Tuesday, October 28, 2014

பிரயாகை- வியூகங்கள்


[ஹளபீடில் உள்ள சக்கரவியூகத்தின் சிற்பத் தோற்றம்]

ஜெ சார்

இன்று வந்த பிரயாகையின் போர்க்களக் காட்சி பிரமிப்பூட்டியது விஷுவலாக போரை நேரில் பார்ப்பதுபோல இருந்தது. வழக்கமாக டிவி சேனல்களில் இருபடைகளும் எதிர் எதிராக நிற்பதுபோலத்தான் காட்டுவார்கள். இந்த வியூக அமைப்பு திகைப்பை உருவாக்கியது. நண்ப்டும் கழுகும் போர் புரிவது அற்புதம்.

நண்டாக போகும்போது உருவாகும் சாதக அம்சங்களை யோசித்துக்கொண்டே இருந்தேன். நண்டின் கால்கள் பெரியவை. அவை ரதங்களின் வரிசை. அந்தக்கால்களால் அது போய் தாக்குகிறது. தன் உடலை எதிரி தாக்காமலும் பார்த்துக்கொள்கிறது. கால்களால் அது கவ்வி கொண்டுவருவதை உடலாக உள்ள காலாள்படை தின்கிறது

இந்தவியூக அமைப்பு தான் மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?

ராமச்சந்திரன்




அன்புள்ள ராமச்சந்திரன்

வியூகங்கள் ஒற்றை வார்த்தைகளாக உள்ளன. அவற்றை கற்பனையில் விரிவாக்கியிருக்கிறேன். பரவலாக அறியப்பட்ட வியூகங்கள் சக்கரவியூகமும் பத்மவியூகமும்தான்

அன்றையபடைகளைப்பொறுத்தவரை பெரும் எண்ணிக்கையில் மக்கள் செல்வதுதான் படை. எண்ணிக்கைதான் முக்கியமான ஆற்றல். வீரர்கள் ஒருவரோடொருவர் முட்டிக்கொள்ளாமல் ஒரே உடலாகச் சென்றால்தான் போர் சாத்தியம். வியூகம் இல்லாவிட்டால் அவர்கள் வெறும் கும்பல்தான்

அத்துடன் வரிசையாகச் சென்றால் முன்னால்செல்பவர்கள் மட்டும்தான் போர் புரிவார்கள். மற்றவர்கள் பின்னால் சும்மா நிற்பார்கள். ப்ழையகாலப்படைகள் மொத்தப்படையுமே ஒரே சமயம் போர்புரியும்படி அமைந்திருக்கும். அதற்கும் வியூகங்கள்தேவை

ஒவ்வொரு வியூகமும் பறவைகள் மிருகங்கள் இயற்கை வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும். அவற்றுக்கான இயல்புகள் போரில் உதவும். அதாவது பருந்துவியூகம் வேகமாகச் சென்று இறங்கும் என்றால் யானைவியூகம் மெல்ல வலிமையாக முன்னால் செல்லும்.

வியூகங்களை உடைப்பதுதான் போரே.  வியூகம் உடைந்தால் படை வெறும் கும்பலாக ஆகி தோற்றுவிடும். வியூகங்களை அமைப்பதும் உடைப்பதும்தான் அன்றைய போர்க்கலையின் முக்கியமான பாடங்கள்

பத்மவியூகத்தை உடைப்பதைப்பற்றி கிருஷ்ணன் அபிமன்யுவுக்குச் சொல்லாமல் விட்டுவிட்டார் என்பதை கேட்டிருப்பீர்கள்

ஜெ