அன்பு ஜெயமோகன்,
”நிலவரைபடம்
என்பது நிலம் அன்று; நிலத்தின் நாமறிந்த ஒரு சாத்தியம் மட்டுந்தான் இல்லையா?” எனும்
தர்மரின் உரையாடலில் மகாபாரதத்தையும், உங்களையும் இணைத்து யோசிக்கத் துவங்கிவிட்டேன்.
மகாபாரதம் ஒரு நிலவரைபடமாகவும், நீங்கள் அந்நிலத்திற்கான பயணியாகவும் ஒரு
சித்திரம் எனக்குள் ஒளிர்ந்தது. பயணியின் கைபிடித்து நகரும் நான் சகபயணியாக
உணர்கிறேன்.
மகாபாரதம்
எனும் கடலின் முன்நின்றபடி துள்ளலாகக் குதித்துக்கொண்டிருக்கும் என்னைப்
போன்றோருக்கு வியாசனின் தேடல் பெருவியப்பைத் தந்தாலும் மனதின் சிக்கல்கள் ஒரே
வடிவில் நம்மைத் தொடர்ந்து வருவதாகவும் ஒரு வெளிச்சம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன்பு தொகுக்கப்பட்ட ஒரு காப்பியத்தின் கதைகளில் நவீன வாழ்க்கைக்கான கண்டடைதல்கள்
நிகழ்ந்தபடியே இருக்கும் ஆச்சர்யத்தை புதிதாய்க் கிளிஞ்சல் பொறுக்கும்
சிறுவனின் மனநிலையோடே எதிர்கொள்கிறேன். ஒரு மனிதமனதின் உளவியல் கடந்த
சாத்தியங்களைக் கொண்டிருக்கும் மாந்தர்களை அறிமுகப்படுத்துவதன் ஊடாக வியாசன்
நம்மைத் திகைக்கவைப்பதோடு, அறிவின் போதாமையை சுட்டியும் காட்டுகிறான்.
வியாசன்
முடிந்த அளவு தொகுத்த மகாபாரதமே இவ்வளவு பெரிதெனில், தொகுக்கப்படாத கதைகளையும்
உள்ளடக்கியதாக அக்காப்பியத்தை அணுகுவது திகைப்பின் உச்சியில் என்னை நிற்க
வைக்கிறது. கிடைத்தளவிலான மகாபாரதக்கதைகளைக் கொஞ்சம் நுணுக்கி அணுகும் ஒருவனுக்கு
அது எண்ணற்ற சாத்தியங்களின் திறப்பாக இருப்பதை உணர்ந்து கொள்வது மிக எளிது. அதை
நீங்கள் பல்லாண்டுகளிலான உங்கள் மகாபாரத வாசிப்பில் அனுபவித்ததாகவே நான்
கருதுகிறேன். அவ்வனுபவங்களின் உந்துதலாலேயே நீங்கள் எழுதவைக்கவும் படுகிறீர்கள். மகாபாரதம்
வெண்முரசாக உருகொண்ட / உருகொள்ளும் நாட்கள் நீங்கள் மட்டுமே அறிந்தவை. அவற்றினூடாக
உங்களோடு இணைந்து பயணிக்கும் எங்களின் பரவசம் நாங்கள் மட்டுமே அறிந்தது.
”நாம் அங்குசெல்லும்போது இந்த வரைபடம் அளிப்பதைவிட
ஏராளமான புதிய சாத்தியங்களை அறியமுடியும்” எனும் தர்மரின் கூற்றில் வெண்முரசு வழியாக நாங்கள் எதிர்கொண்டிருக்கும்
மகாபாரத வரைபடத்திற்கான புதிய சாத்தியங்களே புலப்பட்டன. அச்சாத்தியங்களால்
நிகழ்கணத்தின் புதிய மனிதர்களாகவே எங்களை உணர்கிறோம்; அவ்வுணர்வால் புறமும்,
அகமுமாய் நிறைந்து நெகிழ்கிறோம்.