Monday, October 13, 2014

விரிதோகை




அன்புள்ள திரு.ஜெ வணக்கம்

நேற்று நீலம்-1 திருப்பல்லாண்டு திருப்பி வாசிக்கவேண்டும் என்று தோன்றியது. படித்தேன். இப்போதுதான் முதல்முறையாகப்படித்ததுபோல் இருந்தது. அப்படி என்றால் இதுவரைப்படித்தது என்ன என்று எனக்கு தெரியவில்லை. அன்று படித்தவனாகிய நான்வேறா இன்று படிக்கும் நான்வேறா என்று ஆச்சர்யம் எழுந்தது. 

ஒவ்வொரு சொல்லும் வாக்கியமும் வேறாகி நிற்கின்றது. எனக்கு பிடித்த நூலில் என்றும் நீலம் இருக்கும் என்று அதைப்படிக்கும்போது உணர்ந்து இருந்தேன். நீலத்தை படிக்க இறைவன் செய்த அருளுக்கு நன்றி சொல்லி அதை செய்த உங்களுக்கும் நன்றி சொல்கின்றேன். 

இந்த கடிதம் எழுத வந்தநோக்கம் கீழ்கண்ட வாக்கியம்

//‘ஞாலப்பெருவிசையே. ஞானப்பெருவெளியே. யோகப்பெருநிலையே இங்கெழுந்தருளாயே’ என்றது நீலமாமயில்கூட்டம். விழிதிறந்த விரிதோகைகள் என்றோ கண்ட பெருங்கணம் ஒன்றில் அவ்வண்ணமே திகைத்து விழித்துச் சமைந்து தோகைத் தலைமுறைகளில் யுகயுகமென வாழ்ந்து காத்திருந்தன//

ஞானபண்டிதனாகிய முருகனின் வாகனமாகிய மயில் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் முருகனையே கூவி அழைப்பதாக உள்ளது இந்த பக்தியை கடந்து, இது பக்தி என்று விலகி ஓடி அடுத்த வரியில் குளிர்ந்து உறைந்து நின்றேன். மயில் தோகை விரித்து நிற்கும் ஒரு காட்சியை கவிதையாக்கி கட்டிபோட்டுவிட்டீர். ஒரு கணம் கண்ட காட்சியல் மயில் யுகம் யுகமாய் வாழ்ந்து காத்திருக்கின்றது என்ற குறியீட்டில், படிமத்தில் திகைக்கின்றேன். 

குருந்த மரத்தடியில் இறைவனைக்கண்ட மாணிக்கவாசகர் அந்த ஒரு காட்சியைதான் ஆயுள்முடியும்வரை இழுத்து செல்கின்றார். அந்த ஒரு கணம் படுத்தும்பாடு மயிலுக்குள் கண்களாகி மூடாமல் கிடக்கின்றது என்பதை அறியும் போது யுகங்கள் ஒரு துளிகணம்போல உறைந்துப்போவதை அறிந்தேன்.

இன்று காலை இதனுடன் இணைத்து உள்ள மயில் படத்தை பார்க்க கிடைத்தது உங்கள் வரியும் இந்த படமும் எப்படி ஒரு பொருத்தம் பாருங்கள். உங்கள் சொல் இயற்கையோடு இணையும் ஒரு தருணத்தை கண்டு அடைந்தேன். உங்கள் எழுத்து இயற்கையின் உயிராகும் தருணத்தை உணர்ந்தேன் என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  

எழுத்தும் காட்சியும் ஒன்றாக கிடைத்த இந்த கணத்தில் விழிதிறந்த விரிதோகையாகிறேன். 

நன்றி
அன்புடன்
ராமராஜன்மாணிக்கவேல்