Thursday, October 23, 2014

நீதியின் தன்மாத்திரை பேரன்பு

 
 
 
 
ஆசிரியருக்கு


ஒரு கட்டத்திற்கு மேல் இலக்கியம் என்பது நுட்பத்தை  மேலும் விரித்து இன்னும் நுட்பமான ஆழங்களுக்கு  சென்று அதை  இன்னும் பெரிதக்குவதே. பெருநிலை -1 அதை சாத்தியப் படுத்தியிருக்கிறது . அணுவை உடைத்து அதிலுள்ள கடல்களை வெளியே எடுத்திருக்கிறீர்கள்.   இந்த ஒரு அத்தியாயத்திற்குள்ளேயே  ஆதாரமான ருசி- நீதி, பெண்ணின் தன்னியல்பு மற்றும் அரசியல் ஆகியவற்றை அதன் சாத்திய உச்சத்திற்கு கொண்டு சென்று இருக்கிறீர்கள் . 

இங்கு நீதி என்பது மனித பார்வைக்கனது , அதாவது நமக்கு புலனாவது மட்டுமே. ருசி காமத்தால் ஆனது , உயிர் வேட்கையால் ஆனது , விழைவால் ஆனது . உயிர் வாழ்வின் பெருவேட்கையே ருசி. கறாராகச் சொன்னால்  உயிரின் தன்மாத்திரையே ருசி  (ருசியின் மாயமே பிரம்மத்தின் படைப்புத்திறனுக்கு முதல்சான்று) .   மறுபுறம்  நீதி தன்மாத்திரையற்றது அது நம்மை எவ்விதத்திலும் வசீகரிப்பதில்லை , நமது வேட்கையை தூண்டுவதில்லை, அனால் இறுதியில் அவளிடம் தான் நாம் அடைக்கலாமாகவேண்டும்.   

ருசியின் பால் மனிதனின் ஈர்ப்பு ஏன் , ஏனென்றால் அது இயல்பானது -
(எந்த மானுடனாவது உடலின் வலம் இடத் தேர்வை அவனே செய்யமுடியுமா என அவன் வியந்துகொண்டான்) . அனைத்தும் அறிந்தாலும் நாம் ஏன் ருசியிடமே தஞ்சமடைகிறோம் என்கிற இடத்தில் தத்துவம் இலக்கியம் ஆகிறது  (இரக்கம் பனிப்புகைபோன்றது, காமத்தைப்போல பளிங்குப்பாறை அல்ல என அவன் அறிந்திருந்தான்)

இதில் இன்னொரு அடுக்கு ஆண்  பெண் உறவு,  எந்த மந்த புத்திக்காரனும் இந்த விளையாட்டில் நுண்ணுணர்வுடன்  தான் இருப்பான் (அக்கணம் அவள் தன் ஆழத்தை அறிந்திருந்தால்கூட நல்லது என்று அவனுக்குப் பட்டது. மறைக்கவிரும்பும் ஏதோ ஒன்று அவளிடம் எஞ்சுகிறது என்று அதற்குப்பொருள்) இனிப்பென்றால் கூட விதவிதமாக பெருகும் (ருசியோ முடிவில்லாத பக்கங்கள் கொண்ட வைரம்) சுவைக்கவே நாம் மேலும் மேலும் நுகர்கிறோம். அது தன எல்லையை அடைந்துவிட்டால் நாம் வெறுக்க துவங்கிவிடுவோம். 

முதற் கணலில் அம்பை தான் கடைசியில் தனது அகங்காரத்தை கழற்றி வீசி  தனது பெண்மையை மட்டும் முன்வைத்து பீஷ்மனை அழைப்பால் , அது  அவமதிக்கப்படும்போது பெரும்கோபம்  கொகிறாள். பிரயாகையில் சுருசி தான் ஒரு வெறும்  பெண்  மட்டுமல்ல என புனைத்து விரித்து காட்டுகிறாள் , 
 
(அத்தனை சொற்களுடன் அத்தனை பாவனைகளுடன் அவள் தன்னை உடலல்ல என்று ஆக்கிக்கொள்ளத்தான் முயல்கிறாளா?) அம்பை தேடுவது வெறும் அங்கீகாரம் , சுருசி கோருவது அரியணை. ஆனால் இங்கு நிற்பது பீஷ்மனல்ல  வெறும் உத்தானபாதன். இவ்விடத்திலும்  (பெருந்தன்மையுடன் புன்னகை புரிந்து அன்பைக் காட்டியிருந்தால் சுருசியை பற்றி எரியவைக்கக்கூட முடியும்) என்கிற இடத்திலும் மனோதத்துவம் இலக்கியமாகிருக்கிறது . ஆம் சத்யவதிகள், அம்பைகள், அம்பிகைகள்,குந்திகள் , மரீசிகள் ஆகியோர்களின் அசலே சுருசி, இவர்களெல்லாம் வெறும் பிம்பங்கள்.  

தமது அங்கங்கள் பார்க்கப் படுவதை சுருசிகள் பார்க்கப் படுவதற்கு ஒருகணம் முன்பே அறிந்து விடுகிறார்கள் , மேலும் பார்க்கப் படத் தான் தோற்றமளிக்கிறார்கள். சுருசி  உத்தானபாதனை கவரும் இடத்திலும் சரி , சரியாக இரண்டாவதாக அவையில் பிரவேசிக்கும் தந்திரத்திலும் சரி , தனது மைந்தனை அரியணைக்கு அருகே கொன்டு  வருதலும் சரி , அவையில் தனது சொற்களுக்கு மதிப்பு பெறுவதிலும் சரி இங்கு அரசியல் இலக்கியமாகி இருக்கிறது .   ஒருவகியில் சுருசிகளை அரியணை ஏற்றத் தானே அவையும் காத்திருக்கிறது. 

துருவனை வெறுப்பது உத்தானபாதன் தன்னை வேருப்பதன்றோ. ஆனாலும் இன்னொருபுறம் நாம் சுநீதியையே அடைவோம் அவளின் தாய்மையால், பேரன்பால் (இளமையில் சுழற்றி அலைக்கழிக்கும் பெண் முதுமையில் சலிப்பூட்டுவாள்போலும். இவளிடம் என் முதுமையில் நான் வந்துசேர்வேன். காமம் இன்றி மட்டுமே அணுகமுடியும் ஒரு பெண் இவள் )  . ஏனென்றால்  நீதியின் தன்மாத்திரை பேரன்பு. 

கிருஷ்ணன்