Saturday, October 25, 2014

செர்ன் சிவம்
அன்புள்ள ஜெ,


பிரயாகையின் மூன்று மற்றும் நான்காவது அத்தியாயங்களில் நாம் காலத்தை அறிந்த அறிவியலை, நமது பிரபஞ்ச இயக்க அறிவைப் பெற்ற விதங்களைப் பற்றி மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள். 

மாறிக்கொண்டேயிருக்கும் ஒன்றை மாற்றமில்லாத ஒன்றால் தான் நிறுவ முடியும் என்பது மிகப் பெரிய தரிசனம். பிரஸ்னர் துருவனைக் கண்டது தான் நமது வானியலின் துவக்கம் என்றிருக்கிறீர்கள். உண்மையில் திசையும், காலமும் இல்லாமல் எந்த அறிவியலும் இல்லை. அப்படியென்றால் நம்முடைய அனைத்து துறைகளும் துருவனிடமிருந்து துவங்கி இருக்க வேண்டும். மிக விரிவாகவே இதைச் சொல்லி இருக்கிறீர்கள்.

பால்வெளி மண்டலத்தைப் பற்றிய ஆகாய கங்கையின் விவரணம் கவித்துவம். வானெங்கும் உருகியோடும் அவ்வெண்ணொளியினை ஆகாய கங்கை என வருணித்த அந்த மாமனதை எண்ணி புல்லரித்து போகிறேன். எப்பேற்பட்ட கற்பனை. எவ்வளவு கூர் நோக்கும், கற்பனை விரிவும் இருந்தால், துருவனை மையமாகக் கொண்டு மற்ற நட்சத்திரங்கள் அனைத்தும் நகர்வதையும், அவைகளுக்கிடையே ஊடுருவியிருக்கும் ஒளியையும் வெறும் சாதாரணக் கண்களால் கண்டு அதை பால்வெளி என்றும் ஆகாய கங்கை என்றும் சொல்லி இருக்க முடியும். இன்று பால்வெளி மண்டலம் என்று நாம் காணும் புகைப்படங்கள் யாவும் சில மணி நேரங்களுக்கு ஒளியைப் பெறும் வகையில் ஆடியை வெளிப்படுத்தி எடுக்கப்பட்டவை. அதானாலேயே அவற்றில் ஒரு வெண்ணிற ஒளி பரவியிருக்கும். வெறும் கண்ணால் இவ்வொளியை உணர்வது என்பது மிகக் கடினமானது. அதனாலேயே பெரும்பாலும் விண்மீன்களுக்கு நடுவே நமக்கு இருள் மட்டுமே புலப்படுகிறது. ஆனால் பால்வெளி என்ற ஒன்றை முதன் முதலாக உணர்ந்த மனதின் கற்பனா வீச்சு எவ்வளவு பெரிது. அக்கற்பனையின் ஒரு துளி என்னிலும் உள்ளது என்பதும், அப்பாரம்பரியத்தின் ஓர் நீட்சியாக நானும் உள்ளேன் என்பதும் அவ்வளவு பெருமைக்குரிய ஒன்று.

நடராஜரின் உடுக்கொலி கேட்டதாக சூரியதேவரைச் சொன்ன இடத்தில் உண்மையிலேயே கண்ணீர் வந்து விட்டது. துருவனின் இடத்தில் காலின் பெருவிரல் நுனி இருக்கும் படியான அந்த விஸ்வரூபத்தை எப்படி கற்பனை செய்ய முடிந்தது? இப்புடவி என்பதை ஓயாத ஓர் நடனமாக கற்பனை செய்ய எவ்வாறு முடிந்தது? அந்த மனதுக்கு நாம் என்ன மாதிரியான மரியாதையைத் தருகிறோம்? நினைக்க நினைக்க வெட்கமாக இருக்கிறது. 

ஆனால் நாம் தர மறந்த மரியாதையை ஓர் ஐரோப்பிய அறிவியல் நிறுவனம் தந்திருக்கிறது. CERN பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் துகள் என்றழைக்கப்படும் 'Higgs Bosan' துகளைக் கண்டறிய சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் ஓர் அதிவேக துகள் முடுக்கி ஆய்வகம். அந்த ஆய்வகத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் 40 ம் எண் கட்டடத்துக்கு அருகே 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலை அமைக்கப் பட்டுள்ளது. பிரபஞ்சத்தை துகள்களின் நடனமாக கருதிய அந்த மானுட மூதாதையருக்கு மதிப்பளிக்கும் வகையில் அது அமைக்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தை இணைத்துள்ளேன். கீழே அது தொடர்பான சுட்டி.


மிக்க நன்றி ஜெ, மீண்டும் மீண்டும் நமது பாரம்பரியத்தை, அதன் சிறப்பை விளக்கிக் கொண்டேயிருப்பதற்கு.

மற்றுமொன்று, இன்றைய அத்தியாயத்தின் துவக்கத்தில் வரும் அந்தியும், அதிகாலையும் நான் நேரில் அனுபவித்தவை. அதிலும் அந்த தேன் வண்ண வானம். மிகச் சிறப்பான உவமானம். பனித்தரையில் ஒளியும், வானில் இருளும் அந்த பனிப்பிரதேச அதிகாலைக்கே உரியவை. மேலும் குளிரைப் பற்றி நீங்கள் எழுதியுள்ள வார்த்தைகள், ஒளியிலும், ஓடும் நீரிலும் குளிரே நிறைந்து மனமும் உடலிலும் அதுவே நிறைவது ஒருவித அனுபவம் தான். என்ன ஓரிரு நொடிகளுக்கு மேல் தாங்க முடியாத அனுபவம்...

அன்புடன்,
அருணாச்சலம், நெதர்லாந்து.