Tuesday, October 14, 2014

பிரயாகை என்னும் பெயர்





அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசில் வரும் ஒவ்வொரு பகுதிக்கும் அழகான பெயரிட்டீர்கள். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் - இந்த ஒவ்வொரு சொல்லையும் பலமுறை எனக்குள் சொல்லி சிந்தித்து வந்துள்ளேன். கண்ணனின் கதைக்கு நீலம் என்ற பெயர் மிக அழகு. அந்த சொல்லுக்கே புது அர்த்தம் தந்தீர்கள். என்னவோ 'பிரயாகை'யில் அந்த அழகு சற்று குறைந்துள்ளதுபோல் தோன்றுகிறது. அது தமிழ்ச்சொல் இல்லை என்பதாலா என்றும் தெரியவில்லை. நீங்கள் அதற்களித்த காரணம் படித்தேன். இருப்பினும்... இதுபற்றி நீங்கள் யோசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள். வேறு யாரேனும் இதையே சொன்னார்களா?


சேவியர்



அன்புள்ள சேவியர்

பொதுவாக குழந்தைகளுக்குப் பெயரிடும்போது அப்பெயர் பொருத்தமில்லாமல் இருக்கும். குழந்தை வளரவளர அப்பெயரே குழந்தையாக இருக்கும். நாவல்களும் அப்படித்தான்

நாவல்களுக்கு ‘யோசித்து’ பெயர் இட முடியாது. ஏதோ ஒருவகையில் நம் அகத்தை திறக்கும் பெயரை போடுகிறோம். அந்தப்பெயரில் ஒரு சாவி இருக்கிறது. அதுவே எழுதச்செய்கிறது

பிரயாகையில் என்ன இருக்கிறது என இன்றுதான் தெரிந்தது. பதினைந்துநாள் அலைமோதி சலித்து சினந்து கசந்து கைவிட்டு மீண்டுவந்து ஒருவழியாக இன்றுதான் அதன் முதல் அத்தியாயத்தை எழுதினேன்-சற்றுமுன்பு 

ஜெ