அன்புள்ள ஜெ,
வண்ணக்கடலில் கர்ணனின் வளர்ப்புத்தந்தையான அதிரதன் எனக்கு மிகமுக்கியமான கதாபாத்திரமாகத் தோன்றியது. அத்போல ராதையும். என்ன் ஆச்சரியம் என்றால் என் அப்பாவும் அம்மாவும் அவர்களைப்போன்றவர்களே. அச்சு அசலாக அவர்களேதான் என்றுகூடச் சொல்லலாம். எப்படி இரண்டுமே சரியாக அமைந்து விட்டது என்று நினைத்துக்கொள்வேன்
என் அப்பா ஒரு சைக்கிள்கடை வைத்திருந்தார். சைக்கிள் விஷய்ங்களில் ஒரு எக்ஸ்பர்ட். நிறைய சைக்கிள்தகவல்கள் தெரியும். சைக்கிளை வைத்தே ஒருவருடைய எல்லா விஷயங்களையும் சொல்லிவிடுவார். ஒருவர் சைக்கிளை மிக நன்றாக துடைத்து வைத்திருந்தார். சைக்கிளை தினசரி துடைக்கிறார்டா . அப்டின்னா ஒரு மாதிரி கறாரானவர். நம்ம காச குடுத்திருவார் என்று கடன் கொடுத்தா ஒருநாள்.
ஆனால் அப்பா ஒரு பெரிய லொடலொட. எம்ஜியார் கட்சியை விட்டு நீக்கியபோது மெட்ராஸ் வரை சென்று முதல் பேரணியில் கலந்துகொண்டார். அதை முப்பது நாற்பது வருஷமாகச் சொல்லிக்கொண்டே இருப்பார். சைக்கிள் வழியாக ஒரு wisdom அவருக்கு உண்டு. மற்றபடி பெரிய டம்ப் ஆள். இது எப்படி என்று நான் யோசிப்பதுண்டு
என் அம்மா வேறுமாதிரி. படிப்பு இல்லை. எங்கள் பக்கம் வயல்வேலை என்றால் மிகமிகக் கடினம். அம்மாவுக்கு வெயில் மழை எதுவும் ஒரு பெரிய விஷயம் இல்லை. ஒரு கம்பை எடுத்துக்கொண்டு நடுராத்திரியில் காட்டுக்குக் காவலுக்குச் சென்றுவிடுவாள்.எல்லாவிஷயங்களிலும் ஒரு தெளிவான பார்வை உண்டு. மனக்கணக்கு தவறவே தவறாது. அம்மா இல்லாவிட்டால் நான் இந்த அளவுக்கு வந்திருக்கமுடியாது
பெரிய புராணக்கதாபாத்திரங்களுக்கு மத்தியில் இப்படி இரண்டு சாமானியக் கதாபாத்திரங்களைக் கண்டது பெரிய இன்பத்தை அளித்தது. நுட்பமான யதார்த்தமான மனிதர்களைக் காட்டியிருந்தீர்கள்
செல்வராஜ்