அன்புள்ள திரு.ஜெ வணக்கம். இந்த வணக்கம் ஒரு உபச்சாரமான வணக்கம் இல்லை. பிரயாகை-7 எழுதியதற்காக உங்கள் அகத்திற்கான வணக்கம். வெண்முரசை இவ்வளவுநாள் படித்ததற்கான பெரும் நன்மையை இன்று அடைந்தேன்.
அற்புதமான எழுத்து, எழுத்து வழியாக அற்புதம் சொல்லும் படைப்பு. கதையைத்தாண்டி, கதைசொல்லும் சொற்களைத்தாண்டி, சொற்கள் தரும் பொருள்தாண்டி எதற்காக படிக்கவேண்டுமோ அதற்கான எழுத்து. அப்படிப்பட்ட பெரும்பொருள் கொண்ட சொற்களால் ஆனநூல் வெண்முரசு.
அர்ஜுனனின் பார்வை.
அர்ஜுனன் யார்? உடலா? உள்ளமா? அறிவா? என்றால் அவை எல்லாம் இருக்கலாம். திரு.ஜெ எப்படி அர்ஜுனனை படைத்து உள்ளார் என்றால் விழிகாளால் ஆனவன் அர்ஜுனன். உடல் உள்ளம் அறிவு அனைத்தாலும் விழியானவன் அர்ஜுனன். உடல் என்றாலும் புலன்களும் சேர்ந்ததே புலன்கள் எல்லாம் கண்கள் ஆனவன் அர்ஜுனன். ஜெ ஏன் அர்ஜுனனை கண்களால் ஆனவானாகப் படைக்கின்றார் என்று என்னும்போதுதான் ஒன்று நினைவில் வருகின்றது. இந்திரன் மகன். இந்திரன் அங்கம் முழுவதும் ஆயிரம் கண்கொண்டவன். ஜெவின் ஞானம் கதையாக வழிந்து தன்னை கதை அலங்காரத்தில் மறைத்துதுக்கொள்கின்றது.
வண்ணக்கடலில் அர்ஜுனன் இரவில் உணவு உண்ணும்போது அருகில் இருட்டில் பறக்கம் பூச்சியைப்பிடிப்பதை கண்டு துரோணர் திடுக்கிட்டு அன்றுதான் அவன் முன் ஒரு தந்தையாக பணிகின்றார். அப்போது அந்த இடம் அழுத்தம் நிறைந்தது என்று அறிந்தேன் ஆனால் ஆழம் அறியவில்லை. ஆழத்தோடு அறியும் அழுத்தம்தான் எத்தனை சித்ரவதையும், ஞானத்தையும் அளிக்கிறது.
நேற்று பிரயாகை-6ல் அர்ஜுன் ஹரிசேனரைப்பற்றி என்ன நினைக்கிறான் அவன் பார்வை என்ன என்பதை ஜெ கீழ்கண்டவாறு காட்சிப்படுத்துகின்றார்.
//ஹரிசேனர்தான் முதலில் வந்தார். அவரைப்பார்த்ததும் பீஷ்மர் என்று அர்ஜுனன் சிலகணங்கள்எண்ணிக்கொண்டான். அதே போன்ற உடலசைவுகள் அதே தாடி. அவரது பேச்சும் குரலும்கூடபிதாமகரைப்போன்றே இருக்கும். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பிதாமகருடன் இருப்பவர். பிதாமகர்கானேகிவிட்டால் மேலெழுந்து பிதாமகராகவே ஆகி படைக்கலப்பயிற்சிநிலையத்தைநிறைத்துவிடுவார். அங்கே பிதாமகர் இல்லை என்றே தெரியாது//
இன்று பிரதீபன் பற்றி அர்ஜுன் பார்வை எப்படி உள்ளது என்பதை கீழ்கண்டவாறு காட்டுகின்றார்.
//மறைந்த தளகர்த்தர் சத்ருஞ்சயரின் மைந்தன் பிரதீபன். அவனுக்கு அவருடைய உடலசைவுகளும்விழிமொழியும் இருந்தன//
பிரயாகை-5ல் கர்ணன் வரும்போது தருமன் அவனை ஒரு தேவனாகவே காண்கின்றான் ஆனால் அவனை கண்டு அச்சம் கொள்கின்றான். அர்ஜுனன் கர்ணனைக்காணும் பாங்கே முற்றாக மாறாக உள்ளது. அர்ஜுனன் ஒருவனே கண்கொண்டவன் என்று நினைக்கும் அளவுக்கு காண்கின்றான். முழுமையுடைய ஆணை முழுமை உடைய பெண் காணும் கண்களால் காண்கின்றான். அர்ஜுனன் பெண்ணாக இருந்தால் கர்ணனைக்காதலித்து இருப்பான்.
//அவன் கர்ணனையே நோக்கிக்கொண்டிருந்தான். எப்போதும் போல எத்தனை உயரம் என்று முதலில்வியந்தது சிந்தை. பின் எவ்வளவு பேரழகன் என்று பிரமித்தது. அவன் தோள்களை, புயங்களை, மார்பை,இடையை, கண்களை, மென்மீசையை நோக்கிக்கொண்டே நின்றான்//
அர்ஜுனன் தருமனின் அகத்தை அறிந்து அதை உடைத்து வெளிக்காட்டுகின்றான் என்று நினைக்கும்போதிலே அவன் தருமனை தனது தந்தை பாண்டுவின் மறுவடிவம் என்றும் காணுகின்றான் என்பது இதனால் அறியமுடிகின்றது. பாண்டு இல்லாத இடத்தை தருமன் நிரப்பிக்கொண்டும் உள்ளான் என்பதை அறிகின்றான்.
இன்று பிரயாகை-7ல் காலையில் எழுந்தபோது தான் தூங்கப்போகப்போகும்போது போத்திக்கொள்ளாத சால்வையை எழும்போது போத்திக்கொண்டு இருப்பதைக்கண்டு அதை அறிகின்றான். தருமனில் பாண்டுவைக்கண்டு புன்னகைக்கிறான்.
//முகப்பில் சென்ற படகிலிருந்து எழுந்த கொம்பொலி கேட்டு அர்ஜுனன் எழுந்துகொண்டான்.சால்வையை நன்றாக இழுத்துப்போர்த்தியிருந்தான். எழுந்தபோது அது காலைச்சுற்றியது. படுக்கும்போதுசால்வையுடன் படுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்ததும் கைகளை விரித்து சோம்பல்முறித்தபடிபுன்னகைசெய்தான்//
அர்ஜுனன் ஏன் கீழ்கண்ட இடத்தில் கங்கையை உயரத்திலும், சமதளத்திலும் ஏன் பார்க்கின்றான்? கங்கையின் வழியாக அர்ஜுன் தருமனையே காண்கின்றான்.
//கங்கையில் இமயம் நோக்கி மேலே செல்லுந்தோறும் கரை நீருக்கு மிக அண்மையானதாகவும்மரங்களடர்ந்ததாகவும் இருக்கையில் கீழ்நோக்கி வர வர விரிந்த கரைச்சதுப்பும் மணற்பரப்பும்கொண்டதாக ஆவதை அர்ஜுனன் கண்டான்//
தருமனின் சுயநலம், அறம் நாடும் உயர்ந்த குணம் இரண்டையும் அர்ஜுனன் காண்பதை கங்கையை படிமமாக்கி ஜெ காட்டுகின்றார். இந்த இடத்தில் தருமனை முழுவதும் அறிகின்றான் அர்ஜுனன். தருமன் உயரத்தில் தருமத்தின் கரையாகவும், கீழே மணல்பரப்பாகவும் இருக்கிறான்.
//“நான் இரண்டு நிலைகளில் உறுதியாக இருக்கிறேன். ஒன்று என் உடன்பிறந்தார். இன்னொன்று அறம்.இரண்டுமே என் தந்தை எனக்குக் காட்டியவை. என் உடன்பிறந்தாரில் எவர் இறந்தாலும் நான்உயிர்தரிக்கமாட்டேன். அறம் பிழைத்த எதை நாம் செய்ய நேர்ந்தாலும் வாழமாட்டேன்” என்றான்//
தருமன் காட்டும் அறம்
எது அறம்? காலம் காலமாக கேட்கப்படும் கேள்விதான். ஒவ்வொரு முறைக்கேட்கப்படும்போதும் அறம் என்னவென்று சொல்லப்படுகின்றது. சொல்லப்பட்டது மட்டும்தான் அறமா என்றால்? அறம் சொல்லப்படாமலும் இருக்கிறது என்பது தெரிகிறது.
அறம் என்பது ஒன்றுதான் அது பார்க்கும்தோறும் வேறுவேறாக மாறிக்கொண்டே இருக்கிறது மாற்றிச்சொல்லிப்பார்க்கலாம் அறம் என்பது ஒன்றுதான் அது பார்க்கும்தோறும் வேறுவேறு உருவம் காட்டுகின்றது.
வள்ளுவரே அறம் என்பதை ஒரு தனி அதிகாரம் வைத்து சொல்லியும் தீராமல் இடம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கிறார். மனம் மாசு இல்லாதது அறம் என்கிறார். அறம் மறத்தல் கேடு என்கிறார். இன்பம் அறத்தால் வருகிறது என்கிறார். குறிப்பாக அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் தவிர்த்தல் அறம் என்கிறார். வாழும்போது மட்டும் இல்லை சாகும்போதும் அறம்தான் துணை என்கிறார். பிறவி வழியை அடைக்கும் கல் என்கிறார். முயற்சி செய்து செய்யவேண்டியது அறம் என்கிறார். முயற்சி செய்து செய்யாமல் இருக்கவேண்டியது பழி என்கிறார். பழி இல்லாத எல்லாம் அறம் என்றும் சொல்லாமல் சொல்கிறார். அன்பு இல்லாத உயிருக்கு அறம் கூற்று என்று சொல்வதின் மூலம் அறத்தின் வேறு ஒரு முகத்தையும் காட்டுகின்றார். அறம் ஒரு கடல்…போய்கொண்டு இருக்கும்.
ஓளவையார் அறம் செய்ய விரும்பு என்கிறார், அதற்கு கீழே உள்ள அனைத்தையும் விரும்பு அதே அறமாகிவிடும் என்றும் காட்டுகின்றார்.
ஆறுவது சினம்.
இயல்வது கரவேல்…
ஈவது விலக்கேல்
கடல்போல.. வானம்போல.. விரிந்துவிரிந்து போய்கொண்டே இருக்கும் அறத்தை தருமன் பார்வையில் காட்ட வந்த ஜெ விடிவெள்ளியை படிமாக பயன்படுத்துவதும், அதன் வடிவங்கள் மாறிமாறி வேறுவேறாக கண்’டு ரசிக்கப்படுவதும். விடிவெள்ளியைக்காணாதபோது தருமன் கண்ணீர்விடுவதும். பாண்டு அவனுக்கு காட்டிக்கொடுப்பதும் இதன் வழியாக அறத்தின் பலவண்ணமும், அறம் ஒரு மனிதனை எப்படி கவர்கின்றது என்பதும் , அறம் வழிவழியாக காட்டப்படுகின்றது என்பதும். அறம் எங்கோ இருந்தாலும் வாழ்க்கையின் ஒளியும் வெளியும் அதுதான் என்பதும் எத்தனை நேர்த்தியாக வடிக்கப்படுகின்றது.
//விடியற்காலையில் ஏரிக்கரைக்குக் கொண்டுசென்று சுட்டிக்காட்டுவார். ஏன் அது கீழேவிழாமலிருக்கிறது என்று கேட்பேன். அதற்குச் சிறகுகள் இருக்கின்றன என்பார். அது ஒரு ஒளிவிடும்செவ்வைரம் என்று ஒருமுறை சொன்னார். எரிந்துகொண்டிருக்கும் ஒரு கனலுருளை என்றுஇன்னொருநாள் சொன்னார். ஒருமுறை அது விண்ணில் வாழும் தெய்வமொன்றின் விழி என்றுசொன்னார்.”
“அது சூரியனின் தூதன் என ஒருநாள் சொன்னார்” என்றான் தருமன்//
நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடித்தங்கம் என்பதுபோல் நாளைக்கு அறத்தோடு இருந்தால் போதும் என்றுநினைப்பதும். கொஞ்சம் அறம் பிழையானால் என்ன? என்று கேட்கும் உள்ளங்கள் மீது அறத்தை சாட்டையாக சொடுக்கு கின்றார் ஜெ. //ஒருமுறை பாதை பிழைத்த கதிரவன் பின்னர்பிரம்மத்தின் ஆணையின்றி வரவே முடியாது. மண்ணுலகின் அத்தனை உயிர்களும் ஒருவரோடு ஒருவர்முட்டிக்கொண்டு கதறுவார்கள். அதுவரை பேணிக்கொண்ட பகைமையை முற்றாக மறப்பார்கள்.அக்கணம்வரை தேடிய செல்வங்களை எல்லாம் அள்ளி வீசி சூரிய ஒளி மட்டுமே போதுமென்றுகூவுவார்கள். ஆனால் அந்தக்குரல்களைக் கேட்க விண்ணில் சூரியன் இருக்கமாட்டான்//
அறசாட்டையின் சொடுக்கில் அறிந்த குதிரைகள் பாதையில் பாய்கின்றன. அறியாத குதிரைகள் அடிப்பட்டு துடித்து விழுகின்றன.
தருமன் விழிகளின் வழியாக காணப்படும் பிம்பத்தைத்தாண்டி இன்று அகம் அறியும் ஒரு பிம்பமாக, கங்கையாக பெருகி, விடிவெள்ளியாக மின்னி ஒளிவிடுகின்றான். அவன் அவனை அடக்கிக்கொள்கின்றான். அதற்காக கங்கையைப் பார்க்கிறான் ஆனால் கங்கை அவன் பயனம் செய்யும் படகின் விலாவில் அறைந்துக்கொண்டுதான் இருக்கிறது. எண்ணங்களை அடக்கவும் எண்ணங்களால் அறைபடவும் தருமன்போன்றோர் படைக்கப்பட்டு உள்ளார்கள். அர்ஜுனன்போன்றவர்க்கு அதை ஒரு வேடிக்கை மட்டும்தான்.
//தன்னை அடக்கிக்கொள்ள அவன் சற்றுநேரம் கங்கைநீரை நோக்கினான். பாய் அவிழ்ந்த படகுகள்விரைவழிந்து மெதுவாக கரையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன//
//தருமன் சிறிதுநேரம் அமைதியாக இருந்தான். கங்கையின் நீர் படகின் விலாவைஅறைந்துகொண்டிருந்தது. அர்ஜுனன் அதை நோக்கி அமர்ந்திருந்தான்//
//சட்டென்று திரும்பி அர்ஜுனனை நோக்கி வெண்பற்கள் தெரிய புன்னகைசெய்து தருமன் சொன்னான்//
பின்னால் சுமையும், முன்னால் பள்ளமும் உள்ளபோது அறையப்பட்டு, நெஞ்சம் அழுத்தப்பட்டு தவித்து நிற்கும் நேரத்தில் வரும் புன்னகையாகப் பார்க்கின்றேன் தருமனை. இந்த தருமன் முழுக்க முழுக்க ஜெவின் அகம் அறிந்தவன்.
நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்