சென்னையில் மட்டுமே அனுமதிக்கப் பட்டிருக்கிறது எனக்கு....!!!! விமானப் பயணத்தில் எடை முக்கியம் அல்லவா?!

அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து.