அன்புள்ள ஜெ சார்
நான் வண்ணக்கடல் நாவலை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அது தொடராக வந்தபோது வாசித்தேன். ஆனால் சரியான வாசிப்பு இல்லை என்று தோன்றியது. நூலாக வரும்போது மீண்டும் வாசிக்கலாமென்று நினைத்தேன். ஆனால் இன்னும் நூலே வந்துசேரவில்லை. ஆகவே மீண்டும் ப்ரிண்ட் எடுத்து வாசித்தேன். இதில் ஒரு வசதி என்னுடன் தியானப்பயிர்ச்சிக்கு வரும் நண்பரும் அதை வாசிப்பார். நாங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோம். இது நாவலை மேலும் தெளிவாக புரிந்துகொள்ள உதவுகிறது
வண்ணக்கடலில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் தத்துவ விவாதங்களை முறைப்படுத்திப்புரிந்துகொள்ளாமல் அதைச் சரிவர அறியமுடியாது என்ற எண்ணம் வந்தது. முதலில் தத்துவப்பகுதிகளை தனியாக வாசிக்கவேண்டும். கதையின் ஒருபகுதியாக அது மாறி மறைந்துவிடக்கூடாது
உதாரணமாக பீமனுக்கும் துர்யோதனனுக்கும் இடையே முகிழ்த்த நட்பைப்பற்றி சூதரான சைலஜர் சொல்கிறார். [அவர் இந்த விளக்கத்தை கொடுப்பதற்காகவே இந்த அமைப்பு நாவலுக்கு உள்ளது]
அடுப்பிலெரியும் நெருப்பில் அமர்ந்திருக்கும் பேருருளி இப்புடவி என்றறிந்தான். அது சமைத்துவெளித்தள்ளும் அன்னத்தை உண்ணும் அன்னமே உடலென்றறிந்தான். பசி என்பது அன்னத்துக்காக அன்னம் கொள்ளும் வேட்கை. சுவை என்பது அன்னத்தை அன்னம் கண்டுகொள்ளும் உவகை. நிறைவென்பது அன்னம் அன்னமாகும் தருணம். வளர்வதென்பது அன்னம் அன்னத்தில் படர்ந்தேறும் நீட்சி. இறப்பென்பது அன்னத்திடம் அன்னம் தோற்கும் கணம். அன்னமே பிரம்மம். அது வாழ்க[ அத்தியாயம் ஒன்பது ]
உபநிஷத் தத்துவத்திலேயே அன்னம் பிரம்ம: என்பதுதான் முதல் வரி. அதற்குப்பின்னர்தான் பிற எல்லாம். அங்கிருந்து நாவல் தொடங்குவதை உணர்ந்தால்தான் வரிசையாக எவையெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை வாசிக்கமுடியும்
அந்த அத்தியாயம் சாங்கியதரிசனத்தை சுருக்கமாகவும் முழுமையாகவும் சொல்கிறது.
தொட்டும் கவ்வியும் மோதியும் உண்டும் பிறந்தும் இறந்தும் உடல் அறிவதே சார்பற்ற முதலுண்மை
என்று சைலஜர் சொல்கிறார். பிரத்யக்ஷய்மே பிரம்ம ஸ்வரூபம் என்ற சாங்கிய தத்துவமாக அது விரிகிறது. அப்படியே சென்று பூதவழிபாட்டின் அன்னவணக்கத்தில் சென்று முடிகிறது
அன்னமயமானவனே. முதல்பேரியற்கையின் மைந்தனே, நீ வாழ்க! எங்களுக்கு வாழ்வையும் வலிமையையும் கொண்டு வந்தாய். எங்கள் அன்னத்துடன் அன்னமாக இணைவாயாக.
என்ற மந்திரத்துடன் முடிகிறது. அன்னமயமாகி வந்திருப்பவன் சாங்கியத்தின் புருஷதத்துவம்.
இதுதான் வண்ணக்கடலின் தொடக்கம். தத்துவார்த்தமான யாத்திரை இங்கிருந்து ஆரம்பிக்கிறது
சுவாமி